சபரிமலை ஐயப்பன் ஆலயம் புனித தலயாத்திரையாகப் பிரகடனம்

 


இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தி வசதிகளை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


நீண்டகாலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01ஆம் தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்தி;ற்குச் சென்று தரிசிக்கின்றனர். தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான இலங்கையின் இந்து பக்தர்கள் கலந்து கொள்கின்ற தலயாத்திரை மையமாகவும் அமைந்துள்ளது. அதற்கமைய, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வழிபாட்டு தரிசிப்பானது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


2. பெலிசு நாட்டுடன் இராஜதந்திரத் தொடர்புகளை ஆரம்பித்தல்

கோதமாலா, சூரிநாம், பெலிசு, ஹொன்டுராஸ், நிகரகுவா, அன்ரிகுவா மற்றும் பார்பியூடா, பார்படோஸ், டொமினிகா, க்ரனாடா, ஹெயிட்டி, புனித கீட்ஸ் மற்றும் நேவிஸ், புனித லூசியா மற்றும் புனித வின்சன்ட், க்ரனாடீன்ஸ் போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திரத் தொடர்புகளை நிறுவுவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பர அனுகூலங்களுக்காக அரசியல், சமூக பொருளாதார மற்றும் கலாச்சார விவகாரங்களில் நிலவுகின்ற நல்லுறவுகளையும் ஒத்துழைப்புக்களையும் மேம்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கும் பெலிசு அரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கான பிரகடனத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


3. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைப் பயன்பாட்டுக் காணிகள்/சொத்துக்களின் உச்சப் பயன்பாட்டுக்காக பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குதல்

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பிராந்தி பெருந்தோட்டக் கம்பனிகள், தேசிய கால்நடைவளங்கள் அபிவிருத்திச் சபை, இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாகவுள்ள குறைப் பயன்பாட்டுக் காணிகளை அடையாளங் கண்டு, குறித்த காணிகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள கருத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட தனியார் முதலீடுகளுக்கு வழங்குவதற்கு 2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.


அதன் கீழ் பெருந்தோட்ட/ விவசாய நடவடிக்கைகள், பெருந்தோட்டத்துடன் தொடர்புடைய சுற்றுலாத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகள், கால்நடைவள அபிவிருத்தி, நீர் மின்னுற்பத்தி, சூரிய மின்னுற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்திகள், நன்னீர் மீன்பிடித்துறை மற்றும் ஏனைய பெருந்தோட்டத்துறை பொருளாதார புத்தாக்க நடவடிக்கைகளுக்கான முதலீடுகளுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளுக்குப் பொருத்தமான முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பல் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


4. இறப்பர் செய்கைக் காணிகளை வரைபடமாக்கல்/பதிவு செய்தல் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குதல்

இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற இறப்பருக்கான பிரதான சந்தையாக அமைகின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறப்பர் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் போது இணங்கியொழுக வேண்டிய புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பர் விநியோகச் சங்கிலியில் காடழிப்பு இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான புதிய ஒழுங்குவிதிகளை 2025.12.31 ஆம் திகதிக்குப் பின்னர் கடைப்பிடித்தல் வேண்டும். இறப்பர் விநியோகச் சங்கிலியில் காடழிப்பு இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக இறப்பர் பயிர்ச்செய்கைக் காணிகளை வரைபடமாக்கல் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.


இக்கருத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் காணப்படும் சிறிய இறப்பர் தோட்டங்களின் உரிமையாளர்களின் இறப்பர் செய்கைக் காணிகளை வேறுவேறாகப் புவிசார் வகைப்படுத்தல் மற்றும் புதிய புவிசார் கட்டமைப்புத் தொழிநுட்பத்தைப் (GIS) பயன்படுத்தி காணி உரிமை மற்றும் பயன்பாடு தொடர்பாக உறுதிப்படுத்தக் கூடிய தரவுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறப்பர் செய்கைக் காணிகளை வரைபடமாக்கல்/பதிவு செய்வதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


5. ‘சிலோன் ரீ’ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை தேயிலை சபையின் 50% வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம்

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சர்வதேச கொள்வனவாளர்களை கண்டறிதல் மற்றும் உலகளாவிய ரீதியில் ‘சிலோன் ரீ’ வர்த்தக நாமத்தை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கான 50% வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேயிலை சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வர்த்தகக் கண்காட்சி முன்மொழிவுத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


6. மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் – 2025 இனை நடைமுறைப்படுத்தல்

இலங்கையில்அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு தேசிய மட்ட அபிவிருத்தி வேலைத்திட்டமாக மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 2,000 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ்

• உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்

• உள்நாட்டு உற்பத்தி இயலுமைகளை ஊக்குவித்தல்

• சேவை விநியோக முறைகளை வினைத்திறனாக்குதல்

• வணிக மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தல்

• நிறுவன ரீதியான இயலளவுகளை பலப்படுத்தல்


போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. வறுமையை அடையாளங் காண்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற உலகளாவிய சுட்டியாக அமைகின்ற பல்பரிமாண வறுமைச் சுட்டியின் பிரகாரம், குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள மாவட்ட வறுமை மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் 2025 இனை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுவேறாக ஒதுக்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


7. இலங்கைக்கு ஐதரசன் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த வேண்டிய சமகால நிலைமை மற்றும் மூலோபாய பயணம்

காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி கலப்பு பன்முகப்படுத்தலுக்காக இலங்கை பேண்தகு தீர்வுகளைக் கண்டறிந்து வருவதுடன், அதன் தேசிய மட்ட மற்றும் உலகளாவிய காலநிலை இலக்குகளுடன் இணங்கியொழுகும் சாத்தியவள மாற்று வலுசக்தி மூலங்களாக பசுமை ஐதரசன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வலுசக்தி அமைச்சு தேசிய ஐதரசன் திட்ட வரைபடத்தை வெளியிடல் மற்றும் கணிசமான மீள்புதிப்பிக்கத்தக்க ஐதரசன் கொள்கை வரைபு உள்ளிட்ட முக்கியமான சில படிமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அதற்கு ஏற்புடைய கொள்கைச் சட்டகமொன்றை மேம்படுத்தல், ஆற்றல் வளப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் வெற்றிகரமான நடைமுறைப்படுத்துவதற்குமான விரிவான உடன்பாடுகளை எட்டுவதற்கு மக்களுடைய கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பிரதான பங்காளர்களின் செயலமர்வுகளை நடாத்துவதற்கும் வலுசக்தி அமைச்சு எதிர்பார்க்கின்றது. அதற்காக உள்நாட்டு நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கமைய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தரநியமங்கள் மற்றும் செயலாற்றுகை அளவுகோல்களுடன் இணங்கியொழுகும் வகையில் இலங்கையில் ஐதரசன் துறையை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற படிமுறைகள் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.


8. நகர அபிவிருத்தி விடயதானத்துடன் தொடர்புடைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல்

2021 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் ஆரம்பிக்கப்பட்ட 18 கட்டுமானப் பணிகள், பொருளாதார நெருக்கடிகளால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கும், அமுல்படுத்தும் வேகத்தைக் குறைப்பதற்கும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள18 கருத்திட்டங்களில், 06 கருத்திட்டங்களின் பணிகள் தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, வேலைகள் பூர்த்தி செய்யப்படாத கீழ்க்காணும் கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து அமுல்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி,நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வலப்பனை உத்தேச வாராந்த சந்தை மற்றும் பல்நோக்கு கட்டடத்தை நிர்மாணித்தல்

• தவுலகல வாராந்த சந்தை மற்றும் வாகனத்தரிப்பிட அபிவிருத்தி

• முல்லைத்தீவு பஸ் நிலைய அபிவிருத்தி

• ஹபரண சுகாதாரநல வசதிகள் மற்றும்நில அலங்காரங்களை மேம்படுத்தல்

• ருவன்வெலிசாய தூபி வாகனத்தரிப்பிடத்திலிருந்து ஜேதவனராம தூபி வரைக்குமான நடைபாதை அபிவிருத்தி

• பொலன்னறுவை புதிய நகர நிர்வாகக் கட்டிடத்தை நிர்மாணித்தல்

• அம்பாறை வாராந்த சந்தை கட்டுமானம்

• தெய்யந்தர பஸ் நிலைய அபிவிருத்தி

• கம்பஹா பொதுச் சந்தை அபிவிருத்தி

• பேரலந்த ஈரநிலப் பூங்கா அபிவிருத்தி

• பாணந்துறை பொதுச்சந்தை மற்றும் பல்நோக்குக் கட்டிட அபிவிருத்தி


9. ‘Healthy Food – Happy Life–ஆரோக்கியமான வாழ்வுக்கு பாதுகாப்பான உணவு’– தேசிய ஊடகச் செயற்பாடுகள்

சமகால சமுதாயத்தில் உணவுகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதுசார்ந்த சட்டப் பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் இணங்கியொழுகாமை பற்றி அரசு நேரடியாகத் தலையிடுவதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கையர்களின் போசாக்கு பற்றி சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ‘Healthy Food – Happy Life– ஆரோக்கியமான வாழ்வுக்கு பாதுகாப்பான உணவு’– தேசிய வேலைத்திட்ட தேசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. பெண்கள், பாடசாலை மாணவர்கள், உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வைத்தியர்கள், போசாக்கு நிபுணர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், விவசாயிகள் மற்றும் சமையல் கலைஞர்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த தேசிய ஊடக நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியாவுக்கான பிராந்தியக் குழுவின் 78ஆவது கூட்டத்தொடருக்கான உபசரிப்புக்கள்

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியவுக்கான பிராந்தியக் குழுவின் 78ஆவது கூட்டத்தொடர் 2025 ஒக்டோபர் மாதம் 13 தொடக்கம் 15 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பிராந்தியக் கூட்டத்தொடரின் மூலம், பிராந்திய சுகாதார நிகழ்ச்சிநிரல் தயாரித்தல், முன்னேற்ற மீளாய்வு மற்றும் கவனம் செலுத்தப்பட வேண்டிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கைத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அதற்காக, சுகாதார அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 11 அங்கத்துவ நாடுகளிலிருந்து உத்தியோகபூர்வப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பின் செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்குபற்றுகின்றனர். அதற்கமைய,உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய குழுவின் 78ஆவது கூட்டத்தொடரை இலங்கையில் நடாத்துவதற்காக உபசரிப்புக்களைப் பொறுப்பேற்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. இலங்கையில் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தியை அபிவிருத்தி செய்தல்

2030 ஆம் ஆண்டாகும் போது மின்னுற்பத்தியில் 70% வீதமான வலுசக்தி மூலங்கள் மீள்புதிப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் மின்னுற்பத்தி செய்கின்ற போது காபன் வெளியேற்றத்தை தடுப்பதை இலக்காகக் கொண்டு, அரசு மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியை தேசிய முன்னுரிமையாக அடையாளம் கண்டுள்ளது. அதற்கமைய, 2026- 2030 ஆம் ஆண்டில் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நடுத்தர 10% வீதமான மேற்பரப்புப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட 3,000 மெகாவாற்று மதிப்பிடப்பட்ட மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி இயலளவுகளுடன் கூடிய ஆற்றலவளங்களைக் கொண்ட நீர்த்தேக்கங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்ட அபிவிருத்தியின் புதிய முறையாக மிதக்கும் சூரிய மின்னுற்பத்தியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முற்கூட்டிய சாத்தியவளக் கற்கைகள், சாத்தியவளக் கற்கைகள் மற்றும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக ஆலோசனைச் சேவையை வழங்குவதற்காக அங்கீகாரம் பெற்ற கம்பனிகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுக் கொண்டு பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டமூலத்தைத் தயாரித்தல்

2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதிக்கடன் சட்டத்தை நீக்கி நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காகவும், 2023.10.09 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனாலும், பல தரப்பினர்களால் இச்சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தனது ஆணையையும் பிறப்பித்துள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் பொருளாதார நெருக்கடிகளின் தாக்கங்களுக்கு தீர்வுகாண்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்குஇச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கம் பற்றி பல்வேறு தரப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் மாற்று முன்மொழிவுகள் தொடர்பாக ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு குறித்த செயற்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நியமிக்கப்பட்ட கொள்கை/நடவடிக்கை குழுவால் உயர்நீதிமன்ற ஆணையின் பிரகாரம் திருத்தளங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் பெற்றுக்கொண்டுள்ள யோசனைகளையும் உள்வாங்கி, அதன் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கும், மேற்குறிப்பிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜளாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்

பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் பதவி வெற்றிடம் நிலவுவதுடன், தற்போது பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான கசுன் வெல்லஹேவா அவர்கள், தனதுநிரந்தரப் பதிக்கான கடமைகளுக்கு மேலதிகமாக இப்பதவியில் மேலதிக கடமைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது வடமத்திய மாகாண விவசாய, விவசாய உற்பத்திகள் சந்தைப்படுத்தல், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரம், மீன்பிடி நடவடிக்கைகள் அமைச்சின் செயலாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஆர்.எம்.காமினி சேனாரத்ன அவர்களை பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்குப் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அவரை பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கீழ்வரும் “செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகங்களாக” 2025.07.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• IFC Colombo 1 (Pvt) Ltd

• ICC Port City (Pvt) Ltd

• Ceylon Real Estate Holdings (Private) Limited

• Clothespin Management and Development (Private) Limited


அதற்கமைய, கீழ்வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53ஆவது பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள கட்டளைகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனபதிபதியவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2445/04 ஆம் இலக்க 2025.07.14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்

• 2445/05 ஆம் இலக்க 2025.07.14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்

• 2445/02 ஆம் இலக்க 2025.07.14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்

• 2445/03 ஆம் இலக்க 2025.07.14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.