கவிதை - சாம்பிரதீபன்!!
கோடு கிழிக்காத
கோட்பாடுகளை வைத்திருக்கும்
உங்களின் ஒருத்தியால்தான்
என் சிந்தனையை
கர்ப்பமாக்க முடியும்!
யார் நீங்கள்?
பாகனின் கையில் மகுடியும்
பாம்பின் காதில் அங்குசமும்
துளைத்தபடியிருக்கிறீர்கள்.
யார் நீங்கள்?
போர்க்களம் மீது கருணையும்
பெரும் காதலின் மீது வன்முறையும்
நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள்.
யார் நீங்கள்
மான் பிடிக்க தூண்டில்களையும்
மீன் பிடிக்க கண்ணிகளையும்
தேடியபடியிருக்கிறீர்கள்.
பிணங்களை எரிக்கும் மயானத்தில்
யாரோ ஒருத்தியின்
மனம் எரிகிறதா என
வில்லுப்பாட்டுப் பாடி வருகிறீர்கள்.
இனங்களின் மீது மலம் கழித்த ஒருவனை
ஜனங்களின் தலைமகன் என்றும்
கனத்த மழைகால படகோட்டி ஒருவனை
பெட்டகம் காத்த நோவா என்றும்
பட்டியல் இடுகிறீர்கள்.
தோல்வியுற்ற புரட்சியை
கலகம் என்கிறீர்கள்
வெற்றிபெற்ற கலகத்தை
புரட்சி என்கிறீர்கள்
விம்மலை பம்மாத்து என்கிறீர்கள்
பம்மாத்தை பகுத்தறிவு என்கிறீர்கள்.
தூசணத்தை
இலக்கியம் என்றும்
அந்தாதியை
அருவருப்பென்றும்
சித்தார்ந்தம் எழுதித் திரிகிறீர்கள்.
மயிர் பிடுங்க முடியவில்லை
மலை பிரட்டி வந்ததாய்
மல்லாக்க கிடந்து
வானத்துக்குக் காறி உமிழ்கிறீர்கள்.
நான்
கோட்பாடுகளின் எல்லைக்கோடுகளை
தாண்டத் தெரிந்தவன்.
கோடு கிழிக்காத
கோட்பாடுகளை வைத்திருக்கும்
உங்களின் ஒருத்தியால்தான்
என் சிந்தனையை
கர்ப்பமாக்க முடியும் என்பதை
நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
இதோ ஆணையிடுகிறேன்!
உங்கள் தேவ தூசணங்களின் மேல்
இன்று முதல் இடி விழட்டும்!
-சாம் பிரதீபன்-
#சாம்பிரதீபன் #sampratheepan
கருத்துகள் இல்லை