முஸ்லீம்களின் வெளியேற்றம் “ஈழத்தின் தேசியத் தற்கொலை” என "சரிநிகர்" அன்றே கூறியது!
கடந்தகால தவறுகளுக்கு முஸ்லீம் தரப்பும் பரஸ்பரம் பொறுப்புக் கூறவேண்டும்.
1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லீம்கள் 72 மணித்தியால இடைவெளியில் வெளியேற்றப்பட்டமை “ஈழத்தின் தேசியத் தற்கொலை” என, 1990 நவம்பர் மாத இதழில் தலைப்பிட்டு, நான் பணியாற்றிய "சரிநிகர்" பத்திரிகையின் ஆசிரியர் குழு, தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருந்தது. (அந்த கண்டனப் பதிவு இணைக்கப்பட்டுள்ளது)
தமிழத் தரப்பில் வாய்திறக்க திராணியற்று ஒரு தரப்பும், வெளியேற்றம் சரியானது என ஒரு தரப்பும் வாதப்பிரதிவாதங்களை நடத்திக்கொண்டு இருந்த போது, முஸ்லீம்களின் வெளியேற்றம் “ஈழத்தின் தேசியத் தற்கொலை” எனச் சரிநிகர் சொல்லத் துணிந்தது.
இந்தப் பலாத்கார வெளியேற்றம், ஈழப் போராட்டத்தில், புலிகள் மீதான சர்வதேச பார்வையில் ஒரு பாரிய பின்னடைவை எற்படுத்தியது. முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றம் ஒரு இனச் சுத்தீகரிப்பு என சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. பின்னாளில் புலிகைள பயங்கரவாத அமைப்பகளின் பட்டியலில் இணைப்பதற்கு இதுவும் பிரதான காரணமாயின.
இந்த வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் ஏற்றுக்கொண்டனர்.
குறிப்பாக சமாதானப் பேச்சுவார்த்தையில் ஒரு அங்கமாக முஸ்லீம் தரப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் றவூவ் ஹக்கீம் உடன் விடுதலைப்பலிகளின் தலைவர் புர்ந்துணர்வ உடன்பாட்டையும் ஏற்படுத்தி இருந்தார்.
அத்துடன் தாம் செய்த எதனையுமே தவறு என பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளதாக புலிகளின் தலைமை முஸ்லீம்களை வெளியேற்றியது தவறு என ஏற்றுக்கொண்டது.
இதே வேளை 1990.09.17 (3) செப்டம்பர் ஒக்டோபர் "சரிநிகர்" இதழில், கிழக்கில் இடம்பெற்ற முலீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் அப்போதைய தவிசாளர் சேகு இஸதீனிடமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அப்பொதைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் சரிநிகர் எடுத்துக்கொண்ட நேரடி செவ்வியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.
முஸ்லீம்கள் வடக்கில் இருந்து வெளியுற்றப்பட்டு 35 வருடங்கள் கடந்து செல்கின்றன. இந்த வெளியேற்றம் குறித்தும், முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகள் குறித்தும் தமிழ் தரப்பில் இருந்து அவ்வப்போது கண்டனங்கள் வெளியாகியிருக்கின்றன. மன்னிப்புக்கள் கோரப்பட்டுள்ளன.
ஆனால் முஸ்லீம் ஊர்காவல் படைகளாலும், முஸ்லீம் தரப்புகளாலும் கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கோ, நூற்றுக்கணக்கான கொலைகளுக்கோ முஸலீம் தரப்புகளிடம் இருந்து குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.
இங்கே பொறுப்புக் கூறல் பற்றி பேச்சுகள் எழும்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கு அனைத்து தரப்புகளும் பரஸ்பரம் பொறுப்புக் கூறவேண்டும் .
அதனை விடுத்து தமிழ், முஸ்லீம், சிங்கள தரப்புகள் தமது தவறுகளை மறைத்து மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தமது தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது.
பரஸ்பர பொறுப்புக் கூறலே பலமான இன ஐக்கியத்திற்கு வழிவகுக்கும். என்பது எனது திடாமான நம்பிக்கை.
குறிப்பு:-
முஸ்லீம்களின் முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் ஆரம்பமானது. ஏறத்தாள 1,500 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் முஸ்லிம்களும் தமது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 அக்டோபர் 30 இல் வெளியேற்றப்பட்டனர். வாகனங்களில் சென்ற விடுதலைப் புலிகள் அனைத்து முஸ்லிம்களையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கூடும்படி கட்டளை இட்டனர். அங்கு கூடியிருந்தோரை இரு மணி நேரத்தினுள் நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அனைத்து முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறினர்.
1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் 14,844 முஸ்லிம்கள் வசித்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் வட மாகாணத்தில் இருந்து 14,400 முஸ்லிம் குடும்பங்கள் (அண்ணளவாக 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர்.
இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில் இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில் 5,000 பேரும் அடங்குவர் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
வெளியேற்றப்பட்டவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களின் முகாம்களை பராமரிப்பதில் பல தொண்டு நிறுவனங்கள் அக்காலத்தில் செயற்பட்டன. எனது மனைவி பூரணி பணியாற்றிய சூரியா பெண்கள் அமைப்பும் அவற்றில் முக்கியமானது ஒன்று என்பது இப்போது ஞாபகத்தில் வருகிறது.
#ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #நடராஜா_குருபரன்
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.





.jpeg
)





கருத்துகள் இல்லை