குர்திஸ்தான் ஆயுதப் போராட்ட முடிவும் அரச பயங்கரவாதத்தின் வெற்றியும்.!


வரலாற்றில் ஏற்படும் புகழ் பெற்ற நிகழ்வுகள் இரண்டு விதமாக நிகழ்கின்றன. முதல் முறை அது ஒரு துன்பியலாகவும் இரண்டாவது முறை அது கேலிக்கூத்தாகவும் நிகழ்கிறது. 

- கார்ல் மார்க்ஸ்.


🔴 40 ஆண்டுகால் குர்திஸ்தான் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூலை 11, 2025 அன்று ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியாவில் நடந்த ஒரு விழாவின் போது குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த (PKK) போராளிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டனர்.  


சுற்றியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரிக்கும் காட்சியையே ஊடகங்கள் ஒளிப்படம் பிடித்தன. ஆனால் தலைகளைக் குனிந்தபடியே குமுறிக்குமுறி அழுத குர்து போராளிகள் மீதும் / மக்கள் மீதும் எந்த ஒளியும் விழாமல் கமெராக்கள் பார்த்துக் கொண்டன.


ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் குர்துகளின் விடுதலையை அடைய முடியும் என்ற உறுதியுடன், 1978 ஆம் ஆண்டு அங்காரா பல்கலைக்கழக மாணவர்களால் PKK உருவாக்கப்பட்டது. 40 வருடங்கள் கழித்து கடந்த மே மாதம் பி.கே.கே ஆயுதப் போராட்டத்தைக் கலைத்தது உலகின் போராடும் தேசிய இனங்கள் சார்ந்த அவல நிகழ்வாக அரங்கேறியது.


கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தலைவர் அப்துல்லா ஒசலான் கடந்த பெப்ரவரி இறுதியில் தனது சக தளபதிகளைச் சந்தித்து இந்தத் துயர முடிவை அறிவித்தார்.


அப்போது அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுவதில் முக்கியமானது புலிகளின் வீழ்ச்சி. 


🟥 தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நகலெடுத்து - அதை முன் மாதிரியாகக் கொண்டு - புலிகளுடன் உறவுகளைப் பேணிய மிக முக்கியமான போராட்டம் குர்திஸ்தான் போராட்டம்.


2009 புலிகளின் வீழ்ச்சி உலகின் ஏனைய போராடும் தேசிய இனங்களிற்கு - குறிப்பாக குர்து போராளிகளுக்கு பெரும் மனச் சோர்வைத் தந்தது என்றே கூற வேண்டும்.


ஏனென்றால் உலகில் யாருடைய தயவுமின்றி புலிகள் முப்படைகளையும் கட்டி எழுப்பி ஒரு நடைமுறை அரசை (De facto state ) உருவாக்கியிருந்தது ஏனைய தேசிய இனங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் - பெரும் நம்பிக்கையாகவும் இருந்தது.


இதுவே மறுவளமாக உலக அரச பயங்கரவாதத்திற்குப் பெரும் உறுத்தலாகவும் இருந்தது. பின்பு நடந்தது நாம் எல்லோரும் அறிந்த - அனுபவித்த வரலாறு.


புலிகளை அழிப்பதனூடாக அதுவும் அவர்களை அடிபணிய வைத்து அழிப்பதனூடாக உலகின் அனைத்துப் போராட்டங்களுக்கும் முடிவுரை எழுதும் களமாகவே தமிழீழம் தெரிவு செய்யப்பட்டது.


🟥 தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நோக்குடன் புராஜெக்ட் பெக்கான் எனும் ஒரு நாசகாரத் திட்டத்தை வரைந்து அதைச் செயற்படுத்தியது மேற்படி கூட்டணி. இவையெல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனை மண்டியிட வைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஒரு விடுதலைப் போராட்டத்தை, ஒரு தேசிய இனத்தின் இறைமையை தமது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க வைத்து அடிபணிய வைப்பதனூடாக ஒரு புதிய வரைபடத்தை வரைய முயன்ற உலக பயங்கரவாதத்தின் சதியை உணர்ந்து, அடி பணிய மறுத்து தலைவர் பிரபாகரன் வேறு ஒரு வரைபடத்தை வரைந்தார்.


அது மட்டுமல்ல புலிகளை அடிபணிய வைப்பதனூடாக ஒட்டுமொத்த போராடும் தேசிய இனங்களின் போராட்டங்களிற்கு ஒரு முடிவுரை எழுதும் பரீட்சார்த்த களமாகவும் தமிழீழத்தை மாற்றியது மேற்குலகம் – குறிப்பாக அமெரிக்கா.


ஆனால் தலைவர் பிரபாகரன் அதை உணர்ந்தே நந்திக்கடலில் போய் உறைந்து இந்தச் சூழ்ச்சியை முறியடித்து ஒரு புதிய கோட்பாட்டை அறிமுகம் செய்தார். அதுதான் போராடும் தேசிய இனங்களின் வருகையை எதிர்பார்த்து நந்திக்கடலில் காத்துக் கிடக்கிறது. 


புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரில் தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நோக்குடன் உட் புகுந்த பிராந்திய, மேற்குலக சக்திகளுக்கு எதிராக ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதியாக நின்று பிரபாகரன் ஆடிய பகடையாட்டத்தின் விளைவே இந்தக் கோட்பாடுகள்.


🟥 இதைக் குர்து போராளிகள் புரியாமல் போனது பெரும் துயரம். புலிகளின் வீழ்ச்சி குர்துப் போராளிகளைத் தாறுமாறாகக் குழப்பி விட்டிருந்தது. 2018 /19 காலப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய சதி புரியாமல் அவர்களிடம் ஆயுதம் வாங்கி ISIS இற்கு எதிராகப் போராடும் அளவிற்குக் குழம்பிப் போனார்கள். அப்போதே குர்திஸ்தானின் வீழ்ச்சி தொடங்கி விட்டது.


ஐஎஸ்ஐஎஸ் ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக குர்து போராளிகளுக்கு ஆதரவளித்துவிட்டு பிற்பாடு அவர்களை படுகொலை களத்தில் நிறுத்திவிட்டு துருக்கியின் இன அழிப்புக்கு மறைமுக ஆதரவளித்துவிட்டு அமெரிக்கா விலகியது மட்டுமல்ல அதே ஐஎஸ்ஐஎஸ், குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி/ அமெரிக்க ஆதரவுடன் களத்தில் நின்றது.


குர்துக்கள் வீழ்ந்த இடம் இதுதான்.


வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்பு ஒரு கட்டத்தில் இந்திய வல்லாதிக்கத்தையும், பிற்பாடு 2009 இல் புது மாத்தளனின் கடற்படைத் தளம் கேட்ட அமெரிக்கச் சதியையும் நிராகரித்து தமிழீழ இறைமையக் காத்த கதையை குர்துக்கள் மறந்து போனது பெரும் வரலாற்று தவறாக இன்று மாறி நிற்கிறது.


🟥 அரச பயங்கரவாதத்திடம் இணக்க/ சரணாகதி அரசியல் செய்வதிலுள்ள ஆபத்துக்களையும் புலிகள் ஒரு கோட்பாடாகவே முன்வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.


'வெள்ளைக் கொடி விவகாரம்' என்று விளிக்கப்படும் ஐ நா கண்காணிப்பில் நடந்த அரசியல் போராளிகளின் ஆயுதங்களைக் கைவிட்டுச் செல்லும் நிகழ்வு ஒரு இன அழிப்பாக மாறியது. அதன் நேரடிச் சாட்சியங்களில் ஒருவரான ஊடகவியலாளர் மேரி கொல்வின் அதைக் கண்டு பிடிக்க முற்பட்ட போது சிரியாவில் வைத்துக் கொல்லப்பட்டார்.


இது ‘அவர் ஏன் கொல்லப்பட்டார் ?’என்ற கதையின் பின்புலம் மட்டுமல்ல, போராடும் தேசிய இனங்கள் அரச பயங்கரவாதத்திடம் ‘சமரசம்' செய்வதிலுள்ள ஆபத்துக்கள் குறித்த – அந்த அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை கட்டிக் காக்கும் உலக ஒழுங்கு குறித்த எச்சரிக்கை மற்றும் பொறிமுறைகளை வகுத்த ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள் உருவான கதையின் பின்புலமும் இதுதான்.


“ஆயுதங்களை கைவிடுதல் என்பது ஒரு வகையில் சரணடைவுதான், ஆனாலும் என்னிடம் பேசிய நடேசன் ‘சரணடைவு’ என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார் – அதில் இறுக்கமாகவும் இருந்தார்”. மேரிகொல்வின் BBC நேர்காணலில் பின்பொரு முறை குறிப்பிட்டிருந்தார்.


மேரி கொல்வின் தமிழின அழிப்பின் ஒரு அனைத்துலகச் சாட்சி மட்டுமல்ல, பு லி கள் தமது ‘மவுனத்தை’ ஒரு கோட்பாட்டுருவாக்கம் செய்யும் முனைப்பில் இருந்ததற்கான வரலாற்று சாட்சியும் கூட..


கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே பு லி கள் குறியாக இருந்தார்கள் . ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காகப் பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்றுச் செய்தி இது.


இதுவே பின்னாளில் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாகக் கருத்துருவாக்கம் பெற்றன.


ஆனால் இன்று இந்தக் கோட்பாடுகளை உள்வாங்காத குர்துப் போராளிகள் எந்தவித உறுதிமொழிகளுமின்றி , போராடும் தேசிய இனங்கள் சோர்வுக்கும், அயர்ச்சிக்கும், தோல்வி உளவியலுக்குள்ளும் செல்லும் வண்ணம் ஒரு 'சரணடைவு' அரசியலைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.


'கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது கெட்ட கனவாகக் கிடக்கிறது.' - கார்ல் மார்க்ஸ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.