ஏனென்றால்....
சிறகு துண்டிக்கப்பட்ட
ஒரு பறவையாய்
உன் கிளை அமர்ந்தவள்
நான்.
என்னுள்ளே
தேங்கிக்கிடந்த
ஓராயிரம் ஏக்கங்களை
உன்னுள்ளே தேடிக்கொண்டேன்.
இதமான வார்த்தைகளுக்காகவும்
இனிமையான பற்றுதலுக்காகவும்
மனம் ஏங்கும் போதெல்லாம்
உன்னிடம் வந்தமரும்
என் எதிர்பார்ப்புகள்
என் மொத்த நேசமும்
நீ என நினைத்து
என்னுள்ளே
உன்னைப் புதைக்கும் பிரயத்தனங்களில்
தோற்றுப்போய் விட்டேன்.
எனக்காக
என்னை நேசிக்க
ஒரு ஜீவன் வராதா என்று
ஏக்கம் கொண்டதென்னவோ
உண்மை தான்.
அந்த ஏக்கங்களை
உன் மீது திணிப்பது
நியாயமில்லையே,
நான் புரிந்து கொண்டேன்,
என் காதலின் கர்ஜனை
உனக்கு
எரிச்சலூட்டியிருக்கலாம்.
அச்சம் தந்திருக்கலாம்.
காதலென்பது என்ன,
கருத்தொருமித்து
கலவி கொள்வது மட்டுமா,
இல்லவே இல்லை.
அது
வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டது.
வாதங்களுக்குள்
அடங்காதது.
நீயும் நானுமென்பது
நிறங்களற்ற வெண் பொழுது,
காலம் - அதில்
வர்ணங்களை வரைந்தாலும்
அப்படியே கடந்தாலும்
நான் ஏற்றுக்கொள்வேன்.
ஏனென்றால்
நான்
உன்னைக் காதலிக்கிறேன்....

.jpeg
)





கருத்துகள் இல்லை