முல்லைதீவு மாவட்ட பெண் சாதனையாளர்களுக்கு அரியாத்தை விருது வழங்கி கௌரவிப்பு!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் பெண் சாதனையாளர்களுக்கு அரியாத்தை விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977ஆம் ஆண்டில், மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையின் சகல அங்கத்துவ நாடுகளினால் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இம்முறை சர்வதேச மகளிர் தினமானது ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. குறித்த தினத்திற்கு இணைவாக ‘நிலையான எதிர்காலத்தை அமைக்க - வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’ என்பதை பிரதான கருப்பொருளாக கொண்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மார்ச் 02 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 08ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரத்தை பிரகடனப்படுத்தி சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்வுகள் உள்ளடங்கலாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்காக நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகளால் சபையின் நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய வளர்ச்சி இலக்குகளில் ஒர் இலக்கான பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும் என்ற இலக்கினை முல்லைத்தீவு மாவட்டத்தில் வினைத்திறனுடன் அடைந்து கொள்வதற்கான பல்வேறு செயற்பாடுகளில் ஒர் செயற்பாடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் இவ்வாண்டு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளரை விருது வழங்கிக் கௌரவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வன்னி மண்ணின் வரலாறு இங்கு கோலாச்சிய பண்டாரவன்னியனின் வீர வாலாற்றின் மூலம் உலகத்திற்கு தெரியவந்தது. இந்த மண்ணுக்கும் சொந்தமான பெண்கள் உலகத்தின் ஏனைய சரித்திர நாயகிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களல்லர் என்பதை “ஆனைகட்டிய அரியாத்தை” என்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனைக் கிராமத்தின் வீரப்பெண்மணி உணர்த்தியிருக்கிறார்.
அத்தய வீரப்பெண்மணியின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களுக்கு அரியாத்தை விருது இவ்வாண்டு முதற்தடவையாக வழங்கப்படவுள்ளது..
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்குவதற்கு தெரிவாகியுள்ளவர்களது விபரம் வருமாறு.
1.பெண் வாழ்நாள் சாதனையாளர் விருது (Women Lifetime Achievement Award)
70 வயது கடந்தும் தடகளப் போட்டிகளில் சர்வதேச ரீதியில் விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த இலங்கையில் சாதனை மங்கை திருமதி.ஸ்ரீசெயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் பெண் வாழ்நாள் சாதனையாருக்கான
“அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது..
2.சிறந்த பெண் தலைமைத்துவ விருது (Outstanding Women Leadership Award)
தனது கல்வியறிவாலும் முயற்சியாலும் வளர்சி பெற்று கல்வி நிர்வாக சேவையில் சிறந்த நிர்வாகியாக இனங்காணப்பட்டு இலங்கையின் முதல் தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்ற
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான
“அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது..
3.ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது (Woman Entrepreneur of the Year Award )
தனது 15 வயதில் இருந்து தையல் தொழிலை கற்று தையல்சார் பயிற்சிகள் மற்றும் ஆடை வடிவமைப்பு போன்றவற்றில் சிறந்த ஓர் முன் மாதிரியான தொழில்முனைபவராக வளர்சியடைந்துள்ளதுடன் சமூக சேவைகளிலும் ஈடுபடும் மாற்றுத்திறனாளியான முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் உயிலங்குளத்தைச் சேர்ந்த திருமதி.சத்தியானந்தம் சோபனா அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது..
4.ஆண்டின் சிறந்த பெண் சமூக சேவகர் விருது (Woman Social Worker of the Year Award )
பால்நிலை மற்றும் சிறுவர்கள், பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை இனங்கண்டு தீர்த்து வைத்தலில் சிறப்பாக ஈடுபடுவதுடன்.
மாந்தை கிழக்கு மத்தியஸ்தர் சபையில் பெண் தவிசாளராக. சமாதான நீதவானாக, குடிசார் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக உறுப்பினராக. சிகரம் கல்வி நிலையத்தின் பதிவாளராக என . பொது அமைப்புகளில் சிறப்புற செயற்படும் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம், நட்டாங்கண்டலைச், சேர்ந்த திருமதி.விக்னேஸ்வரன் ஜெகதாம்பிகை அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் சமூக சேவகருக்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது..
5.ஆண்டின் சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவர் விருது (Woman Changemaker of the Year Award)
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை நிரூபிக்கும் வகையிலும்
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதனையும் தனது வெல்டிங் தொழில் முயற்சியின் மூலம் நிரூபித்துள்ள வெலிஓயா, ஹெலம்பவெவ ஜனகபுரவைச் சேர்ந்த திருமதி.வலிசிகே கொண்டச்சரிலாகே ஷிராணி விமலசேன அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவருக்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது..
6.ஆண்டின் சிறந்த இளம் பெண் தொழில்முனைவோர் விருது (Young Woman Entrepreneur of the Year Award)
பல்கலைகழக கல்வியின் அறிமுகத்துடன் தொழிலுக்கு ஏற்ற வகையில் களிமண் ஆபரண முறையினை (Terracotta Jewellery) சுயமாக தேடி கற்றுக்கொண்டு இலங்கையில் களிமண் ஆபரணங்களின் விற்பனையை விரிவுபடுத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தலில் ஈடுபடுவதுடன் பெண்களுக்கு தொழில் வாய்ப்பளித்தலில் முன்னுரிமையளிக்கும் ஒட்டுசுட்டான் முத்துவிநாயகபுரத்தை சேர்ந்த
திருமதி.கிருசாந் மிதுசா அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த இளம் பெண் தொழில் முனைவோருக்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது..
இவர்களிற்கான மேற்படி விருதுகள் இம்மாத இறுதியில் மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை