பிராஸ்ஸில் புதிய நடைமுறை!!

 


பிரான்ஸ் (France) நாட்டில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டப் பரிந்துரைகள், அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

பிரான்சின் செல்வாக்கு மிக்க அரசியல் வார இதழான Le Journal du Dimanche வெளியிட்டுள்ள விசேட நேர்காணலில், அந்நாட்டு நீதியமைச்சரான Gérald Darmanin பல முக்கிய குடியேற்றக் கட்டுப்பாட்டு யோசனைகளை முன்வைத்துள்ளார்.

இதன்படி, சட்டபூர்வ குடியேற்றத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

குடியேற்ற நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பதற்கும், உள்நாட்டு கட்டமைப்புகளை சீர்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், கட்டுமானம், உணவகங்கள் மற்றும் சுகாதாரத் துறைகள் போன்றவை பெருமளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், பிரான்சில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் “Regroupement Familial” எனப்படும் குடும்ப இணைப்பு உரிமையை ரத்து செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மனித உரிமை மீறலாகும் என்றும், ஐரோப்பிய மனித உரிமைச் சட்டங்களுக்கு முரணானது என்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஆண்டுதோறும் பிரான்சில் அனுமதிக்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் நிர்ணயிக்கும் வகையில் “ஒதுக்கீட்டு முறை” ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரான்சின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.