காணி விடுவிப்பு குறித்து முன்னணியினர் கருத்து தெரிவிப்பு!!
போர் முடிந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்ட விரோதமான கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் தக்க வைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ்மக்கள் தமது சொந்தக் காணிக்கு திரும்பிப் போக முடியாத நிலை உள்ளது. இதற்கு இந்த அரசும் இதற்கு முதல் இருந்த அரசுகளும் வைத்திருப்பது உண்மையில் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் குற்றம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாக நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் அதியுயர் பாதுகாப்பு வலயம் எனத் தெரிவித்து தனியார் காணிகள் எத்தனையோ ஏக்கர் கணக்கில் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டை பொறுத்தவரை அதன் 30 வீதமான நிலப்பரப்பு அதியுயர் பாதுகாப்பு வலயம் என்று தெரிவித்து சட்டவிரோதமாக சட்ட ஏற்பாடுகள் எதுவுமின்றி கைப்பற்றி வைத்துள்ளது.
அரசாங்கம் கைப்பற்றி வைத்திருப்பதற்கான சட்ட ஒழுங்குகள் எதுவுமின்றி தொடர்ந்தும் அந்த நிலங்களை வைத்திருக்கிறது. சமாதான முயற்சிகளின் போது சிறீலங்கா அரசாங்கம் நம்பியார் என்ற இந்திய இராணுவ அதிகாரியின் ஏற்பாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் மாற்றங்களை செய்வதற்கு அவருடைய ஆலோசனைகளை அதன்படி செயல்படப் போவதாக அறிவித்திருந்தது.
நம்பியாருடைய அறிக்கையை எடுத்துப் பார்த்தால் அது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எறிகணைத் தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்ற வரைக்கும் உயர்பாதுகாப்பு வலயங்களில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாமல் போனால் அல்லது இந்த எறிகணை காரணமாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இல்லாமல் போனால் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தையும் அகற்றலாம் என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
இன்றைக்கு போர்முடிந்து 16 வருடாங்களாகின்றன. ஆனால் இன்றைக்கும் அந்த அதியுயர் வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் தக்க வைத்து பாதுகாக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்களின் சொந்தக்காணி நிலைக்கு திரும்பி போக முடியாத நிலைக்கு இந்த அரசும் இதற்கு முதல் இருந்த அரசும் வைத்திருப்பது உண்மையில் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் குற்றமாகும்.
எங்களை பொறுத்த வரையில் தெற்கிலே அவ்வாறான ஒரு மோசமான செயல்பாடு நடைப்பெற்றதாக இருந்தால் இன்று அந்த அரசாங்கம் அடித்துக் துரத்தப்பட்டிருக்கும் தொடர்ந்தும் வட- கிழக்கிலே எந்த விதமான நியாயமும் இல்லாமல் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகளை பறித்து வைத்திருப்பது முற்றிலும் தவறான ஒரு செயல் என்றார்
கருத்துகள் இல்லை