நினைவு!!
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் திகதி இரவு 11 மணியளவில், திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பணம் நோக்கி ஓர் வெள்ளை நிற டெலிக்கா வான்? வந்துகொண்டிருக்கிறது. 'வானை' செல்லக்கிளி செலுத்த, அவனை அடுத்து கையில் எஸ். எம். ஜியுடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து "நான் (கேணல் கிட்டு) வானின் பின் பகுதியில் தம்பி (தலைவர்) மற்றும் ஏனைய தோழர்கள்.
நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க, எல்லோரும் கீழே இறங்குகிறோம்.
அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும்
'வான்' அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க, அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத் தொடங்க, விக்ரரும் செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்திருந்தனர் ) சிங்களத்தில் உரக்கக் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க, வெளியே எட்டிப் பார்த்த தலைகளைக் காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டன ; யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்துவிட்டனர்.
முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை.
தயார் படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும் என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்கு வெட்டி (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல ), இவற்றையும் விட தாக்குத லின்போது சண்டையும் போடவேண்டும்.
எமது தகவலின்படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில், பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு 'ட்ரக் ' வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம் ஜீப்பில் 4 இராணுவத்தினரும் 'ட்ரக்'கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே, யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால்பெட்டிச் சந்தியில் கண்ணிவெடி புதைத்து, இரண்டாவதாக வரும் வாகனத்துக்குக் கண்ணிவெடியால் தாக்க, முன்னால் வரும் வாகனத்தை சுட்டு மடக்குவது என்பது நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு 'வோக்கி ரோக்கி'-அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.
விக்ரரும், செல்லக்கிளியும், அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத் திக்கொண்டிருக்கையில், மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து, தத்தமக்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது கண்ணிவெடியைப் புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி,தனக்கு ஒதுக் கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனைவிட உயரமாக இருக்க, பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காகத் தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக் கொண்டு, அந்தச் சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையைச் சீர்படுத்திக் கொள்கிறான் துப்பாக்கியைத் தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாக்கியை இலகுவாக இயக்க முடியுமா என்பதையும் சரிபார்த்துக் கொள்கின்றான்.
தம்பி தபால்பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப் பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்துத் தாக்குதலுக்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கையில், 'வோக்கி' செல்லக் கிளியைக் கூப்பிடுகின்றது.
செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாகத் தன் வேலையை முடித்துக்கொண்டு, மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு, தனது நிலைக்குச் செல்லுகின்றான் அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.
வெளிச்சம் எமக்கும் தெரிந்தது; அப்போதுகூட வேலை முடியவில்லை. விக்ரர் "அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக்கொண்டிருக்கையில், 'வோக்கி மீண்டும் அலறியது.
"அம்மான் நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தான். முன்னுக்கு ஜீப், பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் 'ட்ரக்' வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க, முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில், வெளிச்சங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
ஜீப்பை எம்மிடம் வரவிட்டுவிட்டு, பின்னால் வரும் 'ட்ரக்' வண்டியை கண்ணி வெடியால் தாக்கி, அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். 'ட்ரக்' வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களைச் சுடக் கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களைக் கவனிக்க, தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தன. நான் எட்டிப் பார்த்தேன். முன்னால் இருவிளக்குடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக்கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து 'ட்ரக்'. மெல்ல வந்து கொண்டிருக்கின்றது
நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டு இருக்க, ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைக்க இடத்தை அண்மித்தபோது, கண்ணிவெடி வெடிக்கிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது?சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப் வண்டியை விட்டு, பின்னால் வரும் 'ட்ரக்' வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம் இன்று வரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்கவைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்கவைத்த செல்லக்கிளி அதை சண்டை முடிந்தபோது விளக்கவில்லை; அவனை நாம் இழந்துவிட்டோம்.
சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத் தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை; எனவே பின்னால் நடப்பவை எமக்குத் தெரியவில்லை.
என்னுடைய
ஜி 3 யால் ஜீப்பின் இரு விளக்குகளையும் குறி பார்த்து உடைத்தேன். ஜீப்பின் விளக்கு உடைந்ததும், பின்னால் நின்ற 'ட்ரக்'கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்து சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு, அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.
ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையைச் சுவருக்கு உள்ளே இழுத்துக்கொண்டு நிற்கையில், மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஒரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் இருந்து ஓடி வருவது தெரிய, அவனைக் குறிவைத்து விசையை அழுத்த, சில குண்டுகள் ஓடி வந்தவனின் உடலிலே பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான்; அப்படியே சுருண்டு விழுந்துவிட்டான். இன்னு மொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட, அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் குண்டுகள் அவனை விழுத்தவில்லை; ஆனால் காயப்படுத்தின. ஆனாலும் அவன் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனை திரும்பச் சுட்டான் வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை; மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட, ஜீப்புக்கு கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்தச் சுவாலையை மையமாக வைத்து வேட்டுகளைத் தீர்த்தான். பின்பு அது அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான். துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கியது போடப்பட்ட குண்டுகள் முடிந்து விட்டது; குண்டுகள் நிரப்பப்பட்ட ரவைச்சட்டத்தை மாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த 'ட்ரக்' வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். பெரியவெளிச்சத்தையும் ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட
சாரதி தன்னை அறியாமலே 'பிரேக்கை' இறுக அழுத்தினான். ஏன், பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறிநின்றான் என்றே கூறலாம்.
'ட்ரக்' பிரேக் போட்டு நின்றதும் 'ட்ரக்'கின் பின்புறத்தில், இராணுவத்தினர் தம் துப்பாக்கியைத் தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.
தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தி இருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகின்றன. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப்வண்டி கண்ணிவெடியை நெருங் கிக்கொண்டிருக்க, 'ட்ரக்' அவருக்கு சரியாக 20யார் தூரத்தில் சென்று கொண்டு இருக்கக் கண்ணிவெடி வெடித்தது. 'ட்ரக்' அவருக்கு மிகக்கிட்ட - கையில்எட்டிப்பிடிக்கு மாப்போல் தூரத்தில் - பிரேக்போட்டதால் குலுங்கி நிற்க, எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய ஜி 3 ஏ 3 வெடிக்கத் தொடங்கியது.
'ட்ரக்'கின் இருக்கையிலிருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில், தம்பியின் ஜி 3 வெடிக்கத் தொடங்கியது.
ஜி 3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள், தாக்குதலுக்குக் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத் தொடங்கின.
சற்றும் எதிர்பாராமல் ஏற்பட்ட இத் திருப்பம், தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.
இதேநேரம் தம்பி (தலைவர் ) தனியே நிற்பதை உணர்ந்து, ரஞ்சனையும் இன்னொரு போராளியையும் 'தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர். ஆனால் ரஞ்சனும் சகபோராளியும் தம்பியைச் சென்ற டைந்தபோது, ட்ரக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு ஜி3 ஓயவைத்துவிட்டது.
ஆனால் இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழு வெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத்துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியைக் கையாள்வதில் முதன் மையாளராகத் திகழும் தம்பியிடம், 'ட்ரக்' இல் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கி யதே எமது முழு வெற்றிக்கு வழிகோலியது
'ட்ரக்' மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியின் அதிர்வில் தெருவிளக்குகள் அணைந்துவிட்ட போதிலும், மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு; இராணுவத்தினரைப் பொறுத்தவரை தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத் தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால்-ஆற்றலால் வரிசையாக இராணுவத்தி னரை விழுத்தி வந்தபோதிலும், இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் டிரக்கிலிருந்து கீழே குதித்து சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தாக்குதலை ஆரம்பித்தார்கள்.
தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத்தெறித் துக்கொண்டிருந்தன இத்துடன் 'ட்ரக்'கின் முன்புறத்திலிருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் ஜி3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.
இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால், தம்பிக்கு உதவிக்கு எவருமேயில்லை. நாம் எமது திட்டத்தின்படி ஜீப்பை முன்னே விட்டு, 'ட்ரக்' வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்தோம். அத் திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே "ட்ரக்' கை சமாளிக்கவேண்டிய நிலைக்குத் தம்பி தள்ளப்பட்டுவிட்டார். இதேநேரம் ஜீப்பை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்த விக்ரர், தனக்கு 20 யார்ட் பின்னே 'ட்ரக்' நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை 'ட்ரக்கை' நோக்கித் திருப்பினான்-'ட்ரக்'கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீள வரிசையாகச் சுட்டான்.
அப்போதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது சாரதி தனது இருக்கையிலேயே ஸ்ரே றிங்கில் சாய்ந்து, வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.
விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன் நோக்கி எதிரில் இருந்தஒழுங்கையிலிருந்து, "பஸீர் காக்கா" 'றிப்பீட்டரால்' ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். 'றிப்பீட்டரில்' தோட்டாக்கள் முடியும் போது, அதை மாற்றித் திருப்பித் தாக்கும்படி சொல்லி உற்சாகமூட்டிக்கொண் டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையாண்ணை. அப்போது ஒழுங்கையை நோக்கி ஒருவன் எஸ். எம். ஜியுடன் ஓடி வந்தான். "சுடு" என்ற அப்பையாண்ணை உடனே,
"கவனம், எங்கட பெடியளோ
தெரியாது. பார்த்துச் சுடு" என்றார். 'றிப்பீட்டர்' சத்தம் ஓய, வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது எஸ் எம். ஜி யை அப்பையாண்ணை ஓடிவந்து எடுத்துக் கொண்டார். இவனே ரோந்துப்பிரிவுக்கு தலைமைதாங்கிய லெப்ரினன் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம். அவனது விசேட இராணுவ பட்டிகள் அதை உறுதிப் படுத்தின.
இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து, ரஞ்சனையும் இன்னொரு போராளியையும் "தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.
ஆனால் ரஞ்சனும் சகபோராளியும் சென்றடைந்தபோது, ட்ரக்' கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும். தம்பியின் தனி ஒரு ஜி 3 ஓயவைத்து விட்டது.
சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்துவிட்டு அமைதியாக, வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து, முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக்கொண்டிருந்தார் தம்பி.
மதிலேறிக் குதித்த ரஞ்சனும் மற்றைய போராளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக்கண்டு, ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து, முன்னே வந்தனர். "யாரது" என்றவாறு.
"அது நான்ராப்பா" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி,"இங்கே எல்லாம் முடிந்தது; உங்கடைபக்கம் எப்படி?" என்றார். "அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை" என்றார் ரஞ்சன்.
"இங்கையும் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் எனக்குச் சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை. காயப்பட்டிட்டாங்களோ தெரியவில்லை. வா பார்ப்போம்" என்றவாறு, தன் பிரியத்திற்குரிய ஜி3 யைத் தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.
மதிலேறிக் குதிப்பதற்குமுன், ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று, எதற்கும் முன்னெச்சரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு 'ட்ரக்'கின் கீழ் விழுந்து வெடித்து, எரி பொருள் தாங்கியை உடைத்தது.
இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத்தாண்டி, புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான்; அங்கு புலேந்திரன், சந்தோசத்தைக் காணவில்லை. "எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி, மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியை பார்த்து, "அண்ணை அவன் அநுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய ஜி3 அவனின் அநுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதன்பின், 'ட்ரக்கை' நெருங்கி ஆயுதங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை ஜி 3 ஆல் எழுதிவைத்தார். ஜி3 யின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.
இதேநேரம்.பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவ வீரனை இன்னோர் போராளி துரத்திச்சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு, பொன்னம் மானும் நானும் என்னுடைய போராளிகளும் ‘ட்ரக்'கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.
"கரையால் வாருங்கள்" என்ற தம்பியின் குரல் எம்மை வரவேற்றது.
எல்லோரும் தம்பியை சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம்.
இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன், இறந்து கிடந்த இராணுவத்தினரின் 'ஹெல்மெட்'டைத் தலையில் போட்டுக்கொண்டு, 'ட்ரக்'கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களைத் தேடி எடுத்துக்கொண்டான்.
இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் வேறு பிரிக்க நாம், 'ஹெல்மெட்'டைத்தான் குறியீடாகப் பாவித்தோம்.
'ஹெல்மெட்'டுடன் ஓர் உருவம் நகர்வதைக் கண்ட தம்பி உடனடியாகத் துப்பாக்கியைத் தயார் நிலைக்குக் கொண்டு வந்து "யாரது" என்று வினவ அம்மான், "அது நான் தம்பி” என்றவாறு தன் தவறை உணர்ந்து 'ஹெல்மெட்'டைக் கழற்றினார்.
பொன்னம்மானைச் செல்லமாகக் கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க, "அம்மானைக் காணவில்லை" என்று, விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந் திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். "டேய் அம்மானுக்கு வெடிவிழுந்திட்டது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரொலித்தது; எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.
வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.
லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட, றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.
வான் புறப்படத் தொடங்க, மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது எமக்கு.
செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த, வான் எமது முகாம் நோக்கிப் பறக்கிறது.
-கேணல் கிட்டு
-களத்தில்

.jpeg
)





கருத்துகள் இல்லை