அடுத்த தலைமுறைக்காக தனியொருவராய் போராடும் சுரேஷ் ராகவன்!
பட்டாம்பூச்சி இயற்கையின் அழகுமட்டுமல்ல.. அவசியமும் கூட.. ஆகையால், அழியும் தருவாயில் உள்ள பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார் சூழலியல் ஆர்வலர் சுரேஷ் ராகவன்.
பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் பட்டாம்பூச்சிகள் அழியும் தருவாயில் உள்ள நிலையில், அவைகளை காப்பதற்காகப் போராடி வருகிறார் கோவையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சுரேஷ் ராகவன்.
பட்டாம்பூச்சி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது, நாம் அதனை துரத்திப் பிடித்து விளையாடிய நம் பால்ய பருவம் தான். அவற்றின் வண்ணமயமான இறக்கைகள் மற்றும் மென்மையாகப் பறக்கும் அழகு இயற்கையின் அற்புதத்தை வெளிப்படுத்தும். ஆனால், பட்டாம்பூச்சி அழகிற்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழல் அமைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது நம்மில் இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?
நச்சுத்தன்மையற்ற, சுத்தமான சூழலில் மட்டுமே வாழும் பட்டாம்பூச்சிகள், சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் குறிக்கும் காரணியாக விளங்குகின்றன. மலர்களிலிருநு்து தேன் உறிஞ்சும்போது, மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்கின்றன. இது தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. பட்டாம்பூச்சிகளும், அவற்றின் கம்பளிப் புழுக்களும் பறவைகள், தவளைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாக உள்ளதால் மட்டுமே, உணவுச்சங்கிலி சமநிலையில் உள்ளது. ஒருவேளை உணவுச்சங்கிலில் மாறுபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும்?
இயற்கை சமநிலை பாதிப்பு
பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை காடழிப்பு, பூச்சிக்கொல்லி பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுப்பாடு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக குறைந்து வருகிறது. அவற்றைப் பாதுகாக்க, பூந்தோட்டங்களில் பூக்கும் தாவரங்களை வளர்ப்பது, பூச்சிக்கொல்லிகளைக் குறைப்பது, இயற்கை வாழிடங்களைப் பேணுவது மிகவும் அவசியம். பட்டாம்பூச்சிகள் இல்லையெனில், மகரந்தச் சேர்க்கை குறைந்து, தாவரங்களின் உற்பத்தி பாதிக்கப்படும். அது விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கும்.
18 ஆயிரம் வகை பட்டாம்பூச்சிகள்
உலகம் முழுவதும் 18,000 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. இந்தியாவில் 1,318 வகையான பட்டாம்பூச்சிகளும், அதில் 74 வகையான பட்டாம்பூச்சிகள் அழியும் தருவாயிலும் உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 582 வகையும், அதற்கு அடுத்ததாக, தமிழகத்தில் 325 வகையான பட்டாம்பூச்சி இனங்களும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் 337 வகைகள் உள்ளன. அதில், 40 வகையான இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அழியும் விளிம்பில் உள்ள இந்த பட்டாம்பூச்சிகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சுரேஷ் ராகவன் இந்தியாவில் அழியும் தருவாயில் உள்ள பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தியுள்ளார். இதற்காக பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இவரைப் பாராட்டியுள்ளனர்.
சுரேஷ் ராகவனின் தத்ரூப கலெக்ஷன்ஸ்
இந்தியாவின் சகாயத்ரி நீல இலை பட்டாம்பூச்சி
தமிழ்நாட்டின் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
கேரளாவின் மலபார் மயில் பட்டாம்பூச்சி
கர்நாடகாவின் தவிட்டு நிற பட்டாம்பூச்சி
மகாராஷ்ட்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலை புலி பட்டாம்பூச்சி
அருணாச்சல பிரதேசத்தின் ஜப்பானிய பைன் பட்டாம்பூச்சி
இதுகுறித்து சுரேஷ் ராகவன் கூறுகையில், "ஒரு பட்டாம்பூச்சியை வரைய 2 நாட்கள் வரை ஆகும். அதன் தன்மை மாறாமல் வரைய வேண்டும். குறிப்பாக, பட்டாம்பூச்சி எந்த அளவு உள்ளதோ அதே அளவு வரைய வேண்டும். பட்டாம்பூச்சி உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி என 2 வண்ணங்களில் இருக்கும். அதன் இறக்கைகளில் உள்ள முட்கள் மற்றும் நரம்புகளை சரியாக வரைய வேண்டும். அதன் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை முதற்கொண்டு அத்தனையையும் தத்ரூபமாக வரைந்தால் மட்டுமே விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வார்கள்,” என அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் நண்பன்?
"அழிந்து வரும் பட்டியலில் உள்ள வனவிலங்குகளை ஆவணப்படுத்தியதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவில் உள்ள அழியும் நிலையில் உள்ள பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தியுள்ளேன். உலகத்தில் மொத்தம் 18 ஆயிரம் வகை பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. இவை செழிப்பாக உள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படும்.
எத்தனையோ உயிரினங்கள் இருக்கும்போது பட்டாம்பூச்சி எதற்கு? என சிலருக்கு கேள்விகள் எழலாம். பட்டாம்பூச்சி பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். தட்பவெப்ப சூழ்நிலையை தக்க வைப்பதில், பட்டாம்பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் இனம் அழிந்தால், காலநிலையில் நினைத்துக் கூட பார்க்காத மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மண்புழு மட்டுமல்ல பட்டாம்பூச்சியும் விவசாயிகளின் நண்பன்தான்,” என்கிறார் சுரேஷ் ராகவன்.
பட்டாம்பூச்சியை பாதுகாப்பது நம் கடமை
மேலும், "நமக்கு தெரியாமலேயே பட்டாம்பூச்சிகளுக்கு பிடித்தமான மலர்களை நாம் பறித்து விடுகிறோம். அப்படி செடிகளில் உள்ள மலர்கள் குறையும்போது, அதன் எதிரொலியாகப் பட்டாம்பூச்சிகளின் இனமும் குறையத் தொடங்குகிறது.
குறிப்பாக கருவேப்பிலை, எலுமிச்சை செடிகளில் உள்ள ரசாயனங்களை உண்ணுவதற்காக பட்டாம்பூச்சிகள் படையெடுத்து வருகின்றன. விவசாயத்திற்கும் இயற்கை உரங்கள் பயன்படுத்தும் பழக்கம் குறைந்துள்ளது. ஆகையால், ரசாயனங்களை தவிர்த்துவிட்டு பட்டாம்பூச்சிகளை கவரக்கூடிய செடிகளை பயிரிட வேண்டியது அவசியமாகும்.
பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவே புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம். யானைகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் எங்கு அதிகமாக உள்ளதோ.. அங்குதான் பல்லுயிர் பெருக்கம் அதிகமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆகையால், பட்டாம்பூச்சிகளை காக்கும் முயற்சி நம் ஒவ்வொருவரின் கடமை.
வருங்கால சந்ததிக்கா!
வருங்கால சந்ததியினரைப் பாதுகாக்கவும், சுத்தமான பல்லுயிர் பெருக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக அழியும் தருவாயில் உள்ள பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தி வருகிறேன். இது ஒவ்வொரு பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். முடிந்த அளவு பட்டாம்பூச்சிகளை காப்பாற்ற வேண்டும்,” என்று கோரிக்கை விடுக்கிறார் சுரேஷ் ராகவன்.
பட்டாம்பூச்சிகள் இயற்கையின் அழகு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. அவற்றைப் பாதுகாத்தால் மட்டுமே, நாம் குழந்தைப் பருவத்தில் ரசித்து மகிழ்ந்த இந்த அற்புதத்தை, வருங்கால சந்ததியினரும் கண்டு அனுபவிக்க முடியும்.
கருத்துகள் இல்லை