வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை!

 


11.01.2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 


நேற்று பிற்பகல் வடக்கு மாகாணத்தின் நிலப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு முன்னரே குறிப்பிட்டபடி வலைப்பாட்டிற்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் சென்று இன்று காலை காலை அழிவடையத் தொடங்கி உள்ளது. 


ஆனாலும் இன்றும் (11.01.2026) நாளையும் (12.01.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 


இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக்கனமழை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அது அடர்த்தியான கார்திரள் முகில்களை( Cumulonimbus)(Cb) சுழற்சியின் மையம் நோக்கி ஈர்த்திருந்தது. உருவான நாளிலிருந்து 07.01.2026 வரை இந்த கனமழைக்குரிய வாய்ப்பே இருந்தது. இந்த நிலை 04.01.2026 முதல் 07.01.2026 வரையான 04 நாட்கள் நிலவியது. 


அதன் அடிப்படையில் தான் 08.01.2026 முதல் 12.01.2026 வரை திரட்டிய மழை வீழ்ச்சியாக 600 மி.மீ. இற்கு மேல் கிடைக்கும் என முன்னறிவிப்பும் மேற்கொண்டிருந்தேன். 


ஆனாலும் கடந்த 07.01.2026 இல் திடீரென மாற்றமடைந்த சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை குறைவினாலும், கொரியோலிசு விசையின் தாக்கத்தினாலும் இந்திய பெருங்கண்ட நிலப்பரப்பில் நிலவிய உயரமுக்க செல்வாக்கினாலும் ஈரப்பதன் கொண்ட கார்திரள் முகில்களின் உள்ளீர்ப்பைக் குறைத்துக் கொண்டது. இதனால் 08.01.2026 முதல் எதிர்பார்த்த அளவு மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை. 


1. மிக அதிகளவிலான மழை வீழ்ச்சி கிடைக்கும் என்பதனாலும், 


2. கனமழை கிடைக்கும் காலத்தில் மிக வேகமான காற்று வீசுகை இடம்பெறும் என்பதனாலும்


3. இக்காலப்பகுதியில் கடல் மட்டமும் உயர்வாக காணப்படும் என்பதனாலும்


4. ஏற்கனவே 80% மான நிலம் நிரம்பு நிலையில் இருந்ததனாலும் 


5. தாழமுக்கம் வடக்கு மாகாணத்திலேயே கரையைக் கடக்கும் என்பதனாலும்


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ளும் என எச்சரித்திருந்தேன். 


ஆனாலும்....


எதிர்பார்த்தபடி மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை. 


ஆனால் 


1. கடல்மட்டம் உயர்வடைந்திருந்தது


2. காற்று சற்று வேகமாக வீசியிருந்தது


3. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சாளையூடாக நுழைந்து கிளிநொச்சி ஊடாக வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் கரையைக் கடந்தது. 


இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆரம்பத்திலிருந்தே ஆச்சரியங்களை கொண்டிருந்தது. 


எவருடைய கணிப்பின்படியும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மழை வீழ்ச்சி அமையவில்லை. நான் திரட்டிய மழை வீழ்ச்சி 600 மி.மீ. இற்கு மேல் கிடைக்கும் என கூறியிருந்தேன். சிலர் ஒரு நாளுக்கான மழை வீழ்ச்சி ( 24 மணித்தியாலத்துக்கானது) 200 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை கிடைக்கும் என குறிப்பிட்டனர். 


இந்து சமுத்திரத்தைச் சேர்ந்த நாடுகளில், வானிலை அவதானிப்பு மற்றும் முன்னறிவிப்பின் மகாராஜா எனக் கூறப்படும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் கூட இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என....


1. ஆரம்பத்தில் கல்முனைக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையிலும்


2. பின்னர் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையிலும்


3. இறுதியாக திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் என கணித்திருந்தனர். 


அந்த அளவுக்கு இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பௌதிக கட்டமைப்பைக் கொண்டிருந்தது. 


சிலர் நான் வானிலை முன்னறிவிப்பு மூலம் அச்சமூட்டுவதாக குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அனர்த்தம் ஒன்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். டித்வா புயலின் போது மழை வரும் என உரிய தரப்புக்கள் எச்சரித்திருந்தன. ஆனால் மிகப் பெரிய அனர்த்தத்தை உருவாக்கும் மழை கிடைக்கும் என எதிர்வு கூறியிருந்தால் குறைந்தது ஒரு 100 உயிர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் அல்லவா? 


அதனால் தான் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எத்தகைய பாதிப்பினையும் ஏற்படுத்தக் கூடாது என்றே எச்சரிக்கையோடு கூடிய முன்னறிவிப்பை மேற்கொண்டேன். 


எப்போதுமே இயற்கை சார் நிகழ்வுகளை சற்று மிகையாக மதிப்பிட்டால் அதன் மூலம் ஏற்படும் இழப்புக்கள் குறைவு, ஆனால் அவற்றைக் குறைவாக மதிப்பிட்டால் அதன் மூலம் ஏற்படும் இழப்புக்கள் அதிகம். 


பொருளாதார இழப்புக்களை எப்போதும் சீர் செய்யலாம்... ஆனால் உயிரிழப்புக்களை.................................


பொதுவாக குறைவாக மழை கிடைக்கும் என அறிவித்து கன மழை கிடைத்தால் தான் மிகப்பெரிய பாதிப்பு நிகழும்... இதுவே கடந்த கால வரலாறு.... 


ஆனால் கன மழை கிடைக்கும் என அறிவித்து குறைவாக மழை கிடைத்தால் பெரிய பாதிப்பு நிகழுமா என்பதை நான் அறியேன்... சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும். சிறிய பதட்டத்தை உருவாக்கும்... அதை அறிவேன்.... ஆனால் தயாராக இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதற்காக தானே எச்சரிக்கைகளை வழங்குகின்றேன். 


எவ்வாறாயினும் எனது முன்னறிவிப்பின் படி கனமழை, வெள்ளம் நிகழாமையினால் பாதிக்கப்பட்ட சிலருக்கும், அசௌகரியமாக உணர்ந்தவர்கள் சிலருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 


என்னுடைய வானிலை முன்னறிவிப்பில் சில மாறுதல்கள் இருந்த போதும் கடந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எங்கள் பிரதேசங்களில் ஒருவருக்கேனும் ஒரு சிறிய காயம் கூட ஏற்படவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதலும் நிம்மதியும்.


மிகப் பலர் இந்த முன்னறிவிப்பின் உயர்ந்த நோக்கத்தையும், வானிலை எதிர்வு கூறலின் யதார்த்தத்தையும் புரிந்து என்னோடு இணைந்திருந்தார்கள். என்னை உள் ரீதியாக பலமூட்டியிருந்தார்கள். 


நிறைவாக, எப்போதும் என்னோடு இணைந்திருக்கும், எனது நிலைமையையும், வானிலை முன்னறிவிப்புக்களின் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவளிக்கும் என் அன்புக்குரிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


என்னை எதிர்மறையாக விமர்சித்தவர்களும், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு எதிர்காலத்தில் என்னோடு இணைந்து கொள்வார்கள். 


உங்கள் எல்லோருக்கும் வானிலை, காலநிலை சார்ந்த எந்தப் பாதிப்புக்களும் ஏற்படாதவாறு, முன்னரிலும் இன்னமும் வினைத்திறனாக, துல்லியமாக வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்புக்களை வழங்குவேன்.


.......மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள்.....


- நாகமுத்து பிரதீபராஜா -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.