இலங்கைக்கு இந்திய இராணுவத் தளபதி விஜயம்!


இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜனவரி 5 முதல் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பின்படி, இந்த விஜயம் நட்பான நாடுகளுடன் பாதுகாப்பு உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது.

விஜயத்தின் முதல் கட்டமாக, ஜெனரல் உபேந்திர த்விவேதி ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கவுள்ளார்.

அங்கு அவர் மூத்த இராணுவ தலைமைகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வருகையின்போது, இலங்கை இராணுவத்தால் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்படும்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து, பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

மேலும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி மற்றும் புத்தளையில் உள்ள இராணுவப் போர் கல்லூரியில் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்து உரையாற்றவுள்ளதுடன், இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கும் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.