ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்!

 


மன்னார் நகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.


மன்னாரில் நேற்றுமதியம் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகரசபையினால் பல்வேறு விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


மன்னாரில் ஞாயிறு தினங்களில் காலை முதல் மதியம் 2 மணி வரை தனியார் வகுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரத்தில் போக்குவரத்தை இலகுப்படுத்துவதற்காக புதிய நடைமுறைகளை அமுல்படுத்துகின்றோம். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மன்னார் நகரத்தில் பஸ் போக்குவரத்து சபை மற்றும் தரிப்பிடத்தில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.பல இடங்களில் ஒரு வழிச்சாலையாகவும்,வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கான இடங்களை அடையாளப்படுத்தியிருக்கிறோம்.


மேலும் மன்னார் நகரசபைக்குட்பட்ட காணிகளை எல்லைப்படுத்தி அக்காணிகளை துப்புரவு செய்து எல்லைப்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.


மேலும் மன்னார் நகரத்தில் எவ்வித மணல் அகழ்வுகளுக்கும் இனி அனுமதியில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக எமது பஸ் தரிப்பு நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்புதல், புகைத்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.


மேலும் பொதுஇடங்களில் சிறுநீர் கழித்தலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மன்னார் நகர சபையினால் இவ்விடயங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்போம்.மக்கள் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் மன்னார் நகரசபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன.


ஆளுநர் அலுவலகத்திலிருந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து குழு ஒன்று வருகை தந்து ஆவணங்களை பரிசீலித்துச் சென்றுள்ளனர்.


மிக விரைவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.மன்னார் நகர சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் மீள பெறப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.