ஓய்வுபெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ், ஆர். சர்வேந்திரன் அவர்களுக்கு கெளரவிப்பு.!📸
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி 2025.03.26 ஆம் திகதி அன்று ஓய்வு பெற்ற திரு. எஸ், ஆர். சர்வேந்திரன் அவர்களுக்கான
கெளரவிப்பு நிகழ்வு திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .இவ் கெளரவிப்பு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமது உரையில், ஓய்வு பெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சர்வேந்திரன் அவர்கள் தன் கடமைகளை பொறுமையுடன் சிறப்பாக கையாண்ட உத்தியோகத்தர் எனவும், உத்தியோகத்தர்களுடன் பண்பாக பழகியவர் எனவும், மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய பின்னர் நெடுந்தீவு, வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியவர் எனவும், குறிப்பாக தீவகப் பகுதியான நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேசங்களில் கடமையாற்றியமையானது சிறப்பான சேவை எனவும் குறிப்பிட்டார். மேலும் யுத்த காலங்களில் தன் கடமைகளிலிருந்து தவறாமல் பொறுப்புடன் சேவையாற்றிய உத்தியோகத்தர் எனவும் குறிப்பிட்டு புகழாரம் செய்தார். மேலும், அவரின் ஓய்வுக்காலம் குடும்பத்துடன் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இவ் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம கணக்காளர், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களால் வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். அதன் பின்னர் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களாலும் திரு. சர்வேந்திரன் தம்பதிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக ஓய்வு பெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். ஆர். சர்வேந்திரன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
ஓய்வு பெற்ற திரு. எஸ். ஆர் சர்வேந்திரன் அவர்கள் அரசாங்க சேவையில் 1994 ஆம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தராக மாவட்டச் செயலகம் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகத்திலும், பின்னர் 2009 ஆம் ஆண்டு பதவியுயர்வு பெற்று உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நெடுந்தீவு, வேலணை மற்றும் மாவட்டச் செயலகத்திலும், இறுதியாக 2021 ஆம் ஆண்டிலிருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றி 26.03.2025 இல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், கணக்காளர், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை