பீரங்கிகளுக்கு அப்பால்....!!
பீரங்கிகளுக்கு அப்பால் நிறையச் சங்கதிகள் இருக்கின்றன எம்மிடம்!
பல அந்நியப் படையெடுப்புகளையும், நாடு பிடிக்க நடந்த மிகப் பெரிய போர்களையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சந்தித்த பிரதேசங்களில்
நோர்வேயின் FREDRIKSTAD பழைய நகரப் பகுதியும் ஒன்றாகும். பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து தமது பிரதேசத்தை காக்க பல அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் சந்தித்திருக்கிறது, இப்போதும் கம்பீரமாகவும் இயற்கை அழகு குன்றாமலும் இருக்கும் இப்பகுதி.
எந்தெந்த எல்லைகளில் தமக்கான காப்பரண்களை அமைத்து பீரங்கிகளுடன் நின்று போரிட்டார்களோ அந்தந்த பகுதிகளில் எல்லாம் அதன் நினைவாக சான்றுகளை அமைத்திருக்கிறார்கள் நோர்வே மக்கள்.
ஆனால் எந்த இடத்திலும், இந்த போராட்டம் தவறானது என்றோ, அரசியல் சாணக்கியம் அற்ற நகர்வு என்றோ, உலக அரசியலை மதிப்பிடத் தவறி உயிர்களைப் பணயம் வைத்த அநாவசியப் போர் என்றோ, ஜனநாயக புரிதலும் அரசியல் தீர்க்கதரிசனமும் அற்ற போராட்டம் என்றோ அங்கு எவரும் விமர்சித்திருந்ததாக எந்த தகவலும் இல்லை. தம் சொந்த மக்களில் ஒரு பகுதியினராலேனும் எள்ளி நகையாடப்பட்டதாக எந்தவித வரலாற்று சான்றாதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை.
முன்னர் மிகக் கொடூரப் போர்களையும் மிகஉக்கிர அழிவுகளையும் ஏற்படுத்திய பின்னர் தமக்கென ஒரு நிரந்தர இருப்பினையும், உரிமை மிக்க உறுதியான ஒரு தனித்த ஆட்சியையும் நிலைப்படுத்திக் கொண்ட பின்னர்தான் இந்த நாடுகள் இன்று சமாதான காதலர்களாகவும் மனிதாபிமான பிதாமகர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பொய்யில்லை என நினைக்கிறேன்.
அமைதி பேசுவதற்கும், ஜனநாயக பாயில் அமர்ந்திருந்து ஏன் தோற்றோம்? எப்படி வென்றோம்? என ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கும், முதலில் ஒரு தேசத்தின் இருப்பு எமக்காய் உறுதிசெய்யப்பட வேண்டும். எமது எல்லைகளில் காண்பியம் செய்வதற்கு பீரங்கிகளுக்கு அப்பால் நிறையச் சங்கதிகள் இருக்கின்றன எம்மிடம் தோழர்களே!
- சாம் பிரதீபன் -
கருத்துகள் இல்லை