ஐரோப்பாவிற்குள் நுழைய நினைப்பது இனி நெருப்பில் நடப்பதற்குச் சமம்.!
ஐரோப்பாவிற்குச் சென்று வாழ்வுரிமை பெறுவது என்பது பல தசாப்தங்களாக ஆசிய, ஆப்பிரிக்க நாட்டு மக்களின், குறிப்பாக அரசியல் நெருக்கடிகளைச் சந்திக்கும் சமூகங்களின் பெருங்கனவாக இருந்து வருகிறது. ஆனால், அந்தக் கனவுப் பாதையில் இப்போது மிகப்பெரிய இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுவிட்டன.
ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ள "புதிய புலம்பெயர்வு மற்றும் தஞ்சத்திற்கான ஒப்பந்தம்" (New Pact on Migration and Asylum) அகதிகள் சம்மந்தமான ஐரோப்பாவின் மனநிலை மாற்றத்தின் வெளிப்படுத்தியுள்ளது.
ஜூன் 2026 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், அகதி தஞ்சம் கோருவோருக்கு, குறிப்பாக தெற்காசியர்களுக்கு (இந்தியா, இலங்கை) ஏன் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க போகின்றது.
இந்த புதிய விதிகளில் மிகவும் ஆபத்தான அம்சம் 'பாதுகாப்பான நாடுகள்' (Safe Countries) என்ற வகைப்படுத்தலாகும்.
இந்தியா, இலங்கை, பங்களாடேஷ் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் "பாதுகாப்பான நாடுகள்" என்று வகைப்படுத்தப்பட்டால், அந்நாடுகளிலிருந்து வருபவர்களின் தஞ்சம் கோரும் உரிமையானது, அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன்னரே நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.
இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்றும், தற்போதைய அரசியல் சூழல் மாறிவிட்டது என்றும் ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. எனவே, இலங்கையிலிருந்து வரும் ஒரு தமிழர், தனக்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தல் உள்ளது என்று நிரூபிப்பது இனி மிகக்கடினம். உங்களது கோரிக்கை ஆழமாக விசாரிக்கப்படாமலே, "உங்கள் நாடு பாதுகாப்பானது தானே, அங்கே செல்லுங்கள்" என்று எல்லைப் பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படுவீர்கள்.
முன்பெல்லாம் தஞ்சம் கோரியவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியபடியே மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தங்கள் வழக்கு முடிவுகளுக்காகக் காத்திருப்பார்கள். அந்த முறை இனி முடிவுக்கு வருகிறது.
துரித விசாரணை (Accelerated Border Procedures) என்ற முறைமையின் கீழ் விண்ணப்பங்கள் எல்லைப் பகுதிகளிலேயே (Border Zones) விசாரிக்கப்படும். இதற்காகவே பிரத்யேக தடுப்பு மையங்கள் எல்லைகளில் உருவாக்கப்பட இருக்கிறது.
அங்கே சில நாட்களுக்குள் உங்கள் கோரிக்கை ஏற்கத்தகுந்ததா இல்லையா என முடிவு செய்யப்படும். முடிவு சாதகமாக இல்லாவிட்டால், உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள். சட்டப்போராட்டம் நடத்துவதற்கான கால அவகாசம் வெகுவாகக் குறைக்கப்படும்.
இதுவரை இருந்த விதிகளின்படி, தஞ்சம் மறுக்கப்பட்டால் ஒருவரை அவர் வந்த நாட்டிற்குத்தான் (சொந்த நாட்டிற்கு) அனுப்ப வேண்டும். ஆனால் புதிய விதிமுறை மிகவும் கடுமையானது.
ஒருவர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப மறுத்தாலோ அல்லது அங்கே அவருக்கு ஆபத்து இருக்கிறது என்று வாதிட்டாலோ, ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் செய்துள்ள வேறொரு மூன்றாம் நாட்டிற்கு (Third Country) அவரை நாடு கடத்த முடியும்.
பலர் ஒரு ஐரோப்பிய நாட்டில் (உதாரணத்திற்காக பிரான்ஸ் ) தஞ்சம் மறுக்கப்பட்டால், பக்கத்து நாடான ஜெர்மனிக்குச் சென்று மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பார்கள். இதை "Asylum Shopping" என்று அழைப்பார்கள்.
இதை முடிவுக்கு கொண்டுவர இனி ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுத் தளம் (Eurodac) ஒருங்கிணைக்கப்படும். ஒரு ஐரோப்பிய நாடு உங்களை "வெளியேறுங்கள்" என்று உத்தரவிட்டால், அது அனைத்து 27 நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு கதவு மூடினால், ஐரோப்பாவின் அனைத்துக் கதவுகளும் மூடப்படும்.
தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது (பெயர் விவரங்களை மறைப்பது, பாஸ்போர்ட்டை கிழிப்பது) இனி வேலைக்கு ஆகாது.
அதுமட்டுமல்ல , அரசின் நிதியுதவிகள் நிறுத்தப்படும். வேலை செய்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படும், சிறைத்தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் வரை ஐரோப்பாவிற்குள் நுழையத் தடை (Entry Ban) விதிக்கப்படும்.
ஐரோப்பாவின் அரசியல் களம் மாறிவிட்டது என்பதே கசப்பான உண்மை. பல ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி கட்சிகள் (Right-wing parties) ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன அல்லது செல்வாக்கு செலுத்துகின்றன.
இவர்கள் குடியேற்றவாசிகளைத் தங்கள் கலாச்சாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானவர்களாகப் பார்க்கின்றனர்.
பல ஆட்கடத்தல் முகவர்கள் (Agents), "இன்னும் சட்டம் வரவில்லை, அதற்குள் சென்றுவிடலாம்" என்றோ அல்லது "நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றோ கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கக்கூடும்.
ஆனால், ஐரோப்பிய எல்லைக் கண்காணிப்பு இப்போதே கடுமையாகிவிட்டது. சட்டவிரோதப் பயணங்கள் இனி பண விரயத்தை மட்டுமல்ல, உயிராபத்தையும், நீண்ட காலச் சிறைவாசத்தையும் பரிசளிக்கும்.
2026 என்பது ஐரோப்பியக் குடியேற்ற வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கப் போகின்றது.
உண்மையான போர்ச் சூழலிலிருந்து தப்பி வருபவர்களுக்கு ஐரோப்பா உதவக்கூடும். ஆனால், பொருளாதாரக் காரணங்களுக்காகவோ அல்லது வலுவான அரசியல் காரணங்கள் இன்றியோ ஐரோப்பாவிற்குள் நுழைய நினைப்பது இனி நெருப்பில் நடப்பதற்குச் சமம்.
ஐரோப்பாவை நோக்கிய பயணத்தைத் திட்டமிடுவோர், இந்த புதிய எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான மாற்று வழிகளை யோசிப்பதே புத்திசாலித்தனம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை