பெண்களும் ஊடகமும் -- கோபிகை!!

 





நாட்டின் கண்கள் பெண்கள் என்பார்கள், இன்றைய காலத்தில் இது எந்த அளவுக்கு பொருத்தப்பாடாக இருக்கிறது என்பது கேள்விக்குறியான விடயமே. குழந்தையாக இருக்கிற போது கூட, பெண் என்றால் பாதுகாப்பற்ற நிலைமைதான் காணப்படுகிறது.

ஊடகங்களில் பணியாற்றும் பெண்களும் சரி, ஊடகங்களில் பெண்கள் காண்பிக்கப்படும் முறைமையும் சரி, இரண்டுமே யோசிக்க வேண்டிய விடயங்களே.
ஊடகத்துறையில் பெண்கள் இணைந்து பயணிப்பதென்பது மிகவும் சவாலான ஒரு விடயமே. முன்னைய காலங்களில் பெண்கள் ஊடகத்துறையில் பயணிப்பது மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனாலும் தற்போது அது மாறிவரும் ஒரு விடயமாக உள்ளது.

ஊடகத்தை தொழிலாக ஏற்று பயணிக்கும் பெண்களுக்கு பல்வேறான சவால்கள் இருக்கின்றன. அவர்கள் ஆண்களோடு கலந்து பழகும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறான நேரங்களில் பாதுகாப்பு, நம்பிக்கை என்பவை மிக முக்கிய பங்காற்றுகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஊடகப்பணிகள் சார்ந்து செயற்படும் போது, அவர்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. நேரங்கணித்துச் செயற்படமுடியாத நிலை, நேரம் காலம் என்பவற்றை வரையறுக்காமல் தொழில் செய்ய வேண்டும், செய்திகளுக்காக எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லக்கூடிய நிலைமை, பெண்களுக்கான உடல் உபாதைகள் என்பவற்றை எதிர்கொள்வது, பெண்களுக்கு சற்றே கடினமான காரியம்தான் எனினும் இன்றைய காலத்தில் விரிவடைந்துள்ள சிந்தனை வளர்ச்சி காரணமாக பெண்கள் சவாலுடன் இத்துறையில் உள்நுழைவதை அதிகப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், முறையற்ற வேலை நேரம், அதிக நேரம் வேலை பார்ப்பது, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகள் கொண்ட பத்திரிகைத் துறையில் பெண்கள் வேலை பார்ப்பதை அவர்களது குடும்பத்தினர் விரும்புவதில்லை. அதுவும் ஊடகத்துறையில் உள்நுழைய விரும்பும் பெண்களுக்கு மிகப்பெரியதொரு சவாலான விடயமாகும்.
இவற்றை எல்லாம் தாண்டியும் பெண்கள் ஊடக மற்றும் இதழியல் துறையில் உள்நுழைந்து சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

ஆங்கில பத்திரிகையாளர் பெஸ்லி ரெய்னர் பாக்ஸ், 1900 களில் இவரது பிரவேசம் இருந்துள்ளது.

நோர்வே நாட்டைச்சேர்ந்த ஹேன் ஹரி போசம் மற்றும் அமெரிக்க பத்திரிகையாளர் லூசி மோர்கன், கிறிஸ்ரியான் அமன்பூர், மரியா தெறசா, மேரி கெல்வின், மார்த்தா றெடார்ஸ், ஆன் ஹரி, லேறா லோகன், காதி கனொன், லிடியா ஷசோ, ஜில் அப்றம்சன், நயோமி க்லெய்ன், ராணா அயூப், நிர்மலா சீதாராமன், அனிதா பிரதாப், சோனியா சிங், அனிதா பிரதாப், அனுபமா சந்திரசேகர் இப்படி பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய ஊடகவியலாளர்கள் பலர் இந்த துறையில் பங்காற்றியுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கான தடைகள் பலவற்றை உடைத்துக்கொண்டே இவ்வாறாரதொரு சாதனைப் பயணத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது மறுக்க முடியாத விடயம்.

இது இவ்வாறிருக்க, ஊடகங்கள் பெண்களைச் சித்தரிக்கும் முறைகள் குறித்து பார்ப்போமானால் அது ஒரு சிந்திக்க வேண்டிய விடயமாகவே உள்ளது.
அதாவது, விளம்பர உலகில் வருமானமீட்டும் நோக்கில் பெண்களே பெரும்பாலும் ஊடகங்களால் பல பல வடிவங்களில் சித்தரிக்கப்படுகின்றனர். அதிலும் துணி துவைக்கவும், அழகு மங்கையாகவும், சுத்தப்படுத்துபவர்களாகவும் பெண்களே காண்பிக்கப்படுகின்றனர்.

பல்துறை விற்பன்னர்களாகவோ சாதனையின் உச்சம் தொட்டவர்களாகவோ பெண்கள் காண்பிக்கப்படுவது மிகவும் குறைவானதாகவே உள்ளது.

இன்றைய தொலைக்காட்சி நாடக உலகில் பெண்கள் வில்லிகளாகவும் மிக மோசமான குணம் கொண்டவர்களாகவும் காட்டப்படுகின்றனர் என்பதும் இது சமூகத்திற்கு பின்னடைவை கொடுக்கின்ற ஒரு விடயம் என்பதும் மறுக்க இயலாத அதிகம் பேசுபொருளாகியுள்ள ஒரு விடயமே.

தமக்கான சுய சிநாதனைகளோடு சுதந்திரமாக தங்கள் கருத்துகளை முன்வைப்பவர்களாகவும் பெண்கள் வாழுகிற நிலைமை அனைத்து நாடுகளிலும் உண்டாக வேண்டும்.

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் பெண்கள் ஊடகத்துறையில் சுதந்திரமாக செயற்படும் நிலை ஏற்பட வேண்டும்.
பெண்கள் மனதாலும் உடலாலும் ஊடகத்துறையில் பாதுகாப்பை உணரும் நிலை உருவாக்கப்படும் போதே ஊடகத்துறையில் அவர்கள் பரவலாக பயணிக்கமுடியும் என்பது திண்ணம்.

கோபிகை (jayela)












கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.