வடக்கு ஆளுநரின் விவசாய திட்ட பணிப்பு..!📸
கடந்த ஆண்டு மாகாண சபை நிதியுடனும்- விவசாயிகளின் நேரடிப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட நவீன விவசாய முறைத் திட்டங்கள் பெருமளவு வெற்றியைத் தந்துள்ளமையால், அத்திட்டங்களைத் தொடர்ந்தும் விரிவாக முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) காலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் விரிவாக ஆராயப்பட்டன. அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்கள் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகள் தனித்தனியே மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்குரிய தொடர் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடப்பாண்டில் நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் செயன்முறை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. குறித்த இழப்பீட்டுச் செயன்முறையானது பயனாளிகளின் பெயர்விவரப் பட்டியல் பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டே, வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மத்திய விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தபோது, மாகாண விவசாயத் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்களும் இக்கலந்துரையாடலில் சபைக்குத் தெரியப்படுத்தப்பட்டன. அத்துடன், விவசாய ஆராய்ச்சிப் பிரிவால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக, கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்த 'தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின்' நடப்பாண்டுக்குரிய வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திணைக்கள மட்டத்தில் நிலவும் ஆளணி வெற்றிடங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் தொடர்பான நிர்வாக விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இவ்விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் பிரதிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



.jpeg
)





கருத்துகள் இல்லை