யாழ்ப்பாணம் - வவுனியா மாநகர முதல்வர்கள் சந்திப்பு!
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மதிவதனி மற்றும் வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோருக்கிடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு இன்று (19) யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இரு முதல்வர்களும் புதியவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் சார்பில் முதல்வர் மதிவதனி அவர்கள் வவுனியா மாநகர முதல்வர் காண்டீபன் அவர்களை வரவேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாநகரசபையின் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், நடைமுறைகள் மற்றும் சபை நடவடிக்கைகள் தொடர்பில் பொதுவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. யாழ் முதல்வர் வவுனியா முதல்வருக்கு யாழ்ப்பாணம் மாநகரசபை தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினார்.
வவுனியா மாநகரசபை புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமையினால் எதிர்கால வேலைத்திட்டங்களில் தேவையான சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்று முதல்வர் காண்டீபன் கேட்டுக் கொண்டார். நிச்சயமாக பழமை வாய்ந்த நீண்ட வரலாற்றை யாழ்ப்பாணம் மாநகரசபை கொண்டுள்ளது என்ற வகையில் தேவையான ஒத்துழைப்புக்களை அவ்வப்போது வழங்க தயாராக இருப்பதாக முதல்வர் மதிவதனி அவர்கள் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி இரு முதல்வர்கள் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாநகர கௌரவ பிரதி முதல்வர் இ.தயாளன், கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாநகரசபை செயலாளர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்பிரிக்கோ எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
கருத்துகள் இல்லை