யாழில் 42ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமனம்!📸
வடக்கு மாகாணத்திற்கு வரலாற்றிலேயே அதிக ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமனம் – ஆளுநர் நா.வேதநாயகன் நன்றி தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், வடக்கு மாகாணத்திற்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்களின் சார்பில் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் சுதேச வைத்தியசாலைகளுக்கும், 6 பேர் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு இன்று (07.11.2025) காலை யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள சுகாதாரக் கிராமத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்,
> “வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் பணியிடத்தைக் கோருவது வழக்கமாகிவிட்டது. ஆனால் மக்கள் சேவை என்பது இடத்தைப் பொறுத்தது அல்ல, மனப்பாங்கைப் பொறுத்தது. இதுவரை யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் சுகாதார சேவை வழங்குவதில் சவால்கள் இருந்தன; இந்நியமனங்கள் அந்த குறையை சரிசெய்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
> “சுதேச மருத்துவம் என்பது வெறும் சிகிச்சைமுறை அல்ல; அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். மண், மூலிகை, இயற்கை, மனிதனின் அனுபவ ஞானம் — இவை ஒன்றிணைந்த உயிர்ப்பே இந்த வைத்தியம். இதை நாம் காக்கவும், அடுத்த தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறவும் வேண்டும். நீங்கள் அதற்கான பொறுப்பாளர்கள்.”
> “மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சுகாதார சேவை சென்றடைய வேண்டும் என்பது எமது நோக்கம். நீங்கள் நகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர கிராமங்களிலும் மக்களின் நம்பிக்கையான மருத்துவ ஆளுமையாக இருக்க வேண்டும். உங்கள் பணியால் மக்கள் நம்பிக்கை அடைகிறார்கள் என்றால், அதுவே உண்மையான வெற்றி.”
> “நீங்கள் ஒரு வேலைக்குச் சென்றவர்கள் அல்ல; மக்கள் சேவைக்குச் சென்றவர்கள். ஒவ்வொரு நோயாளியையும் சந்திக்கும் போது, ‘இவர் என் குடும்பத்தினர் என்றால் நான் எப்படி அணுகுவேன்?’ என்ற எண்ணம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்,” என ஆளுநர் வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு மாகாண நிர்வாகத் துறைகள் யாழ்ப்பாணத்தை மட்டுமல்லாமல் மாகாணம் முழுவதும் சமநிலைப்பட்ட வடிவில் அமைக்கப்படும் என்றார். கிளிநொச்சியில் காணித் திணைக்களமும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களமும் திறக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டாகக் கூறி, சுதேச வைத்தியத்துறையையும் மக்களுக்கு அருகாமையாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு. கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப. ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








.jpeg
)





கருத்துகள் இல்லை