இலங்கை பிரஜைகளுக்கு சிங்கப்பூர் விடுத்துள்ள அறிவிப்பு!!

 


சிங்கப்பூரில் விசா அல்லது தங்குமிடம் அனுமதிக்கும் கால எல்லையை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபையினால் (ICA) அமுல்படுத்தப்படும் விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பதாகக் கண்டறியப்படும் நபர்களுக்கு எதிராக பின்வரும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படல் மற்றும் வழக்குத் தொடரப்படல். அபராதங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படல். தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்படல். கடுமையான அல்லது நீண்ட கால சிறைத்தண்டனை வழங்கப்படல்.

அத்துடன், விசா காலாவதியான பிறகும் தங்கியிருப்பவர்கள் உட்பட, சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் எந்தவொரு நபருக்கும் அடைக்கலம் கொடுப்பதோ அல்லது இடமளிப்பதோ சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, சிங்கப்பூரில் தங்கியிருக்கும் அனைத்து இலங்கை நாட்டினரும் தங்களின் விசா அல்லது அனுமதிச் சீட்டின் செல்லுபடியாகும் காலத்தை முறையாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறும், நீடிப்பு அல்லது புதுப்பித்தல்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே விசா காலம் முடிந்த பின்பும் தங்கியிருப்பவர்கள், தாமதமின்றி குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபையை (ICA) தொடர்புகொண்டு தங்களது நிலையை முறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இது மேலும் ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளைக் குறைத்துக்கொள்ள உதவும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.