தமிழ்நாட்டில் 'தமிழ்த்தேசியம்' பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் எந்தக் கட்சியும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.-வி.சபேசன்!

 


உலகில் தமிழர்களுக்கு என்று இரண்டு நிலப்பரப்புகள் உள்ளன. ஒன்று தமிழ்நாடு, மற்றது தமிழீழம். தமிழீழம் எதிரிகளால் வீழ்த்தப்பட்டுவிட்டது; தமிழ்த் தேசியச் சிந்தனை முறியடிக்கப்பட்டு, தமிழீழமானது இலங்கைத் தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டது.


ஓரளவு உரிமைகளோடு எஞ்சியுள்ள தமிழர் நிலமாகத் தமிழ்நாடு திகழ்கின்றது. ஆனால், அதுவும் எதிரிகளால் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, இந்தியாவில் ஒற்றை ஆட்சிமுறையைக் கொண்டுவர வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செயல்படுகின்ற சக்திகள் இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கின்றன.


தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையைப் புகுத்த வேண்டும், தமிழ்நாட்டின் சட்டமன்ற அதிகாரத்தை முடக்க வேண்டும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்மறை நோக்கங்களோடு இந்தச் சக்திகள் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்கு இந்துத்துவச் சக்திகள் பல திட்டங்களைத் தீட்டியுள்ளன. திருப்பரங்குன்றத்தில் அதற்கான முயற்சிகளை நாம் நேரடியாகப் பார்த்தோம். இந்தியா முழுமைக்கும் செய்தது போன்று, தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசு நிறுவனங்களில் இந்துத்துவவாதிகள் ஊடுருவ வைக்கப்படுகின்றார்கள். நீதித்துறையில் கூட அவர்கள் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கியுள்ளார்கள்.


பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்ற ஸ்டாலினால் மட்டுமே இந்தச் சக்திகளை எதிர்கொள்ள முடியும். வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகள் மொத்தமாக விற்கப்படும்; டெல்லி நீட்டும் இடங்களிலெல்லாம் கையெழுத்து வைக்கப்படும்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை அடிமைப்படுத்துவதற்கு டெல்லி எடுத்த முன்னெடுப்புகளை எதிர்த்து, தமிழ்நாட்டில் 'தமிழ்த்தேசியம்' பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் எந்தக் கட்சியும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. திமுகவே பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திப் பல உரிமைகளை மீட்டெடுத்தது.


இந்தத் தேர்தலைத் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான மோதலாகவே நான் பார்க்கிறேன். தமிழ்நாடு வெல்ல வேண்டும்; ஸ்டாலின் தொடர வேண்டும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.