வைத்தியசாலை ஆளணி மற்றும் ஏனைய வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்!
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையினுடைய ஆளணி மற்றும் ஏனைய வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
19/09 வெள்ளிக்கிழமை தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மேற்படி வைத்தியசாலையில் ஆறு வைத்தியர்களுக்கான தேவைப்பாடு உள்ள நிலையில் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்றனர்.
அத்துடன் நான்கு தாதியர்கள் தேவையாக உள்ள நிலையில் எந்தவொரு தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
மேலும் அங்கு எந்தவொரு ஆண் சுகாதார ஊழியர்களும் இல்லாத நிலையில் அங்குள்ள பெண் சுகாதார ஊழியர்கள் விபத்து
உள்ளிட்ட அனர்த்தங்களின் போது பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.இயலாத நிலையில் உள்ள பெண் சுகாதார ஊழியர்களே அங்கு கடமையில் உள்ளனர்.
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் மாதாந்தம் 2500நோயாளர்கள் வரை சிகிட்சை பெறுகின்றனர்.
கிளிநொச்சிக்கும்-சாவகச்சேரிக்கும் இடையில் அதிக தேவைப்பாடு உடைய வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை உள்ளது.
வைத்தியசாலையின் சமையலறை மற்றும் ஏனைய கட்டடங்களும் பயன்படுத்த முடியாத நிலைமையில் காணப்படுகின்றன.
எனவே வைத்தியசாலையின் தேவைப்பாடு கருதி உடனடியாக குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை