விடுதலைப் புலிகளின் பிரம்மாண்டமான நிலக்கீழ் பதுங்குக்குழி அகழ்வு ஆரம்பம்!📸
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காணி, போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாமாகச் செயற்பட்டுள்ளது. சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பதுங்குக்குழியின் வாயில்கள், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்ட குண்டுத் தாக்குதல்களால் மூடப்பட்டிருந்ததால், மக்கள் இதன் இருப்பை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
போருக்குப் பின்னர், இந்தக் காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். அண்மைக் காலமாக, இந்தப் பதுங்குக்குழிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவியதால், சிலர் காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து, புதன்கிழமை (ஜூலை 09, 2025) இந்த நிலக்கீழ் பதுங்குக்குழியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கிராம சேவையாளர், விஷேட அதிரடிப் படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பதுங்குக்குழிக்குள் நீர் நிரம்பியிருந்ததால், அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
நீதிபதி பிரதீபனின் பணிப்புரைக்கமைய, நேற்று காலை 10.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்தப் பதுங்குக்குழிக்குள் என்னென்ன பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியிலும், பாதுகாப்புத் தரப்பினர் மத்தியிலும் நிலவி வருவதாகச் சொல்லப்பட்டாலும் நேற்று எதுவுமே அங்கே கண்டெடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை