தனியார் நிறுவனத்தின் 4 கோடி 69 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த மூவர் கைது!📸


தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 04 கோடி 69 இலட்சத்து 940 ரூபாவை திட்டமிட்டு கொள்ளையடித்தது தொடர்பாக அந் நிறுவனத்தின் உதவி முகாமையாளர், சாரதி மற்றும் வெளிநபர் ஒருவர் உட்பட மூன்று பேரை கட்டான பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணை பிரிவு பொலிஸாரும் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகள் இணைந்து நடாத்திய நடவடிக்கையில் கைது செய்தனர்.



ஸ்டெலின் ஒட்டோ மொபைல் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் கடவத்த சூரியபாலுவ பீரதேசத்தைச் சேர்ந்த 41 வயது ஹதுவல தேவகே சுமித் ஜயசிங்க, கந்தகெட்டிய, ரன்மல்வலயை சேர்ந்த 38 வயது துஷான் நரசிங்க மற்றும் கடவத்த, சூரியபாலுவையில் வசிக்கும் 28 வயது அவிஷ்க்க சதருவன் ஆகியோர்களே கைது செய்யப்பட்டனர்.



 இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில் சந்தேகநபரான உதவி முகாமையாளரும் சாரதியும் பொலிஸ் அவசர பிரிவு 119 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி நாம் பணத்தை எடுத்துச் செல்லும் போது கட்டான, யடியல பிரதேசத்தில் வைத்து இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எமது வாகனத்தின் குறுக்காக நிறுத்தி துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக முறையிட்டுள்ளனர்.


     இது தொடர்பாக நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஸோக்க தர்மசேனவின் ஆலோசனையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் சந்ரசிறியின் கண்காணிப்பில் கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதசிங்க தலைமையில் குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அயேஷா பெரேரா, உப பொலிஸ் பரிசோதகர்களான சேனாரத்ன, டயஸ், பொலிஸ் சார்ஜன் துலிப்(38852), பொலிஸ் கான்ஸ்டபல்களான குலதுங்க(82758), தனங்ஜய(97902), அகலங்க(102353) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் உடனடியாக செயல்பட்டு அப் பிரதேசத்தில் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களை பரிசீலித்த போது  குறித்த காலப்பகுதியில் அவ்வழியாக மோட்டார் சைக்கிள் எதுவும் பயணிக்கவில்லை என்பதையும் மேலும் இவர்கள் பயணித்த காரை இடையில் நிறுத்தி மற்றொரு கார் சாரதியுடன் கதைப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டனர். 


   இதனை அடுத்தி உதவி முகாமையாளர் மற்றும் சாரதியிடம் நடத்திய நீண்ட விசாரணையின் பின்னர் பொய்யான முறைப்பாட்டை செய்து இன்னும் ஒருவருடன் இணைந்து பணத்தை கொள்ளையிட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.


    இந்த தகவலுக்கு இணங்க செயல்பட்ட பொலிஸார் சாரதியின் உறவினரான  கடவத்த சூரியபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவி்ஷ்க சதருவன் என்பவரை கைது செய்து அவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த பணத்தையும் மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த இரு கார்களும்  கைபற்றப்பட்டன.


 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.