முள்ளிவாய்க்கால்!!
மூன்று மணி இருக்கும் சூரியனின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை, ஒரு கையில் இரண்டு வயது குழந்தையோடும், மறுகையில் சின்ன தண்ணீர் போத்தல், சின்ன ஒரு பை இவற்றோடும் நிற்கிறேன். கால்கள் இரண்டும் இழுத்து இழுத்து வலிக்கிறது.
காலையில் ஆறு மணிக்கு முள்ளிவாய்க்கால் கரைக்கு வந்து நின்றோம், போகவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை, பிள்ளைகளோ பசிக் கொடுமையில் அழத்தொடங்கி விட்டார்கள், கொடுப்பதற்கு கையில் ஏதுமில்லை, வாங்குவதற்கு காசும் இல்லை, வேறு வழியின்றி மீண்டும் நாங்கள் இருந்த இருப்பிடத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டோம்.
எங்களுடைய பதுங்கு குழிக்குள் வைத்து விட்டுப்போன புளுங்கல் நெல்லுப்பை அப்படியேதான் இருந்தது, முதல்நாள் காலையில் ஒரு அண்ணா விற்க கொண்டு வந்த நெல்லு 5 கிலோவை வாங்கி வைத்திருந்தோம், கையிலிருந்த காப்பு இரண்டை விற்றுவிட்டு இந்த நெல்லையும் பனடோல் ஒரு அட்டையும் கடலைப்பருப்பு கால் கிலோவும் சீனி அரை கிலோவும் வாங்கிய வரலாறு முள்ளிவாய்க்காலில் மட்டுமே பதிவானது.
பதினேழாம் திகதி விடிய வெள்ளண,'"எல்லாரையும் போகட்டாம்' என்று சொன்னதும், வாங்கின பொருளுகளை எல்லாம் தூக்கி அவரவர் பதுங்குகுழிக்குள்ள வைச்சிட்டு எல்லாருமா வெளிக்கிட்டம். கொஞ்சம் தள்ளி இருந்த சித்தப்பா மட்டும் வரவில்லை,
'மகன் வந்த பிறகுதான் நான் வெளிக்கிடுவன், இல்லாட்டி முள்ளிவாய்க்காலிலையே எங்கட மூச்சு போகட்டும்' எண்டு சொல்லிப்போட்டார். அவருடைய ஒரு மகன் மாவீரர், மற்ற மகன் களத்தில் நின்றார்.
வேற வழி இல்லாமல் மற்ற ஆக்கள் எல்லாரும் போவம் எண்டு வெளிக்கிட்டதுதான்.
அரக்க பரக்க ஓடிஓடி அங்க போனா, எறிகணைதான் வந்து விழுதே தவிர, வேற ஒரு வழியும் திறக்கவே இல்லை, மக்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டுவதும் அந்த இடத்தில் எறிகணை வீசுவதும் நடந்து கோண்டிருந்தது.
பதினொரு மணி வரைக்கும் நிண்டு பாத்திட்டு, பிள்ளையளுக்கு ஏதாவது குடுக்க வேணுமே எண்ட எண்ணத்தில பதுங்கு குழிக்கே திரும்ப வந்திட்டம்.
பக்கத்து கூடாரத்து அக்கா, எங்களோட தான் வந்தவா, வந்து, பிள்ளையளை பதுங்கு குழிக்குள்ள விட்டுப்போட்டு அவவும் கணவரும் அடுப்பு மூட்ட எண்டு வெளியில வர, வந்து விழுந்த எறிகணைச் சிதறல், முன்னால வந்த அவவின்ர காலை அறுத்து கொண்டு போட்டுது,
"ஐயோ... மலர்... மலர்..." அந்த அண்ணான்ர ஓலம் கேட்டு ஓடிப்போனா ரத்த வெள்ளத்தில மலர் அக்கா, உடனே, பக்கத்தில நிண்ட உழவு இயந்திரப் பெட்டியில அவவையும் அந்த அண்ணாவையும் பிள்ளையளையும் ஏத்தி அனுப்பி போட்டு, வந்து, அந்த புளுங்கல் நெல்லை உரல்ல குத்தி, அரிசியாக்கி, குழைய சோறு காய்ச்சி, கடலைப்பருப்பை வறுத்து, சின்ன பிஞ்சு மாங்காய், ரெண்டு செத்தல், உப்பு வைச்சு சம்பல் மாதிரி அரைச்சு, பினைஞ்சு பிள்ளையளுக்கு தீத்திப்போட்டு, நாங்களும் கொஞ்சம் சாப்பிட்டு கிடந்த சோறு கொஞ்சத்தை உப்பு தண்ணி தெளிச்சு, கட்டி எடுத்து கொண்டு தான் திரும்ப போனனாங்கள்.
நடந்து போன களைப்பு, தண்ணித்தாகம் எண்டால் சொல்லத்தேவை இல்லை,
கொண்டு போன தண்ணியும் முடிஞ்சிது, எறிகணை வேற கூவிக்கூவி வந்து விழுந்தபடி,
மகன் தண்ணி, தண்ணி எண்டு கேக்க, ஒரு இடத்தில கிடங்கு மாதிரி இருந்தது, சரி அதில வறாண்டி, சேத்து தண்ணியையாவது அள்ளி, அடைய வைச்சு குடுப்பம் எண்டு, கையை வைச்சால்,
கையில வந்தது ஒரு மனித உடம்பில் ஒட்டியிருந்த உடுப்பு.
குழறிக்கொண்டு வந்து, வெளிய நிக்க, எறிகணை அதிகமா வந்து, பக்கத்தில விழுந்து கொண்டிருக்கிது.
சரி, பக்கத்தில இருக்கிற பதுங்குகுழிக்குள்ள போவம் எண்டு ஒடிப்போய் உள்ள இறங்கினால் இறந்த உடம்புகள் ரெண்டு அதுக்குள்ள,
திரும்ப அலறி அடிச்சு ஓடி வெளியில வந்தம்....
வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, மிக மெலிந்த தோற்றத்தில், இருந்த மூத்த மகன், வாழ்வா சாவா என்கிற நிலையில் இருந்தான், தண்ணீர் தான் அவனுடைய உயிராகாரமாக இருந்தது. நிற்கவே முடியாத நிலைக்கு வந்து விட்ட அவனை, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதே பெரிய பிரார்த்தனையாக இருந்தது.

.jpeg
)





கருத்துகள் இல்லை