கனடாவில் மீண்டும் புதியதொரு தமிழர் தேர்தல் வரலாறு!


கனடாவில் தமிழர் அதிகம் வாழும் இரண்டு பிரதான நகரங்களில் இரு வட்டாரங்களுக்கான இடைத் தேர்தல்கள் இன்று திங்கள் செப்டம்பர் 29 ஆம் நாள் நடைபெற்றன. இந்த இரண்டு வட்டாரங்களிலும் முன்னர் நகரசபை பிரதிநிதிகளாக இருந்தவர்கள் ஏப்பிரலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவானதால் உருவான வெற்றிடங்களிற்கே இவ் இடைத் தேர்தல்கள் நடைபெற்றன.


ரொரன்ரோ மாநகரசபையின் 25 ஆவது வட்டாரம் - ஸ்காபரோ ரூச்பார்க் - இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் தமிழர் நீதன் சான் வெற்றி பெற்றுள்ளார்.


1. Neethan Shan - 5174 ... 26.86%

2. Anu Sriskandarajah - 3374 ..... 17.58%

3. Shawn Allan - 2834 ..... 15.23%


இந்த வட்டாரத்தில் 20 பேர் போட்டியிட்டு இருந்தனர். மொத்த வாக்காளர்களில் 24.9 சதவீதம் அதாவது 19260 பேர் வாக்களித்து இருந்தனர். 


இங்கு நீதன், அனு, சியான், அனித்தா என நான்கு தமிழர்கள் போட்டியிட்டது தமிழர்களிடையே விசனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் முதல் இரண்டு இடங்களிலும் தமிழர்களே வந்தார்கள். சியான் 1441 வாக்குகளுடன் 6வது இடத்திலும் அனித்தா 507 வாக்குகளுடன் 8வது இடத்திலும் வந்தனர். நீதன் இதே வட்டாரத்தை பிரதிநிதித்துவப் படுத்தி பின்னர் 2018இல் நடைபெற்ற தேர்தலில் 154 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர். இம்முறை மீண்டும் தெரிவாகி ரொரன்ரோ மாநகர சபையில் இரண்டாவது தமிழராக உள்நுழைகின்றார். பார்த்தி கந்தவேல் ஏற்கனவே உறுப்பினராக தெரிவாகி உள்ளார். கனடிய ஈழத் தமிழர் வரலாற்றில் கனடாவில் முதலாவது பெரிய மாநகரசபையான ரொரன்ரோ மாநகர சபையின் 25 உறுப்பினர்களில் இருவர் தற்போது ஈழத் தமிழினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அது மட்டுமன்றி இதே பகுதியில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் - அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, ஒன்ராரியோ மாநில பாராளுமன்ற உறுப்பினர் - அமைச்சர் விஜய் தணிகாசலம், தற்போது ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினரானார் நீதன் சான், கல்விச் சபையை உறுப்பினர் அனு சிறீஸ்கந்தராஜா என நான்கு மக்கள் பிரதிநிதித்துவ நிலைகளையும் ஈழத் தமிழர்களே அலங்கரித்து நிற்கின்றனர். இது கனடிய வரலாற்றில் மட்டுமல்ல ஈழத்தமிழர் புலம்பெயர் வரலாற்றிலும் ஒரு மைல்கல் ஆகும். அத்துடன் இதில் கரி, விஜய், நீதன் மூவரும் கனடாவின் மூன்று பிரதான காட்சிகளையும் சேர்ந்தவர்கள் என்பது வேறு.


இரண்டாவதாக மார்க்கம் நகரசபையில் தமிழர் அதிகம் வாழும் வட்டாரம் 7 இற்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தமிழர்களிடையே பிரிந்த வாக்குகள் வெற்றி வாய்ப்பை தமிழர் இழக்க காரணமாயின.


1. Nimisha Patel - 2954 

2. Killi Chelliah - 2098

3. Aranee Muruganantham - 2055


8 பேர் போட்டியிட்டு 8183 வாக்குகள் பதிவான இவ் இடைத்தேர்தலில் வலுவான மூன்றாவது போட்டியாளர் இருந்தமை தமிழர்கள் வாக்கைப் பிரித்தால் வெற்றி வாய்ப்பை இழக்கும் சவாலை சுட்டி நிற்கின்றது. நீண்ட காலமாக தமிழர் பிரதிநிதித்துவப் படுத்திய இந்த வட்டாரம் தமிழர்கள் வாக்கை பிரிந்ததால் இத்துடன் இரண்டு முறை இழக்கப்பட்டுள்ளது.


அடுத்த ஆண்டு 2026 இல் நடைபெறவுள்ள பூர்வாங்க தேர்தலில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டு இவ் வட்டாரத்தை மீண்டும் வென்றெடுக்க தமிழர் சமூகம் முனைய வேண்டும் என்பதே பலரின் பேரவா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.