யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முக்கிய செயற்றிட்டம்!!
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழுக்கையாற்றின் வழித்தடங்களிலுள்ள குளங்களை, நீர்த்தேக்கங்களை பாதுகாப்பதும் பொறுப்பாக மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள ஆளுகையை நோக்கி செல்வது தொடர்பில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த வட்டார உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்திட்டத்தின் நான்காவது கட்டமான களப்பயணமும் உரையாடலும் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கு பிரதேசபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் குளத்தடியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களும், கிராம மக்களும் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர்.
பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இக்களப்பயணத்தில் வலிகாமம் பிரதேசத்தின் அடையாளமாக விளங்கும் பருவகால ஆறான வழுக்கையாறின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்கும் ஆற்றலுள்ள பொறுப்பானவர்களான கிராம அபிவிருத்தி சங்கங்கள், அரச அலகுகள், அறிஞர் குழுக்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து அவர்களின் பாரம்பரிய செயற்பாட்டு அறிவையும், அதனோடிணைந்த அனுபவங்களையும் பெற்று மக்கள் அமைப்புகளை வலுப்படுத்த்தி வழுக்கையாற்றை உயிர்ப்பிக்கும் நோக்கிலாக அமைந்திருந்தது.
வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் வழுக்கையாற்றின் வழித்தடங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகளான வறுத்தலைவிளான் குளம், சுழுவில் குளம், பினாக்கை குளம், கந்தரோடைக் குளம், சீரணி மதவு, முதலியார் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு வழுக்கையாற்றின் தொடர்ச்சியையும், அதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினையும், அவற்றின் புவியியல் அமைவிடங்களையும், அதன் சுற்றுலா முக்கியத்துவங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
இறுதியாக 6.30 மணியளவில் அராலிப்பாலத் தடுப்பணையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தங்கள் பல்வேறு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வழுக்கையாறு தொடர்பில் பல்வேறு நேரடி அனுபவங்களை இக்களப்பயணமூடாக பெற்றுக் கொண்டதாகவும், பிரதேச எல்லைகளை கடந்து செல்லும் முழுப்பிரதேசத்துக்குமான வளம் இது என்பதனால் கூட்டாக ஏற்படுத்த வேண்டிய உயர்மட்ட முடிவுகள், ஒதுக்கீடுகள் போன்றவற்றின் போது சபை அமர்வுகளில் ஒரேகுரலில் ஒன்றாக நின்று குரல் கொடுத்து வழுக்கையாற்றையும் அதன் உயிர்ப்பல்வகைமைகளையையும் பொறுப்போடு பாதுகாப்போம் எனவும் உறுதியுடன் தெரிவித்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை