கல்முனையில் கேரளக் கஞ்சாவுடன் பிரபல வியாபாரிகள் இருவர் கைது!


கேரளக் கஞ்சாவுடன் கல்முனையில் பிரபல ஆடை வியாபாரி ஒருவரையும், கல்முனையில் கடிகாரம் திருத்து வேலை செய்யும் ஒருவரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அத்தோடு கேரளக் கஞ்சாவையும் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரவு வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கல்முனைக்குடி 14 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், மருதமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சந்தேக நபரொருவருமே கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 12 கிலோகிராம் 230 கிராம் கேரளக் கஞ்சா  மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.