பெண் மன ஓசை - கோபிகை!!
உங்களால்
தூக்கி எறியப்பட்ட
ஒரு மூங்கில் குழல்தான்
நான்.
புழுதியால்
மூடப்பட்ட
என் மேனிக்கு
அழுக்கு என்று பெயரிட்டீர்கள்...
உங்கள் பாதங்களில்
நான் மிதிபட்ட போது
எத்தி
எறிந்து விட்டீர்கள்...
வீதி ஓர கற்களில்
வீசப்பட்ட நான்
அதன் உரசலில்
சிறு துளைகளை உருவாக்கினேன்...
காற்று எனக்குள்
உட்புகுந்தது
அந்த இசை
ஒரு லயமாய் வெளிப்பட்டது
பல விழிகளில்
நான் மொழியானேன்
பல மனங்களில் நான்
தனியானேன்...
எனக்கும்
பெயர் வைத்தீர்கள்
என்னையும்
சபை அமர்த்தினீர்கள்...
வீசி எறிந்த போது
விளங்கியிருக்காத என்
வேதனையைப் போலவே
இதுவும்
விளங்கப்போவதில்லை உங்களுக்கு...
ராஜாக்களின் புகழ்
சொல்லப்படுவதைப்போல
அந்தப்புர ராணிகளின்
மனக்கிடக்கைகள்
வெளிவருவதே இல்லை...
இதுதான் யதார்த்தம்...
கோபிகை. (Jayela)

.jpeg
)





கருத்துகள் இல்லை