நல்லூர் அருகே இன்னோர் பிரம்மாண்டமான ஆலயம்!📸
யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து கோயில் வீதி வழி இராஜ வீதியை நோக்கிப் பயணிக்கும் போது (பூங்கனிச்சோலை அருகில்) இராமலிங்கம் வீதியில் 'திருநெல்வேலி கிழக்கில்' புத்தாக்கம் பெற்ற பெரிய- அழகிய கோயிலைப் பலரும் கண்டிருக்கலாம்.
கடந்த பதின்னான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இப்பெரிய கோயிற் திருப்பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் எதிர்வரும் 07.07.2025 விஸ்வாவஸு ஆனி அனுஷத்தில் மஹா கும்பாபிஷேகம் நிகழ் இருக்கிறது.
வாலையம்மன் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் முழுமையாகப் புத்தாக்கம் பெற்றாலும் ஒரு நூறாண்டேனும் பழைமை வாய்ந்தது. கோயில் வரலாறு மேலும் ஆய்வுக்குரியது.
சிலர் இந்தக் கோயில் நானூறு ஆண்டுகள் பழைமையானது என்றும் வைத்தியர் இராமலிங்கம் என்பவருக்கு சித்தர் ஒருவர் வழங்கிய ஸ்ரீ சக்ர மேருவை அவரது அறிவுறுத்தலுக்கு அமைய மூலஸ்தானத்தில் ஸ்தாபித்து உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறார்கள்.
இதனால் அக்குடும்பத்தின் குறை நீங்கி, அவர்களுக்கு அம்பாள் அருளால் வம்ச விருத்தி உண்டானது என்றும் சொல்கிறார்கள். இக்கோயில் இருக்கும் வீதி இராமலிங்கம் வீதி என்று அழைக்கப்படுவதும் இணைத்துச் சிந்திக்கத் தக்கது.
தவிரவும் இக்கோயிலை யாழ்ப்பாணத்தரசர் காலத்திற்குரியது என்று கருதுவோரும் உளர். எவ்வாறாயினும் இவை எல்லாம் இக்கோயில் பழைமையையே பறைசாற்றுகின்றன.
சடையம்மா முதலிய சித்தர்களால் வழிபடப்பட்டது என்ற நம்பிக்கைக்குரிய இக்கோயிலில் அம்பிகை வாலை ஆக (பருவமடையாத பெண் குழந்தை) வடிவில் வழிபடப்பட்டதால் வாலை அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தவிர, இக்கோயில் கருவறையில் விக்கிரகமில்லாமல் ஸ்ரீ சக்ர மேரு வடிவம் மட்டுமே பிரதிஷ்டிக்கப்பட்டிருந்தது.
பாலஸ்தாபனமாகி பதின்னான்காவது வருடத்தில் பேராலயமாகிக் கும்பாபிஷேகம் நிகழும் போது மத்தியில் குறித்த பழைமையான ஸ்ரீ சக்ர மேருவும் பாலா த்ரிபுர சுந்தரி விக்கிரகமும் பிரதிஷ்டையாக உள்ளது.
நான்கு வாசல்கள், பெரிய பிரகாரம், உயர்ந்த மதில்கள், அழகிய கோபுரம், நாற்புறமும் சதுர் வேத மூர்த்திகளுடன் கூடிய மணிக்கோபுரம், அழகிய புஷ்கரணி என்று மின்னுகிறது இக்கோயில்.
ஆரம்பத்தில் இக்கோயிலை வீரபாஹு தேவர் வம்சத்தினரான செங்குந்த முதலியார் மரபினர் சிறப்பாகப் பரிபாலித்தனர்.
சில பல காரணங்களால் முப்பத்து ஐந்து ஆண்டுகள் மூடப்பட்டிருந்த இக்கோயிலை இந்து மரபுகளில் இறுக்கமான பற்றும் பக்தியும் மிக்க சுவாமி இராமதாஸ் நிலையத்தைச் சேர்ந்த அமரர் சீவரத்தினம் மற்றும் திருவாளர் பரமலிங்கம் ஆகியோரிடம் 2003 ஆம் ஆண்டில் சாசனம் மூலம் இக்கோயிலை இவர்களே பரிபாலிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் எனக் கருதி அப்போது கோயிற் பரிபாலகராக இருந்த அமரர். திருவாளர் பிரபு அவர்கள் கையளித்தார் என்றும் அறிகிறோம்.
இதன் பின்னர் தான் கருணாலயம் முதலிய பல அறப்பணிகளை முன்னெடுக்கும் சுவாமி இராமதாஸ் நிலையத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தார் மற்றும் திருவாளர். முகுந்தன் ஆகியோரின் இணைவில் 2004இல் அமரர் தாணு. வாசுதேவக் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் 2011இல் பாலஸ்தாபனம் செய்து இப்பெரிய கலைக்களஞ்சியத்தை இப்போது உருவாக்கி உள்ளனர்.
கோயிற் திரு மதிலில் எங்கும் காண அரிதாக, ஸ்ரீ சக்ர தேவதைகளான திதிகளுக்குரிய திதி நித்யா தேவதைகளையும் திக் பாலகர்களையும் கூட நாம் பார்க்கிறோம்.
ஸ்ரீ வித்யா உபாசகரும் எம் அன்புக்குரியவருமான சிவஸ்ரீ .சந்திர. சாந்தரூபக்குருக்கள் தலைமையில் இந்த ஆலய மஹா கும்பாபிஷேகம் நவகுண்ட பக்ஷமாக மேற்சொன்ன நாளில் 07.07.2025 நிகழ இருக்கிறது.
நீண்ட காலத்திற்குப் பின் இந்த ஆலயம் கும்பாபிஷேகத்தோடு பொலிவு பெறுவது ஊருக்கே எழுச்சி தரும் என்பதில் மாற்றமில்லை. பாலா எம்மோடு இருந்து எம்மைப் பரிபாலிக்க வேண்டுவோம்.
"வாலைக் குமரியாய் வனப்புறு கன்னியாய்
சேலை அணியும் சுமங்கலி சுவாசினியாய்
ஞாலத்தில் பல் வடிவம் கொண்டே அருளும்
சாலிவாடி புரத்தாளைச் சரணடைவோமே"
தகவல் - தி.மயூரகிரிக்குருக்கள்
Mayooragiri Sharma
கருத்துகள் இல்லை