பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு!


இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் குளோபோகன் 2022 தரவுகளின்படி, சர்வதேச அளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ கூறினார்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், 2040 ஆம் ஆண்டு அளவில் சுமார் 3.5 மில்லியன் நோயாளிகள் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் வசந்த விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

எந்தவித காரணமும் இன்றி இரத்தத்துடன் மலம் வெளியேறுவது. இரத்தம் பிரகாசமான சிவப்பு அல்லது அடர் சிவப்பாக இருக்கலாம்.

அடிக்கடி கழிவறைக்குச் செல்வது மற்றும் மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ வெளியேறுவது என குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்.

வயிறு நிரம்பியிருக்கும் போது அடிவயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர்தல். உடல் எடை குறைதல். மலம் கழித்த பிறகும் முழுமையாக மலம் கழிக்காத உணர்வு ஏற்படுதல். வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது மயக்கத்தை உணர்தல்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அவை குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், மூன்று வாரங்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.

ஏனென்றால் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம்.

சில நேரங்களில் பெருங்குடல் புற்றுக்கட்டிகள் குடல் வழியாக கழிவுகள் வெளியேறுவதைத் தடுத்துவிடும். இதன் காரணமாக தீவிர வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்படும். இது மாதிரியான சூழல்களில் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.