வீர மங்கை சுனீத்தா. விலலியமஸ்..

 


ஊழிக்காலம் பெற்றெடுத்த 

ஒர்மப் புத்திரி சுனிதாதன் 

வாழிக்காலத்திலேயே அந்த 

வானை வசப்படுத்தியவள் ....


மோனத் தவம் செய்யும் 

முனிவர்க்கும் கூடாதந்த 

வானக் கலத்திருந்து நீ

வானளந்த தவச்செயல் ...


காற்றில்லை புவிக்காந்த 

விசையில்லை பருநீர் 

ஊற்றில்லை கோதாரி ஒன்றுமேயில்லா 

வேற்றுக் கிரகம் போய் அம்மா நீ 

வித்தை பல புரிந்தனை ... 


ஆற்றல் மிக்கவள் நீ 

விண்ணியல் அறிவை 

விஞ்ஞான அம்மியில் அரைத்து

அதன் சாற்றை எடுத்துத் தினம்  

ஊற்றிக் குடித்து உன்னை 

உசுப்பேற்றிக் கொண்டாயோ .... 

 

விண்வெளியில் 

மண்வெளி போலன்றி 

உண்ணுவதும் துயர் 

உடுத்துவதும் துயர்

உறங்குவதும் துயர் 

இயற்கை  உபாதை 

இறங்குவதும் துயர் இருந்தபோதும்  

துயருக்கே துயர் கொடுத்து அதைத் 

தூர விரட்டி மனிதப் 

பயிருக்கு ஓர் மகத்துவம் 

மாதரசி நீ சேர்த்தனை ...


நேற்றுப் போல் இருக்கிறது 

நீ விண்கலம் எடுத்தோடி

காற்றில் நடந்தவள் அறிவியல் 

ஊற்றில் முகம் கழுவி 

ஒப்பனை செய்தவள் 

ஈற்றில் மீள வரக் காணோம் என்று 

ஆற்றாமையால் அகிலமே துடித்தது

ஊற்றெடுத்த கண்ணீர் இங்கே 

ஓர் புதிய ஆற்றையே ஓட விட்டது ...

ஆர் பெற்ற பிள்ளையோ 

ஊர்  வர வேண்டும் என்ற

பிரார்த்தனை  வானில் 

ஓர் ஒளிவட்டம் போட்டது ..


பகவத் கீதையைப் 

பக்கம் வைத்திருந்ததாலோ  இறைதன் 

மகவை இத்தனை நாள் காத்ததோ 

அதனால்த்தான் 

தைரியம் உன் உடம்பேறித்

 தான் உரம் பெற்றதோ  

அறிவியல் பயிர் கூட 

இறை அருள் இருந்தால் தான்

உயிர் பிழைக்கும் என்ற

உண்மையை உணரச் செய்தாய்...


ஆழிப் பரப்பில் நீ 

அலுங்காமல் வந்தமர்ந்தது கண்டு 

ஊழிக் காற்றும் ஒரு நிமிடம் 

மௌனித்தது உனக்கு ஊழியம் 

செய்ய ஒரு தொகை டோல்பீனை அனுப்பியது ..


மேழிக்கரத்தோன் தன் வியர்வைக் 

கூலியாச் சில நிறை நாழி 

நெல் பெற்றது போல் 

நாமெல்லாம் மகிழ்ந்தோம்  

ஆழித்தரை யமர்ந்து நீ 

அவிழ்த்து விட்ட புன்னைகை கண்டு ...


வாழிய மாதரசி நீ பல்லாண்டு 

சோழியக் குடுமி போல் உன் கூடவே இருந்த

வில்மோர் வித்தகனும் அந்தக் 

காழியர் போலவே காலமெலாம் வாழட்டும் ..




வரிகள் - காரைககவி



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.