ஜேர்மனியில் அநுர: குவியும் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்!


— அழகு குணசீலன் —

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஐந்தாவது தேர்வாக ஜேர்மனி – ஐரோப்பிய ஒன்றிய விஜயம் அமைந்திருக்கிறது. இலங்கை ஊடகங்கள் இதுபற்றி பேசுகின்ற அளவுக்கு ஜேர்மனிய – ஐரோப்பிய ஊடகங்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக சில டிஜிட்டல் தளங்களில் பத்தி எழுத்துக்கள் வெளிவந்துள்ள போதும் அவை திசாநாயக்கவின் ஜேர்மனி பயணத்திற்கான நோக்கத்திற்கு மாறாக எதிர்த்திசையை காட்டுகின்றன. ஜனாதிபதியின் விஜயத்தின் இலக்கு இலங்கையின் பொருளாதார மேம்பாடு. ஆனால் ஐரோப்பாவின் இலக்கு மனித உரிமைகள், போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறலாக உரத்து ஒலிக்கிறது.


சுமார் 60,000 இலங்கை டயஸ்போராவைக்கொண்ட ஜேர்மனியில் அநுரகுமாரவின் வருகைக்கு எதிராக 11.யூன்.2025 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் 100 பேர் அளவிலேயே கலந்து கொண்டனர். ஆனால் சனத்தை கூட்டி கூட்டத்தோடு கோவிந்தா போடும் இலங்கை அரசியல் பாணியில் இருந்து மேற்குலகப்பாணி வேறுபட்டது. எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்பதைவிடவும் அங்கு என்ன பேசப்பட்டது என்பதே முக்கியம். ஈழம் தமிழ்மக்கள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், ஜேர்மனியின் உள்ளூர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் ஜேர்மனி இடதுசாரி கட்சியின் (DIE LINKE) நாடாளுமன்ற உறுப்பினர். குர்திஷ் வம்சாவளியை கொண்ட FERHAT KOCNK ஜேர்மனியின் குறிப்பிடத்தக்க இடதுசாரி அரசியல்வாதி.


இனப்படுகொலையாளிக்கு செங்கம்பளமா…..? 


 “இனப்படுகொலையாளிக்கு செங்கம்பளமா விரித்திருக்கிறீர்கள்? என்று ஜேர்மனி அரசாங்கத்தை கேட்டிருக்கிறார் அவர். அநுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி. 2009 இனப்படுகொலைக்கு ஆதரவளித்தது என்றும், 1983 கறுப்பு யூலைக்கும் ஜே.வி.பி.யே பொறுப்பு என்றும் பேசியிருக்கிறார். இனப்படுகொலையின் போது மௌனம் சாதித்தது மட்டும் அன்றி, தமிழர் தாயகத்தில் நிலக்கொள்ளையையும், தமிழர்கள் மீது அழுத்தங்களையும் அநுர அரசாங்கம் செய்வதாக அவரது உரை அமைகிறது. அத்துடன் துருக்கி ஜனாதிபதி ERDOGAN உடன் திசாநாயக்கவை ஒப்பிட்டு சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கும் பாஷிஸ ஆட்சி என்பது வரை அவரது உரையின் கடுமைத்தன்மை அமைந்துள்ளது.


ஜனாதிபதி அநுகுமாரவைப் பொறுத்தமட்டில் அவரது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களில் இது ஐந்தாவது விஜயம். இதற்கு முன்னர் அவர் இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, வியட்னாம் நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கெல்லாம் இது போன்ற இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றவாளிகளை பாதுகாத்தல், பொறுப்பு கூற மறுத்தல், போர்க்கால பாலியல் வன்முறைகள், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பௌத்த விரிவாக்கம், நில ஆக்கிரமிப்பு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தல்….. போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் காதில் விழவேயில்லை. விழுந்ததெல்லாம் ஆகா…. ஓகோ….. அரசியல் தான். அனைத்து பாவங்களும் வர்னாசிக்கு போகாமலே கங்கை முதல் மீகொங் வரை தீர்த்தம் ஆடி கழுவிட்ட புண்ணியனார் கதை.


ஜேர்மனிக்கான அநுரவின் விஜயம் அவருக்கு ஆசியாவுக்கு மாறாக ஐரோப்பா அணிந்துள்ள கண்ணாடி வேறு என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஏனெனில் இதுவரை ஜே.வி.பி. பாணியில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி, ஜனநாயக மறுப்புக்களையும், மனித உரிமை மீறல்களையும், இயற்கையையும் சூறையாட குத்தகைக்கு விட்டும், சொந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் சுதேசிய வாழ்வியலை விலைகொடுத்து, “பொருளாதார வளர்ச்சி” அடைய முயலும் நாடுகளையே அநுரகுமார திசாநாயக்க தரிசித்திருந்தார். அதைப்பார்த்து இவரும் ஆகா ….ஓகோ…அரசியலையே பேசினார். 


இதன் அடிப்படையில் திசாநாயக்க அரசாங்கம் ஜீ.பி.எஸ். வரிச்சலுகை, முதலீட்டு வாய்ப்புகள், உல்லாசப் பிரயாண அபிவிருத்தி, டயஸ்போராவை பயன்படுத்தல், ஏற்றுமதி பன்முகப்படுத்தல், தொழில்நுட்பம் சார்ந்த கற்கை நெறிகள், கார் உற்பத்தி கைத்தொழில் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான பொருளாதார எதிர்பார்ப்புக்களுடன் இந்த பயணத்தை செய்திருக்கிறது. இந்த முரண்பாடான இலங்கை நிலைப்பாட்டிற்கும் சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம், மனித உரிமைகள், ஐ.நா.தீர்மானங்களளை நடைமுறைப்படுத்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பனவற்றிற்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமானது. இதனாலேயே இலங்கையும், ஐரோப்பாவும் இரு வேறு திசைகளில் பயணிக்கின்றன என்று கூற வேண்டியுள்ளது.


மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகள் குறித்த பாசாங்கு….!


————————————-


மீனாட்சி கங்குலி, ஆசிய மனிதவுரிமைகள் நிறுவகத்திதின் துணை இயக்குநர். அநுரவின் ஜேர்மனி வருகை பற்றி அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் ஜேர்மனி ஊடகங்களில் வெளிவந்துள்ளன. 


“கடந்த ஆண்டு தேர்தலில் முன்னைய நிர்வாகங்களில் இருந்து விலகி அடக்குமுறை மற்றும் பாகுபாட்டின் மரபை நிவர்த்தி செய்வார் என்று நம்பிய தமிழர்கள் ஜனாதிபதி பதவிக்கு அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தனர். அவர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.”


“…. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்களின் தோல்வியுற்ற முயற்சிகளை திசாநாயக்க அரசாங்கம் ஆதரித்துள்ளது. ஆனால் அவை எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அவற்றை தோல்வியுற்ற வாக்குறுதிகளின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றனர்….”


“GPS + வரிச்சலுகையைப் தொடர்ந்தும் பெறுவதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற கொடூரமான சட்டத்தை ரத்துச்செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த சட்டத்தை ஜனாதிபதி தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார். மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகள் செயற்படுவதாக பாசாங்கு செய்வதற்கு பதிலாக பொறுப்பு கூறல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். இறுதியில் நீதியை வழங்குவதற்காக பாடுபடவேண்டும்” இவ்வாறு மிகவும் காத்திரமான விமர்சனத்தை அநுர அரசாங்கம் மீது வைத்துள்ளார் மீனாட்சி கங்குலி.


பயங்கரவாததடைச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது….!


———————————-


மனித உரிமை அமைப்புக்களின் குறிப்பிடத்தக்க அவதானிப்பு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தவறாகப்பயன்படுத்துவதாகும். தமிழர்களையும், முஸ்லீம்களையும் விருப்பப்படி கைதுசெய்யவும், சித்திரவதை செய்யவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. திசாநாயக்காவின் தேர்தல் வாக்குறுதிகளில் இச்சட்டத்தை நீக்குவதும் ஒன்று. 2017 முதல் பல அரசாங்கங்கள் இந்த வாக்குறுதியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளன. ஆனால் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் என்று நிரூபிக்க முடியாதவர்களை கூட கைது செய்ய இச்சட்டத்தை பயன்படுத்துகிறது என்று ஜேர்மனி மனித உரிமைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் PHILIPP FRISCH தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .


“ஐ.நா.கடந்த காலங்களில் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தும் எதுவும் இலங்கை அரசாங்கங்களால் நடைமுறைப்-படுத்தப்படவில்லை. கடந்த கால இலங்கைத்தலைவர்களிடம் இருந்து அநுரகுமாரவின் தலைமைத்துவத்தையும் இதுவரை வேறுபடுத்த முடியவில்லை. போர்க்குற்றங்களோடு தொடர்பான முன்னாள் படைத்துறை முக்கியஸ்தர்களை ஐ.நா. பிரேரணைக்கு முரணாக பாதுகாப்பதுடன், பிரேரணையையும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.”


“சிறிலங்கா அதிகாரிகள் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினரை புறக்கணிக்கிறார்கள். பலர் இன்னும் கைது செய்யப்படுகிறார்கள். யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பௌத்த மதகுருமார் இந்துக்கோயில்களை பௌத்த விகாரை களாக மாற்றியமைக்கிறார்கள்.” என்றும் அவரது பதிவு கூறுகிறது.


ஜேர்மனி அநுசரணை வழங்கும் நாடுகளின் தலைமைகளில் ஒன்றாக இருந்தது. 2022 இல் இதிலிருந்து விலகியது. இது ஐ.நா. பிரேரணைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழியாக நிபந்தனைகள் புதிதாக மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும். அதே வேளை ஜேர்மனியின் புதிய அதிபர் FRIEDRICH MERZ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஐ.நா. பிரேரணைகளுடன் ஜீ.பி.எஸ் சலுகைகளையும் தொடர்பு படுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டும்.  


அநுரவின் உறுதிமொழிகளும், சட்டரீதியான பொறுப்பும், மனித உரிமைகள் சூழல் மறுசீரமைப்பும் சரியாக செயற்பட இந்த நெருக்குவாரத்தை அநுர அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும். வீடு தேடி வந்துள்ள இந்த சந்தர்ப்பம் கைநழுவிப்போய்விடக்கூடாது என்று பிலிப் பிரிஷ் ஜேர்மனியின் அதிபரைக்கேட்டுள்ளார்.


2023 செப்டம்பரில் இடம்பெற்ற பெர்ளின் குளோபல் டயலொக் போரம் (BERLIN GLOBAL DIALOGUE FORUM) மாநாட்டில் பொருளாதார நிபுணத்துவ உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க பூகோள அரசியல் பற்றிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் “நாங்கள் அமெரிக்க, இந்திய, சீன அழுத்தங்களுக்கு மத்தியில் வாழக்கற்றுக்கொண்டுள்ளோம்” (WE HAVE LEARNED TO LIVE WITH PRESSURE FROM USA, INDIA AND CHINA.) என்று பதிலளித்தார். இந்த நாடுகளின் இலங்கை மீதான அழுத்தங்கள் பூகோள அரசியல், பொருளாதாரம் சார்ந்தவை. ஆனால் தற்போது அநுர அரசாங்கம் எதிர்நோக்கும் ஐரோப்பிய அழுத்தங்கள் பூகோள அரசியல், பொருளாதாரத்தையும் கடந்து சமூகத்தையும் சார்ந்தவை இவற்றிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதில் என்ன?


இதன் விளைவுகள் போகப்போக புரியும்…!. 2026 இல் கடன் மீளளிப்பு ஆரம்பமாகும் போது தெரியும்….!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.