தகாத உறவுக்காக கணவனைக் கொன்ற மனைவி!!

 


இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில்,

மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள கோண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்கிருஷ்ணா. இவரின் மனைவி 27 வயதான பிரியங்கா புரோஹித். பிரியங்காவுக்கு 15 வயதிலேயே தேவ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இரவில் வீட்டில் கணவருடன் பிரியங்கா இருந்த நிலையில் திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்துள்ளனர். வந்த வேகத்தில் கணவன், மனைவி இருவரையும் தாக்கிய மர்ம நபர்கள் தனித்தனி அறையில் அடைத்துள்ளனர்.

தேவ்கிருஷ்ணாவை கொடூரமாக தாக்கிய கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. மற்றொரு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிரியங்கா கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்களிடம் கொள்ளையர்கள் வீடு புகுந்து தனது கணவனை கொலை செய்துவிட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றதாக கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.

விரைந்து வந்த பொலிஸார், தேவ்கிருஷ்ணாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் மர்ம நபர்கள் திட்டமிட்டு வேண்டும் என்றே தேவ்கிருஷ்ணாவை தலையில் பலமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அத்துடன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. நகை, பணத்திற்காக தனது கணவன் கொல்லப்பட்டதாக கூறிய மனைவி பொலிஸாரின் விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

அதில் 27 வயதான பிரியங்கா, கமலேஷ் என்பவருடன் முறை தவறிய உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனை தீர்த்துக்கட்டி விட்டு ரகசிய காதலனை கரம் பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடகம் போட்ட இளம்பெண், தனது ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.