தொன்மைச்சின்னங்களை பாதுகாக்குமாறு தென்மராட்சி அபிவிருத்தி கழகம் கோரிக்கை..!


தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் செயலாளர் ந.சஞ்சயன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது கோரிக்கையில்;

எமது கிராமங்களின் வரலாறும் பாரம்பரியச் சின்னங்களும் சமூக ஒற்றுமை மற்றும் கலாசார அடையாளங்களின் பிரதிபலிப்பாக உள்ளன.


 அவற்றுள் முக்கியமான இடத்தைப் பெறுவது சுமைதாங்கிகள் ஆகும். சுமைதாங்கிகள் வெறும் கற்கள் அல்ல; முன்னோர்கள் பயணங்களில் சுமைகளை இறக்கி ஓய்வெடுக்க அமைத்துக் கொண்ட கட்டமைப்பாகவும், சமூகத்தின் அன்பும் ஒற்றுமையும் பிரதிபலிக்கும் தொன்மைச் சின்னமாகவும் விளங்குகின்றன.


அதேசமயம், சில சுமைதாங்கிகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. இத்தகைய மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போவது நம் வரலாறே அழிந்து போவதற்கு சமமாகும். இன்று பல சுமைதாங்கிகள் புறக்கணிக்கப்பட்டும், சில இடங்களில் அழிக்கப்பட்டும் வருகின்றன. இது வருந்தத்தக்க விடயமாகும்.


எனவே பிரதேச செயலகம், தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள சுமைதாங்கிகள், பழமையான கிணறுகள், மடங்கள், கேணிகள் போன்ற பாரம்பரியச் சின்னங்கள் அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் உள்ளூராட்சி சபைகளின் ஒத்துழைப்புடன் அவற்றின் சுத்தம், பழுது பார்த்தல் மற்றும் சுற்றுப்புற அழகுபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

மேலும் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுமைதாங்கிகளை பாதுகாக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்களாக பதிவு செய்யப்பட வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு இதன் அருமையை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.


நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது வரலாற்றை மட்டுமல்ல, சமூகத்தின் கலாசார அடையாளத்தையும் காக்கும் ஒரு உயரிய பொறுப்பு என நாங்கள் கருதுகிறோம். அதனால், இக்கோரிக்கைக்கு தாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.என மேலும் அவர் தனது கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.