வேலணையில் தொடரும் சீரழிவு!📸
மண்டைதீவு மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்திலுள்ள வயல்வெளிகளுக்கு விசமிகள் தீ வைத்ததால், புற்கள் பற்றி எரிந்து மக்கள் வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் கால்நடைகளும் பறவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து பிரதேச சபை தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், சுவமினாதன் பிரகலாதன், கருணாகரன் நாவலன் மற்றும் செந்தமிழ்ச் செல்வன் கேதீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீயணைப்புப் படையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கடும் காற்றினால் வேகமாகப் பரவிய தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடினர்.
அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை முதல் அராலிச் சந்தி வரையிலான பல கிலோமீட்டர் தூர வயல்வெளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் விசமிகள் தீ வைத்து வருவதாகவும், இதைத் தடுக்க அதிகாரிகள் திணறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயல்வெளிகள் அமைந்துள்ள பகுதி பறவைகள் சரணாலயம் என்பதால், பருவ காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். தொடர்ச்சியான இந்த தீவைப்புச் சம்பவங்கள், பறவைகள் சரணாலயத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
தீயினால் புற்கள் எரிந்து போவதால், அவற்றை உணவாகக் கொள்ளும் கால்நடைகள் உணவின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்கின்றன. இதனால் அலைந்து திரியும் கால்நடைகளால் புதிய பிரச்சினைகள் உருவாகி, மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.










.jpeg
)





கருத்துகள் இல்லை