நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடமை தவறியதாக குற்றம் சாட்டப்படிருந்தார்.
இதன்படி அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த முடிவு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது.
இதற்கமைய முறையான ஒழுங்கு விசாரணையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தால் 2025.07.04 அன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கை, முறைப்பாட்டை கையாளும் அதிகாரியின் அறிக்கை, பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கை மற்றும் அந்த அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பின்வரும் விடயங்களைக் கவனித்தது.
1.முறையான ஒழுக்காற்று விசாரணை அறிக்கையின்படி, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குற்றவாளி எனக் கண்டறிந்தது.
2. மேற்கூறிய குற்றச்சாட்டுகள், நிறுவனக் குறியீட்டின் வகை II இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொது அதிகாரிகளால் செய்யக்கூடிய குற்றங்கள் தொடர்பான முதல் அட்டவணையின் கீழ் வரும் குற்றங்கள் ஆகும்.
அதன்படி 2025.07.17 அன்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேற்குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிகாரி குற்றவாளி என தீர்மானித்தது.
அதன்படி, அவர் செய்த குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, 2025.07.17 அன்று நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு அமர்வில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை