ஐ.நா. ஆய்வுக் கப்பலை நிராகரித்த இலங்கை!
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான செயற்பாட்டு நடைமுறைகளை (SOPs) இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20, 2025 வரை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, இலங்கைக் கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடவிருந்த ஐ.நா.வின் ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஐ.நா. ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
“வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான முறையான நடைமுறைகள் உருவாக்கப்படும் வரை எஃப். நான்சென் கப்பலின் வருகையை இரத்து செய்வதாக மீன்வளம், நீர்வளம் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சிடம் இருந்து மே 19, 2025 அன்று கடிதம் கிடைத்தது” என அந்த ஆவணம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இரத்து “1 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகளுக்கு வழிவகுக்கும், கப்பலின் தரவுகளை நம்பியுள்ள பசுமைக் காலநிலை நிதியத்தின் திட்டங்களைப் பாதிக்கும், மேலும் 2030 க்குப் பின்னரே அடுத்த வருகை இருக்கும்” என்றும் அது கூறியது.
அங்கீகரிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகள் இல்லாததால், எஃப். நான்சென் ஆய்வுக் கப்பலின் வருகை இரத்து செய்யப்பட்டமை, நேரடி நிதி இழப்புகளுக்கு வழிவகுப்பதுடன் மட்டுமல்லாமல், பசுமைக் காலநிலை நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட எதிர்வரும் காலநிலை தழுவல் திட்டங்களின் செயல்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இத்திட்டங்கள் ஆய்வில் இருந்து எதிர்பார்க்கப்படும் தரவுகளை பெரிதும் நம்பியுள்ளன என்றும் ஐ.நா. ஆவணம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. ஆவணம் அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள தகவல்படி, இது ஒரு முக்கிய பொருளாதாரத் துறையில் முடிவெடுப்பதற்குத் தேவையான முக்கிய தரவுகளை அரசாங்கத்திற்கு இல்லாமல் செய்துவிடும். ஐ.நா. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, ஐ.நா. கொடியின் கீழ் இந்த ஆய்வை தொடர அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
மீன்பிடி விளைச்சல் குறைந்து வரும் நிலையில், “கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியம் குறித்து முக்கியமான நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், கடலில் இருந்து நீண்டகால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இலங்கையின் கடல்சார் நிறுவனங்களுக்கு இந்தக் கப்பலின் வருகை முக்கிய பங்காற்றும்” என்று ஐ.நா. இந்த ஆய்வின் அவசரத்தை வலியுறுத்தியது.
“இலங்கை மீன்பிடி வல்லுநர்கள் மற்றும் தேசிய நீர்வாழ் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், அத்துடன் இலங்கை கடற்படையின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அனைத்து தேசிய சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குவதன் மூலம் எஃப். நான்சென் தொழில்நுட்பக் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றுவார்கள். சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் அரசாங்கத்தின் முன் அனுமதிக்குப் பின்னரே வெளியிடப்படும். இவ்வாறான கப்பலின் ஐந்தாவது வருகை இதுவாகும், கடைசியாக 2018 இல் இலங்கை வந்தது” என்றும் அது கூறியது.
கருத்துகள் இல்லை