விடுதலைப் போராட்டத்தை அவமதிக்காதே!

 


IBC நிர்வாகமே !

விடுதலைப் போராட்டத்தை அவமதிக்காதே!

கரும்புலிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தாதே!


தமிழீழ விடுதலைக்காகத் தன்னுயிரை அர்ப்பணித்த முதல் கரும்புலி வீரர் மில்லர், தமிழீழ வரலாற்றின் நெஞ்சை நெகிழவைக்கும் மாபெரும் தியாகத்தின் உருவம்.

1987 ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, நெல்லியடியில் இலங்கை இராணுவ முகாமைத் தாக்கித் தன் உயிரையே அர்ப்பணித்தவர் அந்த மாவீரன். 


அந்த பெயர் ஒரு வணிகத் திரைப்படத்தின் பெயராக இன்று பயன்படுத்தப்படுவது ,

தமிழரின் தியாகத்தைப் புனிதமாகக் கருதும் ஒவ்வொருவரின் இதயத்தையும் வதைக்கும் செயலாகும்.


IBC நிறுவனம் “மில்லர்” எனும் பெயரில் திரைப்படம் தயாரிப்பதாகச் செய்திகளில் வெளியாகியுள்ளது.


இந்தப் பெயர் சாதாரணமனதல்ல.

அது தமிழீழத் தியாகத்தின் குறியீடு.

அது நம் இனத்தின் குருதி நனைந்த அடையாளம்.

அந்த மாவீரனின் தியாகப் பெயரைப் பொழுதுபோக்கு நோக்கில் பயன்படுத்துவது, தமிழர் உணர்வுகளை மிதித்து, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், 50,000-திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் 

தியாகத்தையும் இழிவுபடுத்துவதாகும்.


தமிழீழப் போராட்டம் என்பது வரலாற்றின் காயமல்ல, அது உயிருடன் இருக்கும் கனவு.


ஒரு மாவீரனின் தியாகப் பெயரை வணிகப் பெயராக மாற்றுவதென்பது,

விடுதலைப் போராட்டத்தின் கனவை, வியாபாரமாக்குவதே அன்றி வேறொன்றும் இல்லை. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.


எனவே,

IBC நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும்.

தமிழர் தியாக வரலாற்றை, எந்த வகையிலும் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது.

இதுபோன்ற முயற்சிகளை எதிர்காலத்தில் மேற்கொண்டாலும்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உலகெங்கிலும் பரவி வாழும் பன்னிரண்டு கோடித் தமிழர்களிடமும் ஆதரவுத் திரட்டி, மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறோம்.


தி. வேல்முருகன்,

நிறுவனத் தலைவர்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.