தேசங்கள் தங்கள் பாதுகாவலர்களை எவ்வாறு கைவிடுகின்றன என்பதற்கு இலங்கை ஒரு சாட்சி!
தேசங்கள் தங்கள் பாதுகாவலர்களை எவ்வாறு கைவிடுகின்றன என்பதற்கு இலங்கை ஒரு சாட்சி! என்கிறார் தயான் ஜெயதிலக.
டக்ளஸ் தேவானந்தாவும், அரசியல் அறநெறிகளும் அரச விசுவாசத்தின் விலையும்!
“அரசியல் விசுவாசம்—அது டக்ளஸின் அடையாளம். பதவியில் இருந்த ஜனாதிபதிகளுக்கு அவர் விசுவாசமாக இருந்தார்.”
“பிரேமதாசா வழங்கிய பேனாவை பல தசாப்தங்கள் அணிந்திருந்தார்—அது அதிகாரத்தின் அடையாளம் அல்ல; நம்பிக்கையின் நினைவுச்சின்னம்.”
“1980களின் முற்பகுதிக்குப் பிறகு, எந்த அரசாங்கத்தின்கீழும் அவர் சிறையில அடைக்கப்படவில்லை. "
"பிரேமதாசா முதல் விக்கிரமசிங்க வரை—ஏழு ஜனாதிபதிகளுக்கு அவர் சேவையாற்றினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய மிக மோசமான சவால்களின் போது, அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் முன்னணித் தோழனாக நின்றார்.”
(படம் - டக்ளஸ் தேவானந்தா, தயான் ஜெயத்திலக, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலர்)
தயான் ஜயதிலக (Dayan Jayatilleka)
தேசங்கள் தங்கள் பாதுகாவலர்களை எவ்வாறு காட்டிக்கொடுக்கின்றன என்பதற்கு இலங்கையே சான்று—என்று தயான் ஜயதிலக கூறுகிறார். அது ஒரு குற்றச்சாட்டு அல்ல; காலம் சுமந்த ஒரு சாட்சியம். சட்டமும் நீதியும் ஒன்றோடொன்று நேர்கோட்டில் நடக்காத தருணங்களில், அரசியல் அறநெறிகள் எவ்வாறு நசுங்குகின்றன என்பதைக் காட்டும் ஒரு அரசியல்–நெறியியல் உரையாடல் இது. அந்த உரையாடலின் மையத்தில் நிற்பவர்—டக்ளஸ் தேவானந்தா.
தான் சட்டவல்லுநர் அல்ல என்பதைக் குறிப்பிட்டு தயான் தனது கருத்துரையை ஆரம்பிக்கிறார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடத்திற்கு தெரிவான போதும், அரசியல் விஞ்ஞானத்தையே தேர்ந்தெடுத்தார். காரணம் ஒன்றே—சட்டம் மற்றும் நீதி இடையிலான இடைவெளி. அந்த இடைவெளியில் தான் அறநெறிகள் சிதைவடைகின்றன; சரி–தவறு, நன்மை–தீமை ஆகியவற்றின் கேள்விகள் அரசியலில் அநாதையாய் விடப்படுகின்றன.
இவ்வாறான பின்னணியுடன், அரசியல் அறநெறிகள் குறித்த நூலை பிரித்தானியாவில் வெளியிட்ட ஒருவராக, இன்று டக்ளஸ் தேவானந்தாவுக்கு நேர்ந்துள்ள நிலை குறித்து தயான் தெளிவாகக் கூறுகிறார்: “இதைவிடச் சிறந்த வழி இந்த நாட்டிற்கும் சமூகத்திற்கும் இருந்திருக்க வேண்டும்.” தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் காயமடைந்த ஒருவர், 2026-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொடூரமான மகர சிறையில் கழிப்பது—அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு தார்மீகத் தோல்வி, ஒரு பெரிய அநீதி.
சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் ஆயுதம் ஏந்திய இளைஞன் ஒருவர், இளமையிலேயே ஜனநாயகத்தின் பக்கம், இலங்கை அரசின் பக்கம் நின்று, ஐக்கிய இலங்கைச் சட்டகட்டமைப்புக்குள் வடக்கு–கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வை வலியுறுத்திய அரிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அந்தப் பாதையின் பெயர்—டக்ளஸ் தேவானந்தா. அவர் விமர்சிக்கப்படலாம்; ஆனால் அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர் என்பதில் தயானுக்கு ஐயமில்லை.
டக்ளஸ் முதன்முதலில் அரசியல் மேடையில் அறியப்பட்டபோது, மார்க்சிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) அமைப்பின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) இளம் தலைவராக இருந்தார். 1983 ஜூலை—வெலிக்கடை சிறை படுகொலைகள். கோணவல சுனில் போன்ற வெளியூக்கங்களால் தூண்டப்பட்டு, சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகளை கண்களைத் தோண்டி, கொடூரமாகக் கொன்ற அந்த இருண்ட இரவில், டக்ளஸ் தேவானந்தா உயிர்தப்பினார். அந்த உயிர்தப்புதல் மட்டும் அல்ல—அது இலங்கை வரலாற்றின் இரத்தக் கறை படிந்த நினைவுச்சின்னம்.
மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பிய அவர், 1989-ல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார். 1986க்குப் பின்னர் EPRLF, PLOTE, TELO போன்ற அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தபோது, அவரது அரசியல் மனநிலை உறுதியான தீர்மானமாக மாறியது. அவர் பிரிவினைவாத சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயக அரசுடன் இணைந்தார்.
ஜனாதிபதி பிரேமதாசா, அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன—இவர்கள் அவரை வரவேற்றனர். யாழ்ப்பாணத் தீவுகளைப் புலிகளிடமிருந்து மீட்டபோது, அரைக்காற்சட்டை அணிந்து தன்னியக்க ஆயுதத்துடன் இலங்கை ஆயுதப் படைகளோடு நின்ற டக்ளஸின் புகைப்படங்கள் இன்றும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. யுத்த காலமெங்கும், கடற்படையுடன் இணைந்து அந்தத் தீவுகளைப் பாதுகாத்தவர் அவர்.
அரசியல் விசுவாசம்—அது டக்ளஸின் அடையாளம். பதவியில் இருந்த ஜனாதிபதிகளுக்கு அவர் விசுவாசமாக இருந்தார்; பதவி இழந்தவர்களை ஒருபோதும் அவமதிக்கவில்லை. பிரேமதாசா வழங்கிய பேனாவை பல தசாப்தங்கள் அணிந்திருந்தார்—அது அதிகாரத்தின் அடையாளம் அல்ல; நம்பிக்கையின் நினைவுச்சின்னம்.
ஆனையிறவு வீழ்ச்சிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோது, EPDP பெற்ற உள்ளூராட்சி வெற்றிகள் யாழ் நகரை நிலைநிறுத்த உதவின. மக்கள் வெளியேறவில்லை; மாறாக, பாதுகாப்பை நாடி யாழ்ப்பாணத்திற்குள் வந்தனர்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வழங்கிய செய்மதித் தொலைபேசி, இராணுவத் தளபதி லயனல் பலகல்ல வழங்கிய இரண்டு மினி–யூஸி துப்பாக்கிகள்—அவை அந்தக் காலத்தின் அரசியல்– பாதுகாப்புக்கான உறவுகளின் சாட்சிகள்.
டக்ளஸ் ஒரு ‘தூய’ துணை இராணுவத் தலைவர் அல்ல. ஆனால் 13-ஆவது திருத்தத்தை படிப்படியாக அமுல்படுத்தி, ஒற்றையாட்சி அரசுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைய வேண்டும் என்ற அவரது அரசியல் பார்வை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 50-ஆவது ஆண்டு விழா உரையில் தெளிவாகப் பிரதிபலித்தது.
புலிகளின் கொலை முயற்சிகளில் இருந்த பதினொருமுறை தப்பியவர். அலுவலகத்தில் தற்கொலை குண்டுதாரி வெடித்தபோதும், சில மீற்றர் தூரத்தில் அவர் உயிர்தப்பினார். சிறையில் கைதிகள் திட்டமிட்டு தாக்கியபோது, மண்டை ஓடு சிதைந்தது; கண்கள் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டன. இன்றும் அவர் தினசரி மருந்தில் வாழ்கிறார். இத்தனை முயற்சிகளிலிருந்து உயிர்தப்பிய அரசியல்வாதி—இலங்கையில் வேறு யாரும் இல்லை.
1980களின் முற்பகுதிக்குப் பிறகு, எந்த அரசாங்கத்தின்கீழும் அவர் சிறையில அடைக்கப்படவில்லை. பிரேமதாசா முதல் விக்கிரமசிங்க வரை—ஏழு ஜனாதிபதிகளுக்கு அவர் சேவையாற்றினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய மிக மோசமான சவால்களின் போது, அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் முன்னணித் தோழனாக நின்றார்.
2009 ஏப்ரல் 23—ஜெனீவா. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொண்ட கடும் அழுத்தங்களுக்கிடையே, கொழும்பிலிருந்து வந்து நாட்டின் நிலைப்பாட்டைப் பாதுகாக்கத் துணை நின்றார் டக்ளஸ் தேவானந்தா. சில வாரங்களில் இலங்கை பெற்ற அந்த அமோக வெற்றிக்கு, அந்த வருகையும் ஒரு அரசியல் வலுவாக இருந்தது.
உலக வரலாற்றில், பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய சிறுபான்மை இனத் தலைவர் ஒருவர் வீரராகப் போற்றப்படுவது வழக்கம். ஆனால் இன்றைய இலங்கையில், அந்த வீரர் சிறைக்குள். இதுவே தயான் எழுப்பும் கேள்வி—இது சட்டத்தின் செயல் தானா, அல்லது அறநெறிகளின் வீழ்ச்சியா?
“எனக்கு JVP-யையும் தெரியும்; டக்ளஸ் தேவானந்தாவையும் தெரியும்” என்கிறார் தயான். அவர் உடைக்கப்பட மாட்டார். ஆனால் ஒரு தேசம், தனது பாதுகாவலரை இப்படித்தான் கைவிடுமா? என்ற கேள்வியை தயான் இந்தக் கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
#ஞாபகங்கள் #nadarajarah_kuruparan #journalist #tamilpolitics #நடராஜா_குருபரன்
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை