2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா!📸


2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா நேற்று பிற்பகல் கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதி மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் திரு S. முரளிதரன் அவர்கள் தலைமையிலான இவ்விழாவில், பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


சிறப்பு விருந்தினர்களாக பூநகரி பிரதேச செயலாளர் வே. ஆயகுலன், வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி திரு பா. முகுந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், தேசிய ரீதியில் சாதனைபெற்ற பல வீர, வீராங்கனைகள் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்று விழாவுக்கு பெருமை சேர்த்தனர்.


இவ்விழாவிற்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வந்தன. பல்வேறு போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று கரைச்சி பிரதேச செயலக அணி சிறப்பாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.


புள்ளிவிவரங்கள் அடிப்படையில்,


நான்காம் இடம் – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் – 30 புள்ளிகள்


மூன்றாம் இடம் – பூநகரி பிரதேச செயலகம் – 82 புள்ளிகள்


இரண்டாம் இடம் – கண்டாவளை பிரதேச செயலகம் – 124 புள்ளிகள்


முதல் இடம் – கரைச்சி பிரதேச செயலகம் – 260 புள்ளிகள்


இன்றைய இறுதிநாள் நிகழ்வில் மெய்வல்லுநர் விளையாட்டுக்களுடன், பரபரப்பான கால்பந்தாட்ட போட்டியும் இடம்பெற்றது.


விழாவின் நிறைவில் அதிதிகளின் வாழ்த்துரைகள் இடம்பெற்று, வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


மாவட்ட அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் நான்கு பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பல்வேறு வயதினர் மற்றும் நிலைகளிலுள்ள வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிக்காட்டி விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.