மணப்பொருத்தம் - சுரேஷ் தர்மா!!

 


கிளிநொச்சி நோக்கிப் பயணித்த அந்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது . பேருந்தின் இருமருங்கிலும் அணிவகுத்திருந்த மரங்கள் முன்னும் பின்னுமாக ஓடுவது போல இருந்தன. சாளரம் வழியாகத் தெரிந்த தூரத்து வயல் வெளிகள் மதிய நேரத்து வெயிலில் மினுமினுப்போடு காட்சியளித்தன.  கானல் நீரெனத் தெரிந்த காட்சியில் ஒரு வித அழகு மிளிர்ந்தது. தூரத்தில் தெரிந்த காட்சியில் கண்கள் ரசனை கொள்ளவில்லை என்றாலும் காட்சி கண்ணுக்குத் தப்பவில்லை.

அங்கங்கே நின்றபடி  பச்சை இலைகளையும் காய்ந்து போன சருகுகளையும் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களும் காளைகளும் தமது பணியில் தீவிரமாக நின்றன. வயலோரத்தில் இருந்த பாலை மரத்தின் கீழே அமர்ந்திருந்த முதியவரின் உருவம் ஒரு புள்ளியைப் போல தோன்றியது. சற்றுத் தள்ளி இருவர் வரம்புகளுக்கு மண் அணைக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். இவை எல்லாவற்றையும் கண்வழியே காட்சிகளாகப் பார்த்தபடி பயணப்பட்டுக்கொண்டிருந்த  என்னுடைய  கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.

"அருகில் இருக்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்" என்ற எண்ணத்தில் கைகளால் கண்களைத் துடைத்துக்கொண்டாலும் கண்ணீரோ கட்டுக்கடங்காமல் வழிந்து கொண்டிருந்தது. மனதில் குவிந்து கிடந்த பாரம் தழும்பித்தழும்பி தண்ணீரையே வெளியேற்றியது.
பயணச்சிட்டை தருவதற்காக வந்த நடத்துனர் என்னைச் சற்று ஆழ்ந்து பார்த்த போது கொஞ்சம் வெட்கமாக இருந்தது. நிமிர்ந்து பார்க்காமலே கையிலிருந்த ஐநூறு ரூபாய் தாளை நீட்டிய போது சற்று பரிதாபத்துடனே பார்த்தபடி அதை வாங்கி கொண்டு மீதிப்பணத்தை தந்து விட்டுச் சென்றான் எனது மகன் போன்ற வயதில் இருந்த அந்த இளைஞன்.

குனிந்து பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து அழுத்தமாக கண்களைத் துடைத்துக் கொண்டேன்.
மனமோ இந்த துயரத்திற்கு காரணமான சம்பவத்தை தன்பாட்டில் அசைபோடத் தொடங்கியது.

மகள் ஆதிரைக்கு இப்போது இருபத்தி ஐந்து வயதாகிறது. 2009 இறுதி யுத்தத்தில் மனைவியை இழந்த போது பன்னிரண்டு வயதான சிறுமி அவள்.  தாயும் அவளுடைய ஒரே தம்பியும் பதுங்கு குழிக்குள் வந்து விழுந்த எறிகணைச் சிதறல்களால் குற்றுயிராக்கப்பட்டு இறந்த போது கதறித்துடித்து ஆதிரை அழுத அழுகை...
அன்று முதல் அவளுக்கு தந்தையாக மட்டுமல்ல, தாயாகவும் நானே மாறிவிட்டேன். என் மகளின் உணர்வுகள் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் இன்னொரு திருமணம் பற்றி கூட யோசிக்கவில்லை.
அதன் பிறகு ஏனோதானோவென்று தன்பாட்டில் வாழத்தொடங்கிவிட்ட ஆதிரைக்கு இன்றைய நவீன உலகம் பற்றி எதுவுமே தெரியாது.  அவளது சிந்தனை எல்லாம் படிப்பும் நானும் தான் இழந்து விட்ட தாயும் தம்பியும் தான்.

யாரிடமும் அதிகம் ஒட்டாத தனிமையோடு அதிகம் தன்னைப் பொருத்திக்கொண்ட ஆதிரை அதிகமாக புத்தகங்களோடு தன் நேரத்தைக் கழிப்பதுண்டு.

அவளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் வேணும் என்ற எண்ணத்தில் தான் எனது நண்பனின் மகன் துவாரகனுக்கு அதிரையை முடிப்பதற்காக கேட்கச் சென்றிருந்தேன்.
சின்ன வயதில் ஆதிரை மீது அவனுக்கு ஒரு விருப்பம் இருந்தால் இப்போதும் அதே எண்ணம் இருக்கலாம் என நினைத்து தான் நான் அவர்களின் வீட்டுக்குச் சென்றது. 
அலைபேசியில் கேட்காமல் நேரிலேயே கதைக்க வேண்டும் என்று தான் காலையிலேயே வீட்டிலிருந்து நாள் கிழமை பார்த்து புறப்பட்டிருந்தேன் ஆனால் அங்கு போனதும் துவாரகன் சொன்ன .விசயம்...

ஆதிரை அழகில்லையாம்...இன்றைய நாகரீக வாழ்க்கைக்கு ஏற்ற பெண் இல்லையாம்...இத்தனைக்கும் என் மகள் ஒரு கணிதப்பட்டதாரி. ஆசிரியர் தொழிலை விரும்பிச் செய்கிறாள். அரசாங்க  வேலை கிடைக்கவில்லையே தவிர ,கல்வி நிலையம் ஒன்றில் கணித பாட ஆசிரியராகப் பணி செய்து கொண்டிருந்தாள்.
எப்போது கண்டாலும் 'மாமா...' என்று அன்பொழுக கதைக்கிறவனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.
அரிதாரம் பூசிய அழகிகளை தங்கள் கனவுக்கன்னிகளாக கற்பனை செய்து அதே போன்று தோற்றத்தில் வாழ்க்கை துணையையும் எதிர்பார்க்கிற இன்றைய இளைஞர்களுக்கு ஆதிரை போன்ற அலங்காரப்பூச்சற்ற பெண்கள் அழகற்றவர்களாகத் தெரிவது சரிதானே...
நான் கூட சில நேரங்களில் சொல்லியிருக்கிறேன்...
"முகத்துக்கு எதையாவது பூசம்மா .." என்று.
"சும்மா போங்கோ அப்பா....உந்த எடுப்பெல்லாம் எனக்கு சரிவராது" என்பாள்.
குணத்தில் பேரழகோடு வாழ்கிற என் மகளை ஒருவன் நிராகரித்து விட்டான் என்பதற்காக நான் ஏன் அழவேண்டும்...
என்ன ஒன்று...
வெளியே சொல்லவில்லையே தவிர துவாரகனை அவளுக்கும் பிடிக்கும் என்பது எனக்கு புரிந்தது. என் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்கிற ஆற்றாமை தான் என்னை அதிகம் அழவைத்தது.

எனது கண்ணீரும் எனது தோற்றமும் அருகில் இருந்த வயதான அந்த பெண்மணிக்கு என்னத்தை உணர்த்தியதோ...
"தம்பி...ஏன் அழுறீங்கள்...ஏறினதில் இருந்து பாக்கிறன்... நீங்கள் கலங்கினபடிதான் இருக்கிறீர்கள்...?என்றதும் சற்று சங்கடமாக இருந்தது. ஆனாலும் என் மனப்பாரத்தை யாரிடமாவது கொட்டினால் பரவாயில்லை என்று தோன்றவும்
"சரி...இவவை இனி சந்திக்கவா போகிறோம்' என்ற எண்ணத்தில்
என் தாயைப் போன்ற தோற்றத்தில் இருந்த அந்த மூதாட்டியிடம் நடந்த அத்தனை விடயங்களையும் ஒன்றும் விடாமல் கொட்டினேன்.
ஆச்சரியமாக என்னைப் பார்த்த அவர்...

"நல்லா சொன்னாய் தம்பி...இப்போதைய பொம்பிளைப் பிள்ளையளும்  சும்மாவே... வெளிநாட்டு மாப்பிளை தான் வேணும் எண்டெல்லோ நிக்கினம்...இல்லாட்டி, அரசாங்க உத்தியோகம் பாக்கிற மாப்பிள்ளை...
நானும் என்ர பேரன்ர கலியாண விசயமாத்தான் தரகரிட்ட கதைச்சிட்டு வாறன்..
அவன் கமம்தான் செய்கிறவன், பால் அருமையான பிள்ளை, எல்லாரையும் அனுசரிச்சு வாழ வேண்டும் எட்டு நினைக்கிறபண்பான பிள்ளை, 

விவசாயம் தான் தொழில் எண்டுறதாலை   ஒரு சம்பந்தமும் அமையுதில்லை...ஆதங்கத்தோடு சொன்ன அந்த முதியவரை நானும் ஒருவித ஏக்கத்தோடு பார்த்தேன்.
பிறகு ஏதோ ஒரு வேகத்துடன்,

*அம்மா உங்கட அலைபேசி இலக்கத்தை காங்கோ..." என்று கேட்டு அவருடைய தொடர்பிலக்கத்தை வாங்கிக்கொண்டேன்.

"அறிவியல் நகர் இறக்கம்..." நடத்துனர் கூவியதும் அவசரமாக எழுந்து இறங்கியபடி திரும்பிப் பார்க்க, அந்த மூதாட்டியின் முகத்தில் ஒரு நம்பிக்கை நிறைந்த புன்னகை தோன்றியது.

தலையை ஆட்டியபடி  பெருமூச்சோடு இறங்கிக் கொண்டேன்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.