50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு!


இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கபரகலை பகுதியில் நேற்று 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக அம்பிகா சாமுவேல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


கடந்த அரசாங்கங்கள் முன்னெடுக்காத அந்த வேலைத் திட்டத்தை குறுகிய காலத்தில் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (14) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


”பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மீதான விவாதத்தில் சபையில் உரையாற்றிய மலையக பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பில் பேசினர். மலையக மக்கள் வாழும் குடியிருப்புகள் மிகவும் பழைமை வாய்ந்ததாக, சூரிய ஒளி கூட புக முடியாத காற்றோட்டம் இல்லாத அறைகளாக காணப்படுகின்றன. ஒரே வீட்டில் பல உப குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த குடும்பங்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அத்தகைய வீடே காரணமாக அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற நிலை, பல்வேறு துஷ்பிரயோகங்கள், தனித்துவம் இல்லாமல் போதல், பிள்ளைகளின் கல்விக்கும் இடையூறாக அந்த சூழல் அமைகின்றது.


உண்மையில் இந்திய அரசாங்கத்திற்கு நாம் நன்றி கூற வேண்டும். அந்த அரசாங்கம் தோட்டப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டிலிருந்து சம்பந்தப்பட்ட அமைச்சை ஒரு சாராரே தம் வசம் வைத்திருந்தனர். அவ்வாறு கிடைக்கப் பெற்ற நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் நூலகத்திலிருந்து எடுத்த அறிக்கை மூலம் நான் வாசித்தறிந்தேன். அதன் மூலம் எதிர்பார்த்த திட்டங்கள் தடைப்பட்டதும் தாமதமாகியதுமே காணப்படுகிறது.


பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தை எடுத்துக் கொண்டால் 68 வீடமைப்பு செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டி ருக்கவில்லை. ஒப்பந்தக்காரர்களுக்கு ரூ. 846 மில்லியன், மேற்பார்வை செய்வதற்கு ரூ. 51 மில்லியன் மேற்படி நிதியத்திற்கு சம்பந்தப்பட்ட அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தது. அதுபோன்ற பல தகவல்களை குறிப்பிட முடியும். அந்தவகையில் மேற்படி வீடுகள் அரைகுறை வீடுகளாகவே மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வீதிகள் இன்றி நீர் வசதியின்றி பல்வேறு குறைபாடுகளுடனேயே நீயே இந்த திட்டங்கள் காணப்படுகின்றன.


இம்முறை நாம் சகல வசதிகளுடன் 10 பேச்சர்ஸ் காணிகளைக் கொண்ட வீடுகளையே வழங்கவுள்ளோம். அத்துடன் காணி உரிமைப் பத்திரத்துடனான வீட்டுத் திட்டத்தை நாம் வழங்கவுள்ளோம்.


பெரும்பாலான பகுதிகளில் அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது உறவினர்களுக்கும் கட்சியினருக்குமே வீடுகளை கடந்த காலங்களில் வழங்கியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ள வுள்ள மக்களுக்காக 6 ஆயிரம் வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. அந்தவகையில் நாளை (இன்று) காலை கபரகலை பகுதியில் அவ்வாறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் தேயிலைத் தொழிற்சாலையில் வாழ்ந்து வந்த மக்களுக்கே இந்த வீடு வழங்கப்படவுள்ளது.


கடந்த அரசாங்கங்கள் முன்னெடுக்காத வேலைத் திட்டத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.