ஈழத்தாய்!!

 



இதயக்கதவுகளை

அழுத்தி அழுத்தி

வீணர்கள் விளையாடிய போது

உயிர் துடித்தாய்


காலம் ஒருநாள் 

துயர் துடைக்கும் என்ற

உன் காத்திருப்பின் 

பலனாக


காலதேவன் பிறப்பித்த

கரிகால நாயகன்

ஞாலத்தில் உன் 

முகவரி கூறிட


கோலத்தமிழின்

கொதிப்பு அடங்கி 

கொஞ்சம் நீ

களிப்பு கொண்டாய்


உயிர் தனை உனக்காக

உவந்தளித்த பிள்ளைகளின் 

உயிரென நீயானாய்

ஈழத்தாயே!


வரியோடு கடலோடு

வானோடு நின்று 

புதுக்கீதம் இசைக்க

புன்னகைத்திருந்தாய் சிலகாலம் 


கந்தகம் சுமந்து 

கரும்படை

போகையில்

நெஞ்சு வேகி

நெருப்பிடை துடித்தாயே


மறவராய் அவர் உன்

மடிதனில் விழுந்திட 

கும்பி கொதித்து

கதறித்துடித்தாயே


உன் பிள்ளைகள் 

உயர்வு கண்டு

அவனி எல்லாம் 

அச்சம் கொண்டதம்மா


உலகமே சேர்ந்து 

ஒன்றாகி வந்து 

வாரிச்சுருட்டி

வழித்துப் போட்டதம்மா 


முள்ளிவாய்க்கால் 

மணல் படுக்கையில்

முகவரி தொலைத்து நீ

முகாரி இசைத்தாயே


அபலைகளாய்

நிர்வாணிகளாய்

 அலைந்து திரிகையில் 

அழுது புரண்டாயே


வீரப்புதல்வர்கள்

விதையான தீரர்கள் 

காலத்தின் கோலத்தால்

கலைந்தே போயிட


ஊனுருகி

உயிர் கருகி

உணர்விழந்து

மனம் கொதித்தாய்


வீரத்தின் விழுதுகள்

வீணே உலாவிட

 அடுத்த தலைமுறை 

தானே மாண்டிட


மாண்பு கொண்ட இனம்

மெல்லச் சிதைகிறது

தமிழனின் தனித்துவம்

தாழ்ந்து நசிகிறது


தாயே!!

ஈழத்தாயே!!

உன் மனத்துயரை 

என்னவென்று கூறிட?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.