சாவச்சேரிக்கு வந்த சந்திரிக்கா.!
இன்றைய நாள் தான் பலாலியில் இருந்து இராணும் முன்னேற நவாலியில விழுந்தொழும்பி கிளாலிக்கு வந்து வன்னிக்கு போனனாங்கள். முந்தி 'ஆமி வாறான்' என்று சனம் மூட்டைமுடிச்சுகளோட வந்தால் எனக்கு வீட்டில நிக்கப் பயம். அந்தநேரம் வீட்டுக்காரரையும் பாக்கமாட்டன் .புத்தகப்பையை தூக்கிகொண்டு ஓடிப்போய் ஒரு கிலோமீற்றரில நிண்டுட்டு திரும்பிவருவன். வீட்ட வந்தால் எல்லாரும் இயல்பாக இருப்பினம். நான் மட்டும் ஏன் அவசரப்பட்டு ஓடினேன் என்று வெக்கமா இருக்கும்.☺️
சண்டைநேரம் மாதகல், பண்டத்தரிப்பு, வடலியடைப்பில இருந்த சனம் ,பயத்தில இரவுபோய் கோயில், சொந்தகார வீடுகளில் உறங்கிட்டு விடியவெள்ளனவே எழும்பி வீட்டை போடுவினம். இப்பிடித்தான் எங்கட ஊரில இருந்த தறுமண்ணை குடும்பமும். ஆனால், 'நாங்கள் வீட்டிலதான் இருக்கிறனாங்கள் இரவில ஓடுறேல என்று வீராப்புவேற கதைப்பார்.
ஒருநாள் இரவு ஆட்டுக்கு தவிடு குழைச்சுவைச்சிட்டு அந்தச் சட்டியை பூவரசு வேலில கொழுவிட்டு மனுசி பிள்ளைகளோட தூர எங்கையோ போய் உறங்கிட்டு ஆக்கள் காணமுதல் எழும்பி விட்ட வந்தவர். இரவு வேலியில் கொழுவின சட்டி அவருக்கு ஞாபகமில்லை. ஆக்கள் பாக்கிறதுக்கிடையில நேரத்துக்கு போவம் என்று எழும்பி வீட்ட வந்தவர் சட்டியைக் கண்டுட்டார். காத்துக்கு சட்டியும் சாதுவா ஆடத்தொடங்கிட்டுது😛 வேலிக்க ஆமி சட்டித்தொப்பியோட நிக்கிறான் என்று நினைச்சு பயத்தில படலைக்க போறதும் வாறதுமா நிண்டதால நல்லா விடிஞ்சுபோச்சு, அவற்ற நண்பர் கண்டுட்டு
'என்ன தறுமண்ண இரவு நீங்களும் வீட்டில இல்லைபோல என,..என்று கேக்க 'இல்லடாப்பா நான் வீட்டிலதான் படுத்தனான் மனுசிய கூட்டிவரபோனான்' என்று சமாளிச்சிட்டார். அதுக்குப்பிறகு எல்லாரும் ஓர் இரவில பாதுகாப்புத்தேடி தென்மராட்சி வன்னியை நோக்கி நடந்தோம்.
'பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்,..என்று நானும் நடந்துபோனன். கைதடி நாவற்குழி பாலத்தடியில எல்லாச்சனமும் வந்து இறுகிட்டுது. ஒரு அடிஎடுத்து வைக்கேலாத சனநெருசல். ஒவ்வொருதரும் தள்ளுற வேகத்திலதான் ஒரு சாண் நகரலாம்.கொஞ்சம் காலெடுக்கப் பிந்தினால் பின்னால வாற சைக்கிள் சில்லு ஏறும். முன்னுக்கு கால்எடுத்து வவைச்சா முன்னால போறவேன்ர சட்டிபானையோடமோதவேண்டிவரும். இப்படித்தான் நகர்வு இருந்தது.
கைதடிக்குக்கிட்ட போக சுப்பர்சொனிக், ஹெலி, ஷெல் தாக்குதலோட மழையும் கொட்டத் தொடங்கிட்டுது. கொண்டுபோன சருவச்சட்டி ஒண்ட எடுத்து 'தலை நனையாம போட்டுவா' என்று அக்கா ஒரு சருவச்சட்டிய தலையில போட்டுவிட்டவ. பிறகென்ன அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் மறந்து தலையில சட்டியைக் கவுட்டுக்கொண்டு நடந்தன். தலையில டொக் டொக் என்று விழுந்த மழைத்துளி 'சன்னம் பட்டு தெறிக்கிறபோல' இருந்திச்சு.கொஞ்சநேரத்தில பிளேன் சுத்தத் தொடங்கிட்டுது. சனங்கள் சேறு சகதி தண்ணி வயல்களுக்க விழுந்து திசைமாறி ஓடத்தொடங்கிட்டினம். தவறவிட்ட மாமியை ஒருத்தர் 'மாமி ..மாமி என்று கூப்பிட ஆமி.. ஆமி என்று விளங்கி நெரிபட்டு உழக்குபட்டு வயதுபோனவர்கள் இறந்த துயரமும் நடந்தது. எல்லாத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு எங்கபோறது என்று தெரியாமல் நடந்தோம்.
சாவச்சேரியை நெருங்கும்போதுதான் சந்திரிக்கா வந்தவ. அந்த நெருசலுக்க குடும்பத்தில ஒருத்தரை தவறவிட்டால் தேடிப்பிடிக்கிறது கஸ்ரம். இக்கட்டான நேரங்களிலதான் புதுப்புது ஐடியாக்கள் எங்கட ஆக்களுக்கு வரும். யாரையும் கண்டுபிடிக்க வேணுமெண்டால் மரங்களில் மதில்களில ஏறி நின்று தவறவிட்டவர்களை புஸ்பா,.கவிதா ...ரவி என்று பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுவினம். பெயருக்குரியவர் நடந்துவந்தால் 'ஓய் ஓய் இஞ்ச வாறன் ,நிக்கிறன்' என்பினம். ஒரு பெயரில பலபேர் இருந்தாலும் ஒருமாதிரி குரலை வைத்துக் கண்டுபிடிச்சிடுவினம். இருட்டிக்கொண்டும் வந்திட்டுது அண்ண ஒருத்தர் மதிலில ஏறி சந்திரிக்கா... சந்திரிக்கா... என்று கூப்பிட்டவர். எங்களுக்கு பின்னால வந்த ஐயாக்கு, சந்திரிக்கா என்றதும் பிறஸர் ஏறிட்டுது. ' யாரடா அவன் சந்திரிக்காவை கூப்பிடுறது?
'அவள் ஏன் இஞ்ச வந்தவள்?
அவளாலதானே எங்களுக்கு இந்த நாய் அலைச்சல் என்று பேசத்தொடங்கிட்டார்
மிச்ச கெட்ட வார்த்தைகளைத் தணிக்கை செய்துவிட்டேன். ஐயா பேசினதுக்குக் காரணம் இருக்கு. 'சந்திரிக்கா"
அம்மணிதான் அந்தநேரம் ஆட்சியில் இருந்தவ. நாங்கள் பட்டதுன்பம் கொஞ்சமில்லை. பிறகும் வன்னியில இடம்பெயர்வுகள் தொடர்ந்தவண்ணமே இருந்தன.
இப்பிடித்தான் மன உளைச்சலுக்கும் அலைச்சலுக்குள்ளும் சுவாரசியமான சம்பவங்கள் மனவிளைச்சலுக்கு உரம் போட்டன. போர் இழப்பைத் தந்தது .😭அதேநேரம் தளங்களிலும் களங்களிலும் மறக்கமுடியாத சிரிப்பையும் தந்தது. 😀.

.jpeg
)





கருத்துகள் இல்லை