கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு!
தமிழ்த்தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும்
அதேபோன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை