தீர்த்த யாத்திரைகளும் அதனுடைய பயன்களும்.!!
பிரயோபவேசம் :பறவைகளின் அரசனே...!!
உயிருடன் இருக்கும் பொழுது பல சுகங்கள் நிரம்பி இருக்கக்கூடிய பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் நாவின் சுவைக்கு அடிமையாகாமல், உள்ளம் மற்றும் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டு தர்ம நியாயங்களின் அடிப்படையில் வாழ்ந்து, முழு மனதோடு தர்ப்பணம் மற்றும் சிரார்த்த பூஜைகளை செய்து, தர்ப்பையை பரப்பி அதன்மீது படுத்துறங்கி என்னை தியானித்து கொண்டு உயிரைவிடுவார்கள் எனில் அவன் என்னுடைய லோகமான வைகுண்டத்தை அடைவான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அவ்விதம் அவன் கடைபிடிக்கும் இவ்விடத்திற்கு 'பிரயோபவேசம்' என்று பெயர்.ஒருவர் வாழ்கின்ற காலத்தில் எத்தனை நாட்களுக்கு இந்த நெறிமுறைகளை கடைபிடித்து என்னை தியானித்த வண்ணம் வாழ்கின்றார்களோ அத்தனை காலம் அவர்களுக்கு யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். சிலர் வாழும் பொழுது மாயைக்கு உட்பட்டு இதை உணராமல் பல தவறுகளை செய்வார்கள்.
பின்பு தாம் செய்ததை உணர்ந்து இறுதி காலத்தில் இந்த நெறிமுறைகளை பின்பற்றுவார்கள்.உலகத்தில் இருக்கக்கூடிய சுக மற்றும் துக்கங்களில் நிலையாமையையும், இறைவனிடம் இருக்கக்கூடிய நிலை பேற்றையும் உணர்ந்து உலக வாழ்க்கையின் மீது பற்றில்லாமல் இருக்கின்ற பொழுது பிரயோபவேசம் மேற்கொள்ளலாம்.
ஒருவேளை பிரயோபவேசம் மேற்கொண்ட பிறகு மீண்டும் உலக வாழ்க்கையில் வாழ விருப்பம் ஏற்படுமேயானால் பிரயோபவேசத்தை இடையிலேயே விட்டுவிடலாம். சான்றோர்கள் ஒருவரின் மூலம் பிரயோபவேசம் செயலுக்கான பிராயசித்தம் செய்த பிறகே சம்சார வாழ்க்கையை ஒருவர் மேற்கொள்ள வேண்டும்.அவ்விதம் வாழும் பொழுது அறநெறி வழுவாது வாழ்தல் மிகவும் அவசியமாகும்.
ஒருவர் சம்சார வாழ்க்கையை விடுத்துவிட்டு சந்நியாச வாழ்க்கையை வாழ விரும்பி, ஆசிரமத்தை அமைத்து, நியம விதிகளின் அடிப்படையிலும், அறநெறியின் அடிப்படையிலும் வாழ்ந்து வரும் வேளையில் மாண்டு போனால் அவன் சந்நியாச ஆசிரமம் ஏற்ற நாள் முதல் சமாதியான நாட்கள் வரை வாழ்ந்த ஒவ்வொரு நாளுக்கும் இறந்தவர் இரண்டு வேள்விகள் செய்த பலன்களை அடைவார்.
மகா பாவமான செயல் எது?ஒருவர் உடல் நோயினால் அவதியுற்று பலவித இன்னல்களை அனுபவித்து கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு அந்திமகாலம் மிகவும் நெருக்கத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்த பின்பு அறநெறியின் அடிப்படையிலும், நெறிமுறைகளின் அடிப்படையிலும் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்கின்றார்.
அவ்விதம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய உடலில் ஏற்பட்ட பிணிகள் யாவும் நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றார் என வைத்துக்கொள்வோம். புத்துணர்ச்சி பெற்றதும் மீண்டும் ஈடுபட விருப்பம் கொண்டு சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர் மகா பாவத்தை செய்ததற்கு சமமானவராகின்றார்.
அவர் பாவி என்பதில் துளியும் ஐயமில்லை. அவ்விதம் பாவம் செய்தவனை பார்த்தல் என்பது கூட மிகவும் பாவமாகும். அவனுடன் இருப்பவர்கள் இதை அறிந்தும் அவனுடன் தங்கி இருந்தாலோ அல்லது பழகி இருந்தாலோ அவர் செய்த பாவத்தில் பங்கு பெறுவார்கள்.
இதை உணர்ந்த அவரது குடும்பத்தினர்கள் உடனே அவரை விட்டுவிட்டு தொலை தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்விதமாக பயணங்களை மேற்கொள்ளும் போது பிரம்மாதி தேவர்கள் அவர்களுடைய மன உறுதியையும், உலகப்பற்றின் இன்மையையும் அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு தேவையான உதவிகள் அவ்விடத்தில் கிடைத்த வண்ணமாக இருக்கும்.
சொர்க்கத்தை அடைபவர்கள் யார்?தீர்த்த யாத்திரைக்கு சென்ற ஒருவர் பயணத்தின் வழியில் அதாவது இடையில் அவருடைய கர்ம வினைகளின் அடிப்படையில் மரணம் அடைந்தார் எனில் அவர் சொர்க்கத்தை அடைவார். சந்நியாசிகளையும், தீர்த்த யாத்திரை மற்றும் தல யாத்திரையை மேற்கொள்ளக்கூடியவர்கள் என அனைவரையும் தேவர்கள் பாதுகாக்கிறார்கள்.
ஆகவே அந்த பயணத்தின் முழுப்பொறுப்பும் தேவர்களையே சார்ந்ததாகும்.நயவஞ்சகமாக தீர்த்த யாத்திரை பயணிகளை தன்னுடைய சுய லாபத்திற்காக இடையூறுகளை ஏற்படுத்தக்கூடியவர்களும் அல்லது ஏதாவது ஒரு வகையில் அவர்களுடைய மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடியவர்களும் மகா பாவத்தை செய்ததற்கு சமமானவர்கள் ஆவார்கள். பூமியில் வாழும் பொழுது சுகமாக இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகத்தில் ஒவ்வொரு யுகங்களாக எமகிங்கரர்கள் மூலமாகவும், நரகத்தில் இருக்கும் தண்டனைகளாலும் கழிப்பார்கள்.
ஆகவே தீர்த்த யாத்திரை பயணிகளுக்கு முடிந்த அளவிற்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் தம்மால் இயன்ற அளவு உதவி செய்வார்கள் எனில் உதவி செய்தவர்களுக்கு இச்செயல் புண்ணியத்தை உருவாக்கும்.தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஒருவர் ஒரு புண்ணிய தலத்தில் தன்னுடைய உயிரை விட விரும்பி அங்கேயே நீண்ட நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்த அவ்விடத்தில் உயிர் பிரியாமல், தன்னுடைய தீவினை காரணமாக வேறொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் விதியின் வசத்தால் அவருடைய உடலில் இருந்து உயிர் பிரிந்து இறந்துவிட்டால், அவர் மறுபிறவியில் தெய்வ பக்தியும், இறை நம்பிக்கையும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தில் பிறந்து சாஸ்திர கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று, நல்லொழுக்கத்துடனும், பக்தியுடனும் வாழ்ந்து முடிவில் நல்லுலகை சென்றடைவார்.
முடிவில் மாற்றமும், மகா பாவமும்... :ஒருவர் ஒரு குறிப்பிட்ட திருத்தலத்திற்கு சென்ற பின்பு இந்த தலத்தில் தான் தன்னுடைய உயிர் விடுவேன் என்று வேத விற்பன்னர்கள் மூலமாக சங்கல்பம் செய்து, யாத்திரை செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய முடிவுகளில் சில மாற்றங்கள் செய்து, மீண்டும் தன்னுடைய குடும்பத்தையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ பார்க்க இல்லத்திற்கு திரும்பினால் அவரும் மகாபாவி தான்.கோ தானம் செய்த பலன் எப்போது கிடைக்கும்?விஷ்ணு தலங்களை நோக்கி செல்கின்றவர் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பசு மாட்டினை தானம் செய்த பலனை பெறுவார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் தான் மேற்கொண்ட இந்த பயணத்தை நிறைவு செய்யாமல் இல்லம் திரும்ப எண்ணம் கொண்டு அவர் இல்லத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பசு மாட்டினை கொன்றதினால் ஏற்படக்கூடிய தோஷத்தை பெறுகின்றார். ஆகையால் புண்ணியம் தேடும் எண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தான் மேற்கொண்ட தீர்த்த யாத்திரை பயணத்தை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்தல் வேண்டும்.
தீர்த்த யாத்திரை பயணங்களின் போது திருத்தலங்களில் தங்கியிருந்து கோவில் பணிகளை மனநிறைவோடு செய்து திருத்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை பக்தியோடு பெற்று உண்பார் எனில் அவர் தன்னுடைய இல்லற வாழ்க்கையில் செய்துவந்த பாவங்களை இத்தகைய புனித யாத்திரை பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும்.
ஒருவர் தீர்த்த யாத்திரை பயணத்தை முழுமையான மனதோடும், இறை பக்தியோடும் மேற்கொண்டவராயின் அவருடைய வாழ்க்கையில் செய்துவந்த பாவங்கள் யாவும் நீங்க பெற்று புண்ணியங்களை அவர் சேர்க்கத் துவங்குவார்.பரிகாரமே கிடையாத பாவம் எது?தீர்த்த யாத்திரை பயணங்கள் மேற்கொள்ளும் பொழுதும், திருத்தலங்களில் தங்கியிருக்கும் பொழுதும் ஏதேனும் பாவச்செயலை அவர் செய்துவிட்டார் எனில் அவர் செய்த அந்த பாவச்செயலுக்கு எப்பொழுதும் பரிகாரமோ, விமோச்சனமோ அவர்களுக்கு கிடைக்காது.
முதன்மை கடமை எது?கருடா... ஒருவர் யார் என்று தெரியாத அந்நியர்களுக்கு உதவி செய்து அவர்கள் மூலம் நல்ல பெயர்களை எடுப்பதை காட்டிலும் தன்னுடைய பெற்றோர்களுக்கும், தன்னுடன் பிறந்தவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வது என்பதே முதன்மை கடமையாகும். பெற்றோரின் மனதினை குளிர செய்யாமல் எந்த செயலை செய்தாலும் அதில் முழு பயன் கிடைப்பது என்பது மிகவும் குறைவாகும்.
பெற்றோரும் தன் மகன் செய்கின்ற செயல்களின் தன்மையையும், அதில் இருக்கும் நன்மைகளையும் உணர்ந்து தன்னுடைய மகனை வாழ்த்த வேண்டும்.அதை விடுத்து பெற்றோர்கள் நயவஞ்சகமாக செயல்பட்டார்கள் எனில் நன்மையை செய்ய தடையாக இருக்க என்ன தண்டனை கிடைக்குமோ, அவர்களுக்கும் அதே தண்டனை கிடைக்கும். பலவிதமான இன்னல்களுக்கு இடையே கஷ்டப்பட்டு சேர்த்த பொருளை நல்லவிதமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் செலவிட வேண்டும்.
தான் சேர்த்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பூமியில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் பிறப்பு எவ்விதம் இருக்கின்றதோ, அதே போல இறப்பு என்பது உறுதியானது ஆகும்.ஆகவே அதை உணர்ந்து நிலையற்ற செல்வங்களின் மீது விருப்பம் கொள்ளாமல், நிலையான செல்வங்களின் மீது விருப்பம் கொள்ள வேண்டும்.
நிலையான, நிலையற்ற செல்வங்கள் என்று உணராத பகுத்தறிவாளர்கள் நிலையில்லாத செல்வத்தை விரும்பி அணிந்து கேளிக்கையில் ஈடுபட்டு செல்வத்தை விரயமாக்குவது மட்டுமின்றி, பாவத்தின் அளவுகளையும் அதிகமாக்கி கொள்கின்றார்கள். சம்சார சமுத்திரத்தில் ஆழ்ந்து கிடப்பவர்களை கண்டு காலனும் எள்ளி நகையாடி கொண்டிருப்பான். அவனுடைய பாவ கணக்குகளை எழுத முடியாமல் சித்திரகுப்தன் தவித்துக் கொண்டிருப்பான்.
வாழும் காலத்தில் தேடிய செல்வத்தை தானும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கும் கொடுக்காமல் மேலும் மேலும் பொருள் சேர்ப்பவர்கள் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ள வேண்டும். பொன்னும், பொருளும் ஒருவருக்கு உரித்தானது அல்ல. அவைகள் யாவும் கை மாறும் தன்மை உடையது. இவைகள் யாவும் நிலையற்ற செல்வங்கள்.
ஆகவே இவைகளை உணர்ந்து நிலையற்ற செல்வங்களை 'எனது எனது' என்று உரிமை கொள்ளாமல் அதை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை சந்ததியற்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் சேர்த்த சொத்துக்கள் யாவையும் தத்துப்பிள்ளைகளுக்கு கொடுத்து செல்கின்றார்கள். அந்த தத்துப்பிள்ளையும் ரத்த சம்பந்தம் இல்லாமல் இருந்தால் எவரோ ஒருவர் பெற்ற பிள்ளைக்கு அந்த செல்வமும் உரிமை ஆகின்றது.அதனால் இறந்தவருக்கு எந்தவித பயனும் இல்லை.
ஏன் இறந்த பின்பு அவர்களின் இடுப்பில் இருக்கக்கூடிய அரைஞாண் கயிறு கூட அவர்களுக்கு சொந்தமில்லை. எமலோக பயணத்தை மேற்கொள்ளும் பொழுதோ அல்லது எமலோகத்தில் இருக்கும் பொழுதோ பூமியில் சேர்த்த செல்வங்கள் யாவும் அவனுடன் வரப்போவதில்லை. வாழும் காலத்தில் இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு நல்ல காரியங்களை செய்து பாவங்களை குறைத்து புண்ணியங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மனிதர்களாக உடலுடன் கூடிய நிலையில் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் முடிந்த அளவு புண்ணியங்களை செய்தால் அவனுக்கு உயர்பதவி பூமியில் கிடைக்காவிட்டாலும், எமனின் உலகத்தில் நீதிகள் தழைத்திருக்கும் இடத்தில் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும்.நாம் செய்யும் காரியங்கள் நற்காரியங்களாக இருக்கும் பொழுது இப்பிறவியும், மறுபிறவியும் நம்மை மகிழ்ச்சியுடனும், சுகமாகவும் வாழவைக்கும்.
பகுத்தறிந்து உணரும் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நில தானம், கோ தானம், பல வேள்விகளை முன்னின்று செய்வதும், போரில் நேர்மையான முறையில் வீரத்துடன் போரிட்டு எவனொருவன் முன்னேறுகின்றானோ அவனே மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஏன் இப்பிறப்பிலும், மறு பிறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வான் என்று ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு எடுத்துரைத்தார்.ஜெகத்தை காப்பவரான ஜெகநாதன் கருடாழ்வாரிடம் இம்மையிலும், மறுமையிலும் நன்மை பயக்கக்கூடிய செயல்கள் யாது? என்று உரைத்துக் கொண்டிருப்பதை கேட்ட கருடாழ்வாருக்கு மேலும் ஐயங்கள் உருவாகத் துவங்கியது.
அதாவது, நித்திய சிரார்த்தம் செய்வதன் மூலம் இறந்தவர் நற்கதி அடைய இயலும் என்று கூறியிருந்தார் அல்லவா? நித்திய சிரார்த்தம் என்றால் என்ன? என்பதையும், அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதையும் பொறுத்து தனது மனதில் எழுந்த ஐயங்களை ஜெகத்தை காத்துக்கொண்டு இருக்கக்கூடிய ஜெகநாதனிடம் மனதில் தோன்றிய மற்றும் எழுந்த ஐயங்களை உரைத்து விலக்கி அருளுமாறு வேண்டினார் கருடன்.
கருடாழ்வார் எழுப்பிய வினாவிற்கு விடை அளிக்கும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணனும் நித்திய சிரார்த்தத்தை பற்றி எடுத்துரைக்க துவங்கினார்.நித்திய சிரார்த்தம் :கருடனே...!! உலகில் வாழ்ந்து மடிந்த அதாவது இறந்தவரை எண்ணி முதல் ஆண்டில் தினந்தோறும் அறிவில் சிறந்த, வேதம் உணர்ந்த சத் பிராமணன் ஒருவருக்கு உணவளித்து உபசரிப்பது நித்திய சிரார்த்தம் ஆகும்.அவரவர்களின் செல்வ நிலைக்கு ஏற்ப தினம்தோறும் அல்லது முக்கியமான புண்ணிய தினங்களிலும் அன்னத்தையும், நீரையும் தனித்தனியாக இரண்டு கும்பங்களில் நிரப்பி அதை வேதம் உணர்ந்த, உபசரித்த சத்பிராமணனுக்கு தானமாக அளித்திட வேண்டும்.
இவ்விதமாக நாள்தோறும் செய்துவர இறந்தவருடைய ஆன்மாவானது மகிழ்ச்சி அடையும். இறந்தவரின் ஆன்மா மட்டும் மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் இறந்தவனை இழுத்து செல்கின்ற எமகிங்கரர்களையும் இந்த தானமானது திருப்திப்படுத்தும். இதனால் இறந்தவரின் ஆன்மாவினை எமபுரத்தை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கின்ற ஓராண்டு காலத்திற்கும் எமகிங்கரர்கள் இறந்தவரின் ஆன்மாவிற்கு எந்தவிதமான இன்னல்களும், துன்பங்களும் நேராத வண்ணமாக அழைத்து செல்வார்கள்.
நித்திய சிரார்த்தம் என்பது இறந்த ஆன்மாவை மட்டுமல்லாமல் எமகிங்கரர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும்.12ஆம் நாளில் செய்ய வேண்டிய தானம் எது?ஒருவர் மடிந்த அதாவது இறந்துபோன 12ஆம் நாளில் அவருடைய ரத்த சம்பந்தமுடைய உறவினர்கள் இறந்தவரை எண்ணி எந்தவிதமான மன குழப்பங்களுக்கும் ஆட்படாமல் அதாவது, செலவாகின்றது அல்லது இந்த செலவு இந்த நிலையில் அவசியமா? என்றெல்லாம் எண்ணாமல், மனதிருப்தியுடன் இறந்தவர் நற்கதி அடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் 12 கும்பங்கள் (சொம்பு அல்லது குடம்) தானமாக செய்தல் வேண்டும்.வசதி இல்லாதவர்கள் அல்லது வறுமையில் வாடுகின்றவர்கள் 12 கும்பங்களை தானமாக தர இயலாவிட்டாலும், ஒரு குடத்தை என்னை நினைத்தும், ஒரு சொம்பை சித்ரகுப்தனை நினைத்தும் தானமாக கொடுக்க வேண்டும் என்று திருமால் கூறினார்.
மேற்கண்டவாறு திருமால் எடுத்துரைத்துக் கொண்டிருக்க கருடாழ்வார் ஜெகன்நாதனை நோக்கி மோட்சமும், சொர்க்கமும் ஒன்றா? அல்லது வௌ;வேறா? என்றும், ஒருவருக்கு மோட்சமும், சொர்க்கமும் எவ்விதம் கிடைக்கும்? அல்லது அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்.
கருத்துகள் இல்லை