அதிகாரப் போதை: போதைப்பொருளை விடக் கொடியது!
பிரபல மனநல மருத்துவர் எம். ஸ்காட் பெக் (M. Scott Peck) சொன்னது ஒரு தீர்க்கதரிசனம்: "போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை விடவும் பல மடங்கு அபாயகரமானவை மற்றுமொரு சில அடிமைத்தனங்கள்... அதில் முதன்மையானது, அதிகாரப் போதை!"
இலங்கை அரசியலில் இன்று அரங்கேறுவதும் இந்த அதிகார வேட்டையின் உச்சகட்டமே! NPP-இன் அதிகாரப் பிடி: சலுகைகளா, சர்வாதிகாரமா?
NPP அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கினால், ஒரு உண்மை பளிச்சிடுகிறது: தங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் அல்லது அதிகாரப் பரவலுக்கு வழி வகுக்கும் எந்தவொரு மாற்றத்திற்கும் இவர்கள் துளியளவும் தயாராக இல்லை. அதிகாரத்தை இறுக்கிப் பிடிக்கும் அவர்களது தந்திரங்களுக்குச் சில அதிர்ச்சி உதாரணங்கள் இங்கே.
1. கொழும்புப் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தில் தகுதிக்குத் தடையா?
கொழும்புப் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தில் நடந்த விபரீதம் அதிர்ச்சியளிக்கக் கூடியது. கௌன்சிலின் இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று, சிரேஷ்ட பேராசிரியர் கருணாரத்ன முன்னிலையில் இருந்தார். ஆனால், இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கனிஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலகே NPP அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இது, கல்விப் புலத்தில் தகுதியையும், வாக்கெடுப்பையும் விட அரசியல் விசுவாசமே முக்கியம் என்ற ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கவில்லையா? அதிகாரத்தின் துணைகொண்டு தகுதியானவர்களைப் புறக்கணிப்பது கல்வி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைக்காதா?
2. பல்கலைக்கழக நிர்வாக சபைகளில் (கவுன்சில்களில்) விசுவாச நியமனங்கள்!
பல்கலைக்கழகங்களின் ஆளுகை மற்றும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் முக்கியமான நிர்வாக சபையான கவுன்சில்களின் பதவிக்காலம் முடிந்ததும், காலியான இடங்கள் நிரப்பப்பட்ட விதம் இன்னும் நுணுக்கமானது. NPP-இன் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆதரவாளர்கள், அல்லது அவர்களின் செயல்பாடுகளுக்கு 'ஜால்ரா' போடக்கூடியவர்கள் மட்டுமே அங்கே நியமிக்கப்பட்டார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், உபவேந்தர்கள் மற்றும் நிர்வாக சபைகள் அரசியல் தலையீடு இன்றி முற்றிலும் சுயாதீனமாகச் செயல்படுகின்றன. ஆனால், NPP அரசாங்கமோ, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, அப்படியான சுயாதீனப் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் சட்ட மாற்றத்தைக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? இது அதிகாரத்தை மையமாக்கும் முயற்சியின் வெளிப்பாடா?
3. 'ஜனாதிபதிப் பதவியை நீக்குவோம்' – வெறும் தேர்தல் முழக்கமா?
இதையெல்லாம் விடுங்கள்! கடந்த தேர்தலில், 'ஜனாதிபதிப் பதவியையே நீக்குவோம்' என்று முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், அந்தப் பதவியைத் தாங்கள் அடைந்த பின், அது தொடர்பாக ஏதாவது ஒரு நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளதா? இல்லை! தங்கள் கைக்கு வந்த உச்ச அதிகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க இவர்களுக்கு மனம் வரவில்லை போலும்! 'அதிகாரப் பற்றின்மை' என்ற அவர்களின் முழக்கம், 'அதிகாரப் பித்து' ஆக மாறியதா?
4. உயர்மட்ட நிர்வாகத்தில் தனிப்பட்ட விசுவாசத்தின் ஆதிக்கம்!
AKD ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனேயே, நாட்டிலேயே உச்சபட்ச நிர்வாகப் பதவியான 'ஜனாதிபதியின் செயலாளர்' பதவிக்கு நடந்த நியமனம் இன்னொரு முக்கியமான உதாரணம். SLAS (Sri Lanka Administrative Service) சேவையில் உள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, பல்கலைக்கழகத்தில் தனது நீண்டகாலக் கூட்டாளியாக இருந்த ஒரு சுங்கத் திணைக்கள அதிகாரியை அவர் நியமித்தார்.
இது, அனுபவத்தையும், நிர்வாகத் திறனையும் விடத் தனிப்பட்ட விசுவாசமே முதலிடம் பெறுகிறது என்பதைக் காட்டவில்லையா? நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாகச் செயல்பட வேண்டிய அதிகார மையத்தில் தனிப்பட்ட சலுகை நுழையும் போது, நடுநிலை நிர்வாகம் கேள்விக்குறியாகிறது.
இந்த உண்மைகள் கண்ணெதிரே இருக்கும்போது, "யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவில் NPP தலையிடாது" என்று சிலர் எதிர்பார்ப்பது... ஒரு மிகப்பெரிய அரசியல் நகைச்சுவையே! அதிகாரம் அத்தனை இனிமையாக இருக்கும்போது, அதை அவ்வளவு இலகுவில் விட்டுவிடுவார்களா?
இது ஒரு ஆரம்பம் மட்டுமே! அதிகார வேட்டையின் அடுத்தடுத்த நகர்வுகளைக் கூர்ந்து கவனிப்போம்!
Dr முரளி வல்லிபுரநாதன்
28.10.2025

.jpeg
)





கருத்துகள் இல்லை