கல்வி நிறுவனத்தில் சூரியஒளி மின்சாரத் திட்டம் அங்குரார்ப்பணம்!📸
அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் சூரிய ஒளி மின் வினியோக வேலைத்திட்டம் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும், பைத்துல் ஹிக்மா தலைவருமான கலாநிதி எம்.ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,சூரிய ஒளி மின்சாரத் திட்டத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய பொறியியலாளர் எம்.ஏ.நௌஷாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பைத்துல் ஹிக்மா தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஹனிபா கூறுகையில், அக்கரைப்பற்றில் கடந்த 13 வரூடங்கள் க.பொ.த உயர்தரப் பிரிவு கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி வழங்கி, சமூக நிறுவனமாகத் தொழிற்பட்டுவரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்துக்கு இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும்.
மாணவர்களுக்கு கல்வி வழங்கி அவர்களை சமூகத்தில் மிளிரச் செய்யும் பாரிய பொறுப்பை ஏற்றிருக்கும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பணிகளுக்கு தொடர்ந்தும் சமூக அங்கீகாரம் கிடைத்து வருகின்றதை இவ்வாறான உதவிகள் உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் எதிர்வரும் 30 வருடங்களுக்குப்
பயனளிக்கும், ரூபா 1.7 மில்லியன் செலவிலான சூரியஒளி மின்சாரத் திட்டத்தை அன்பளிப்பாக நிறுவி பொறியியலாளர் நௌஷாத் மற்றும் அவரது குடும்பத்தினர் முத்திரை பதித்துள்ளனர்.
இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற கல்விக்கு உதவும் வேலைத்திட்டங்கள் உட்பட மக்களுக்கு நன்மைபயக்கக் கூடிய மனிதாபிமான உதவிகளை ஏராளமாக வழங்கவேண்டும். அதுவே நாங்கள் உயிர்வாழும் போது மாத்திரமல்ல, மரணித்த பின்னரும் நன்மை பெற்றுத் தரக்கூடிய நிலையான தர்மமாக அமையும். அதனாலயே, இந்நிகழ்வை மாணவர்களை சாட்சியாக வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளோம்.
இந்நிகழ்வில், பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனுசரணையாளர் பொறியியலாளர் நௌசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், மாணவர்கள் என அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை